வயோதிகத்தால் வாட வேண்டியதில்லை!!(மருத்துவம்)
வயதும், உடலும் ஒத்துழைக்கிற வரையில் உலகமே காலடியில் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், லேசாக நரை தோன்றி, உடல் சிறிது தளர்ந்தாலே மனதின் தைரியம் குறைந்துவிடும். பணிரீதியான ஓய்வும், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க நேர்வதும், தனிமை உணர்வும் இன்னும் கலவரப்படுத்திவிடுகிறது.
இப்படி இல்லாமல் முதுமைப் பருவத்தை இனிதாக்க என்ன வழி? முதியோர்கள் அனுபவிக்கிற சிக்கல்கள் என்ன? அவர்களை குடும்பத்தினர் எந்த வகையில் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்?- மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டோம்…
‘‘முதியோரின் முதல் தேவையே அன்பும், அரவணப்பும்தான். வெறுமனே உணவும், உடையும், உறைவிடமும் தருவது மட்டுமே அவர்களுக்குப் போதுமானது அல்ல. முதுமைகால தனிமையால் பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களின் ஆதரவோடு சமூகம் சார்ந்த பிணைப்புகளும் முதியோருக்கு அவசியமாகிறது. இதன்மூலம் கிடைக்கிற மனநிறைவே அவர்களின் எதிர்பார்ப்புகளில் முதன்மையானதாக இருக்கிறது.
நல்ல உடல் ஆரோக்கியமும், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான பொருளாதார வசதியும் அவர்களுடைய அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. முதுமையில் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பல பிரச்னைகள் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது.
உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவால் நோய்வாய்ப்பட்டு பலவீனமாதல், இரவு தூக்கத்தின் அளவு குறைந்து பகல் தூக்கத்தின் அளவு அதிகரித்தல், கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் குறைதல் என்று புலன்களின் உணர்வுகள் குறைதல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.
இதுபோன்ற புலன்களின் உணர்வு குறைவால் பல சந்தேக உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்தேக உணர்வு உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்பட வழிவகுக்கிறது. முன் மூளையில் ஏற்படும் பிரச்னையால் மூளை தேய்மான நோய் ஏற்படுகிறது.
இந்நோயால் ஞாபக மறதி, குணம் மாறுதல், சுய உணர்விழத்தல், பிறரை அடையாளம் காண முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அதீத பயத்தால் மனப்பதற்ற நோய் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளை நீண்ட நாட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், ஒரு நிலையில் அதிக விரக்தி ஏற்பட்டு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுபோன்ற சூழலில் சிலர் தனிமையை விரும்புவது மற்றும் சொத்துக்களை உயில் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். முதுமையில் எந்த ஆதரவுமின்றி, வாழ்வதற்கே வழியின்றி இருப்பவர்களில் சிலர் விரக்தியின் விளிம்புக்குச் செல்வதால் தற்கொலை முடிவுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
40 வயது வரை தானாகவே முடிவு எடுக்கும் நிலையில் இருந்தவர்கள், அந்த பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் ஒப்படைக்கிற நிலைக்கு மாறுகிறார்கள். இப்படி 60 வயதுக்கு மேலாகிறபோது பிறருடைய முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.
இப்படி முதுமையை நோக்கிச் செல்பவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு வேலையின்றி, பணமின்றி, உடல்நலம் குறைகிற சூழல் ஏற்படுகிறது. அப்போது தன் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உண்டாகிறது. இதுபோன்ற தருணங்களில் அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் பறிபோவதோடு வாழ்வின் அர்த்தமும் சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது.
முதுமையில் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடும், பாதுகாப்பு உணர்வும் குறைகிறது. இதுபோன்ற காரணங்களால் சிலர் தனது தேவைகள், எதிர்பார்ப்புகள் மட்டுமின்றி உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் கூட தன் பிள்ளைகளிடமோ, உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள். அந்த பிரச்னைகளை தன் மனதுக்குள்ளேயே வைத்து குழப்பிக்கொண்டு மன அழுத்தத்தை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்’’ என்கிற ராஜேஷ் கண்ணன், முதியோர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றியும் வழிகாட்டுகிறார்.
‘‘வயது அதிகரிக்கிறபோது அதற்கேற்ற சரியான அனுபவங்களைப் பெற்று வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு நகர வேண்டும். அவரவருக்குக் கிடைக்கிற அனுபவங்களின் அடிப்படையிலேயே வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள் அமைகிறது. தான் பெற்ற அனுபவங்கள் மூலம் தன்னை மனதளவிலும், உடலளவிலும் பலப்படுத்திக் கொள்பவர்கள் மீதமிருக்கும் வாழ்வை தைரியமாக எதிர்கொள்வதோடு, சந்தோஷமாகவும் வாழ முடியும்.
முதுமை காலத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு நல்ல நட்பு வட்டமும், சமூக உறவுகளும் அவசியம். பேரன், பேத்திகளோடு நேரம் செலவிடுதல், செல்லப்பிராணிகள் வளர்த்தல், புத்தகங்கள் படித்தல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வற்கு யோகா, உடற்பயிற்சிகள் செய்வது, வீட்டிலுள்ள வேலைகளை பிறரோடு பகிர்ந்து செய்வது, பயனுள்ள பொழுது போக்கு அம்சங்களை பழக்கப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதால் தனிமை உணர்வைத் தவிர்க்கலாம்.
முதுமை காலத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்னரே சேமிப்புகளை உறுதி செய்து கொள்வது நல்லது. முதியோருடைய எதிர்பார்ப்புகளை அவர்களுடைய பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று அதிகளவு நம்பிக்கை கொள்கிறார்கள்.
சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகிறபோது அதற்கான சரியான காரணங்களை புரிந்துகொள்வது நல்லது. தற்போதைய மருத்துவத்துறை வளர்ச்சி முதுமையில் வாழ்நாளை அதிகரிப்பதற்கும், உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கிறது.
தனது உடல் மற்றும் மனநிலையை உறுதியாக வைத்துக்கொள்பவர்கள் 70 வயதுக்குப் பிறகு மாரத்தானில் ஓடுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்வதற்கு எல்லா வயதினருக்கும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அவசியம். இவை அனைத்துக்கும் முதன்மையாக பெற்றோரும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொண்டாலே, முதுமையிலும் இனிமையாக, மனநிறைவாக வாழலாம்.’
Average Rating