சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு !!
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:- ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் நன்றி’. இவ்வாறு பிரபு கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர், தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர், கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா. சிவாஜிகணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது பற்றி கே.ஆர்.விஜயா கூறியதாவது:-
‘நடிகர் திலகம்’ ஒரு கலைக்கூடம். 4 வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து, அனுபவம் பெற்றவர். அவர் நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகள், வித்தியாசமான வேடங்கள். நடிப்பு பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், அவர் நடித்த 10 படங்களை பார்த்தால் போதும். நூலகத்தில் விடை கிடைத்தது போல இருக்கும். அந்தளவுக்கு நடிப்புத்திறன் வேறு யாருக்கும் இருக்குமா? என்பது சந்தேகம். நடிப்புத்திறமை, அவருக்கு கடவுள் கொடுத்த வரம். அவருக்கு கிடைத்த மரியாதை கலைக்குடும்பத்துக்கு கிடைத்த மரியாதை. இவ்வாறு கே.ஆர்.விஜயா கூறினார்.
நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:- ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது என்று எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி தான். அவருடைய தமிழ் வசன உச்சரிப்பு வேறு எந்த நடிகருக்கும் வராது. அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை நடிகர்களுக்கு பெருமையான விஷயம். நான் ஒரு ரசிகையாக மட்டுமல்ல, ஒரு மகளாகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்களுக்கு அவர் ஒரு புத்தகம் மாதிரி. வருங்கால தமிழ் சந்ததிகளுக்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ராஜேஷ் கூறியதாவது:- ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது சந்தோஷம். அவருடைய சிலையை எடுத்ததால் வருத்தப்பட்ட எங்களை போன்ற நடிகர்களுக்கும், என்னை போன்ற ரசிகர்களுக்கும் இது ஒரு ஆறுதல். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல தியாகிகளின் வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் ‘நடிகர் திலகம்’.
பல தெய்வங்களின் வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சீனா, பாகிஸ்தான் போர்களின்போது நாட்டின் எல்லைக்கே சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி ராணுவ வீரர்களை சந்தோஷப்படுத்தி, நிதியும் திரட்டி கொடுத்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி கொடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ள மரியாதை பொருத்தமானது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியதாவது:- தமிழ் திரை உலகில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் நடிப்பு திறமையால் மக்கள் இதயங்களை வென்றவர் நடிகர் சிவாஜி கணேசன்.
அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ந்தேதி தேதியை அரசு விழாவாக கொண்டாடுவது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உலகெங்கும் வாழும் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் பாராட்டி வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவாஜி கணேசனின் பிறந்தநாள் (அக்டோபர் 1-ந் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது போன்று, சிவாஜி கணேசன் பிறந்தநாளை ‘கலை வளர்ச்சி நாள்’ என்று அறிவித்து கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating