சீனா வழிக்கு வராவிட்டால் வர்த்தக போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி)
‘சீனாவுக்கு எதிரான வர்த்தக போரில் பின்வாங்க மாட்டேன்’ என கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால், ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை கடைபிடித்து வரும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு திடீரென வரியை விதித்தார். சீன பொருட்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி வரி விதித்தார். அதேபோல், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் கூடுதல் வரியை விதித்தார். இது உலக வர்த்தக போராக மாறியது. அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவின் 545 பொருட்களுக்கு 2.5 லட்சம் கோடிக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை பெருமளவில் உயர்த்துவதாக எச்சரித்தன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 15 லட்சம் கோடிக்கு கூடுதல் வரியை விதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால், சீன பொருட்களுக்கு 35 லட்சம் கோடி வரை இறக்குமதி வரி விதிக்க வேண்டியிருக்கும். சீனா விருப்பப்பட்டால், நியாயமான ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இப்படி கூறுவதால், வரி விதிப்பிலிருந்து பின்வாங்குகிறேன் என்று அர்த்தமில்லை. பின்வாங்கவும் மாட்டேன். சீனாவைக் காட்டிலும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மோசமானவை. அவர்களின் நாட்டிலிருந்து காரை இங்கு அனுப்புவார்கள். ஆனால் நாம் நம் கார்களை ஏற்றுமதி செய்ய முடியாது. விளைபொருட்களை அனுப்புவார்கள், ஆனால், வாங்க மாட்டார்கள். அதற்கு காரணம், அவர்களின் விவசாயிகளை பாதுகாக்கிறார்கள். அப்படியென்றால் நம் விவசாயிகளின் கதி?
இவ்வாறு டிரம்ப் பேசினார்.
‘வடகொரியாவை நம்புகிறேன்’
அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக வடகொரியா உறுதி அளித்ததை தொடர்ந்து, அந்நாடும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாகி உள்ளன. இதற்கிடையே, வடகொரியா ரகசியமாக மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ‘‘அணு ஆயுதங்களை அழிப்பதில் வடகொரியா தீவிரமாக உள்ளதாகவே நான் நம்புகிறேன். அமெரிக்காவுடன் நல்லுறவையே விரும்புகிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிங் ஜான் உன் என்னிடம் உறுதி அளித்துள்ளார். அவரிடம் கைகுலுக்கி உள்ளேன். அதை அவர் அர்த்தமுள்ளதாக்குவார் என நம்புகிறேன்’’ என்றார்.
Average Rating