எதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்!!(மருத்துவம்)
எப்போதும் சோகமான முகம், அவநம்பிக்கையான வார்த்தைகள், மற்றவரை குறைகூறும் பேச்சு அல்லது எதிலும் எதிர்மறையான அணுகுமுறை என அன்றாட வாழ்க்கையில் பல எதிர்மறையான நபர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
நாம் உற்சாகமாக வேலையை ஆரம்பித்தாலும், இத்தகையவர்களின் செயல்கள் நம்மையும் சோர்வடையச் செய்துவிடும். முன்னோக்கி பயணிக்க நினைக்கும்போது நம்மையும் அப்படி யோசிக்க வைத்து முடக்கிவிடும்.
யாரோ ஒருவராக இருந்தால் அத்தகையவரை இனம்கண்டு ஒதுக்கிவிடலாம். ஆனால், நம் நண்பராகவோ, உடன் பணியாற்றுபவராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருந்தால் அவர்களை எப்படி சமாளிப்பது? இதோ சில வழிகள்…
மனிதநேயத்துடன் அணுகும்முறை தன்னுடைய சொந்த பிரச்னைகளைப் பற்றி உங்களோடு பேசவந்தால், அவர்களுடைய உணர்வுகளை முழுவதுமாக புரிந்து கொள்ள நீங்கள் முற்பட வேண்டும்.
எல்லா நேரங்களிலும் ஒருவர் எதிர்முறையாக சிந்திக்க மாட்டார் என்பதால், மனிதநேயத்துடன் அவருடைய நிலையிலிருந்து பிரச்னையை அணுகலாம். அப்படி செய்வதால் ஒருவேளை அந்த சூழலின் தன்மையையே மாற்றி நல்ல தீர்வு கூட கிடைக்கலாம்.
சோகமாக இருக்கும் ஒருவர் எதிர்பார்ப்பது அடுத்தவரின் நம்பிக்கையான வார்த்தைகளையே. அப்போது, ‘எல்லாம் சரியாயிரும்’ என்று நீங்கள் சொல்லும் எளிமையான வார்த்தைகள் கூட அவருக்கு ஆறுதலை கொடுக்கும். ஆம்… உங்களின் மனிதநேயம் மிக்க அணுகுமுறை அந்த நபரின் நேர்மறை அணுகுமுறைக்கு வழிவகுக்கும்.
அனாவசிய அறிவுரை வேண்டாம் உங்களிடம் தானாக வந்து ஒருவர் அறிவுரை கேட்காத வரையில், நீங்களாகவே பிரச்னையைத் தீர்ப்பதற்கான அறிவுரைகளை சொல்ல முற்பட வேண்டாம். எதிர்மறையாளர்களில் சிலர் தங்களுடைய பிரச்னைகளில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள். உங்களிடம் தன்னுடைய பிரச்னையை பகிர்ந்துகொள்ள வந்தால் மட்டுமே, உரையாடலைத் தொடங்கலாம். எனவே,எப்போதும் கேட்காத ஆலோசனைகளை வழங்க வேண்டாம்.
அதற்காக அவரை அப்படியே கைவிட்டுவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவருடைய நடவடிக்கைகளை வெறுமனே கவனித்துக் கொண்டே, அவரின் முன்னேற்றங்களையும் அமைதியாகக் கண்காணிக்கலாம். பேச்சுவாக்கில் நம்முடைய உதவியோ, ஆலோசனையோ அவருக்கு தேவைப்படுகிறதா என்பதை உறுதிசெய்த பிறகு அதன்பின் அவரை நெருங்குங்கள்.
சில நேரங்களில் வெறுமனே தன்னுடைய கஷ்டங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள நினைக்கலாம். அப்போதும் காது கொடுத்து கேட்பதுடன் மட்டுமே நின்றுவிடுங்கள். நீங்களாகவே உங்கள் அட்வைஸ் மழையை பொழிய வேண்டாம்.
சந்தோஷத்திற்கான சாவி எதிர்மறையாளர் எப்போதுமே சோகமாகவே இருப்பார் என்று முடிவு செய்துவிடுவது தவறு. அவரையும் பல விஷயங்கள் சந்தோஷப்படுத்தக்கூடும். அவருடைய சந்தர்ப்ப சூழலின் காரணமாக மகிழ்ச்சியடையக் கூடிய விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கலாம். எனவே, எப்படி அவரை சந்தோஷப்படுத்த முடியும், என்ன சொன்னால் அல்லது செய்தால் சந்தோஷப்படுவார் என தெரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் அவரை மகிழ்ச்சிப்படுத்தலாம். அத்தகைய மகிழ்ச்சித் தருணம் உங்கள் இருவருக்குமே நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும்.
கவனம் அவசியம்
ஒரு எதிர்மறை நபரின் பேச்சை உற்று கவனிப்பது முக்கியமானது. ஏனெனில், தான் சொல்ல நினைத்த விஷயத்தை முழுவதுமாக அவர் வெளிப்படுத்த மாட்டார். சில நேரங்களில் உள்ளுக்குள் சோகத்தை மறைத்து, வெளியில் அவர் சிரித்து பேசுவதுபோல காட்டிக்கொள்வார். ஆனாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவருடைய எதிர்மறை எண்ணம் வெளிப்படும்.
எனவே, வெளிப்படையாக பேசாத விஷயங்களைக் கண்டுபிடித்தால் அவருடனான உரையாடல் தருணத்தில் மேலும் நேர்மறையான விஷயங்களில் அவரின் கவனத்தை திசைதிருப்ப உதவும். நகைச்சுவை ணர்வுஎதிர்மறையாளர்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் நகைச்சுவை தேவைப்படுகிறது.
மன இறுக்கமான வாழ்க்கையை சிலர் தான் மட்டுமே சுமந்து கொள்ள முற்படுவார்கள். எதிர்மறை மனிதர்களை நம் வழியிலிருந்து விடுவிப்பதற்கு பதில், சந்தோஷப்படுத்தி, அவரையும் வெளிச்சத்துக்கு வர உதவலாம். அவ்வப்போது நகைச்சுவையாகப் பேசி சுற்றி இருப்பவர்களின் துயரங்களை மறந்து சிரிக்க வைக்கலாம். அது நெருங்கிய நட்பை வலுப்படுத்தும். இதன்மூலம் நாளடைவில் அவர்களும் நேர்மறையாளர்களாக மாறலாம்.
Average Rating