ஆறுவேளை சாப்பிடுங்கள்…காபி, பால் பருகுங்கள் ! நீரிழிவைக் கட்டுப்படுத்த சூப்பர் பிளான்!!(மருத்துவம்)
அண்மையில் போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பனில் ஒரு மருத்துவ மாநாடு நடைபெற்றது. நீரிழிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் European Association for the Study of Diabetes என்கிற அமைப்பு நடத்திய இந்நிகழ்வில் மூன்று முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இவை நீரிழிவாளர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க வழிவகுக்கும் என்பதுதான் நல்ல செய்தி!
மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாக மாற்றியமையுங்கள்!
ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் நீண்ட காலமாக செய்துவந்த ஆராய்ச்சிகளின் பலன் இது. மூன்று வேளைக்குப்பதிலாக ஆறு வேளை சாப்பிட்டாலும், அதே அளவு கலோரி உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
நமக்காக வரையறுக்கப்பட்ட கலோரிகளின் அளவை அதிகரித்துக்கொள்ளாமல், அந்த உணவுத்திட்டத்தை ஆறு வேளைகளுக்குப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அப்படி செய்கிறவர்களுக்கு ரத்த சர்க்கரையில் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும்.
ப்ரீ-டயபடிக் நிலையிலிருக்கிற ஆரம்ப நிலை நீரிழிவாளர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும், டைப் 2 வகை நீரிழிவாளர்களுக்கும் 6 வேளை உணவுத்திட்டம் உகந்தது. இம்முறையைப் பரிசோதித்துப் பார்த்ததில், கிளைகேட்டட் ஹீமோகுளோபின் மற்றும் குளுக்கோஸ் அளவு கணிசமாகக் குறைந்தது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக வயிறு நிரம்பியிருப்பது போலவே இவர்கள் உணர்ந்தார்கள். மிக முக்கியமான விஷயம்… 24 வாரங்களில் இவர்களின் எடை அதிகரிக்கவில்லை!
வாழ்நாளை அதிகரிக்க காபி குடியுங்கள், பெண்களே!
பதினொரு ஆண்டுகாலம் மூவாயிரம் நீரிழிவாளர்களிடம் பரிசோதனை செய்ததில் காபி ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. ஆம்… பெண் நீரிழிவாளர்கள் காபி பருகுவதன் மூலம் தங்கள் வாழ்நாளை நீடிக்க முடியும் என்பதே அது! நீரிழிவோடு வாழும் பெண்கள் முன்கூட்டியே மரணமடைவதைத் தடுக்கும் சக்தி காபியிலுள்ள காஃபினுக்கு உள்ளது.
இதய நோய்கள், கேன்சர் உள்பட பல்வேறு பிரச்னைகளின் அபாயத்திலிருந்து காக்கும் வல்லமையையும் காபி தருகிறது என்பது இந்த ஆச்சரிய ஆய்வின் முடிவு. தினம் ஒரு கப் காபி (100 மில்லிகிராம் காஃபின்) பருகும் பெண்களுக்கு மரண அபாயம் 51 சதவிகிதம் குறைகிறது. இரண்டு கப் காபிக்குப் பலன் 66 சதவிகிதம்! இதே வேளையில், தேநீர் பருகும் பெண்களின் கேன்சர் அபாயம் 80 சதவிகிதம் குறைகிறதாம். காபியா, டீயா – நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!
பாலும் பலம் தரும்!
இங்கிலாந்தில் 30 முதல் 65 வரை வயதுடைய 12 ஆயிரம் நபர்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு பாலுக்குப் பெருமை சேர்க்கிறது. குறைந்த கொழுப்புடைய பால் உட்கொள்வோருக்கு வயிற்றுப்பகுதியில் சீரான அளவிலேயே கொழுப்புப் பரவுகிறது. இது உடலின் கொழுப்புப் பரவலையும் சீராக வைக்கிறது. இதனால் டைப் 2 நீரிழிவு போன்ற வளர்சிதைமாற்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. இதயநோய்களிலிருந்தும் தப்பிக்க முடியும். கொழுப்பு நிறைந்த பால் பருகுபவர்களுக்கும், வெண்ணெய், பாலாடைக்கட்டி, யோகர்ட், ஐஸ்க்ரீம் போன்ற பால் பொருட்களை உட்கொள்வோருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்க!
Average Rating