நீட் தேர்வும் பெண் கல்வியும்…!!(மகளிர் பக்கம்)
நம் தமிழ் தாய்வழிச் சமூகத்தில் வேட்டை முதற்கொண்டு பொருளீட்டுவது, குடும்ப நிர்வாகம் உள்ளிட்ட உயர் பொறுப்புகள் அனைத்தும் பெண்களின் வசமே இருந்தது. படிப்படியாக ஆணாதிக்கம் மேலெழுந்து அவர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு போகப் பொருளாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அவர்களுக்கான முழுச் சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
அம்பேத்கர், பெரியார் போன்ற பலரின் போராட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே இன்று சமூகத்தில் பெண்களும் ஓர் அங்கமாக நடத்தப்பட்டு வருகின்றனர். கல்வியில் எப்போதுமே ஆண்களைவிட பெண்களே முன்னிலையில் இருக்கின்றனர். ஆண்டுதோறும் வெளியிடப்படும் பொதுத்தேர்வு முடிவுகளே இதற்கு சாட்சி. இந்த நிலையில் அவர்களின் கல்வி உரிமை மறைமுகமாக மறுக்கப்படுகிறது எவ்வாறு என விளக்குகிறார் கல்வி பாதுகாப்பு இயக்க ஆசிரியர் சிவகுருநாதன்…
“வேதகாலம் தொட்டே பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. சங்கக் காலத்தில் பெண் கல்வி சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதன் தொடர்கண்ணி அறுபட்டு போயுள்ளது. 20 ம் நூற்றாண்டில் பல சமூக இயக்கங்கள் பெண் கல்வியை முன்னிறுத்திப் பணி செய்தன. தமிழகம் போன்ற மாநிலங்கள் பெண் கல்வியில் உயரிய இடத்தைப் பெற்றன. பிற மாநிலங்களில் பெண்கள் கல்வியே கற்க முடியாமல் இருந்த போது தமிழகத்தில் முதல் பெண் மருத்துவரே உருவாகிவிட்டார். விடுதலைக்குப் பிறகும் இந்நிலை தொடர்ந்தது.
இந்நிலையை உலகமயத்திற்குப் பின் வந்துள்ள வலதுசாரி, தீவிர இந்துத்துவ மோடி அரசு நாட்டைப் பின்நோக்கித் தள்ளி வேதகாலத்துக்கு அழைத்துச்செல்லும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலொன்று நம்மீது திணிக்கப்படும் ‘நீட்’. குடும்பம், சமூகம், கல்வி நிறுவனங்கள் என எதிலும் பெண்கல்விக்கான சூழல் இல்லாதபோதும் பெண்கள் தங்களுடைய உறுதித்தன்மையால் இவற்றையும் தாண்டி சாதனை புரிந்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சி விழுக்காடு, அதிக மதிப்பெண்கள் ஆகியவற்றில் முதலிடத்தில் உள்ளனர். போட்டித்தேர்வுகளில் பெண்களது சாதனை அதிகம். விளையாட்டுத்துறைகளிலும் பெண்களது சாதனை அளப்பரியது. தமிழகத்து பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனைகளை நிகழ்த்தி வருவது சிறப்பான ஒன்று. தடைகளைத் தாண்டி உழைக்கும் மனவுறுதி முதன்மையானது. ‘நீட்’ தேர்வு கெடுபிடிகளை, குறிப்பாக பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் அவர்களது மனவுறுதியை குலைக்கும் நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.
கல்வி பொதுப்பட்டியலில் இருந்த போதும் மத்திய அரசு அதிகாரத்தை முற்றாகக் கைக்கொண்டு ‘நீட்’ போன்ற இந்தியத் தேர்வுகள் மூலம் சமூக நீதியையும் பெண் கல்வியையும் ஒருங்கே கேள்விக்குறியாக்கி வருகிறது. அலோபதி மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு இவ்வாண்டு முதல் ஆயுஷ் (சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம்) படிப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் பொறியியல், இளங்கலை படிப்புகளுக்கு போட்டித்தேர்வு முறை அமலாகும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் போட்டித்தேர்வுகளை மத்திய அரசு தனது கல்வி வாரியப் பாடத்திட்டம் (CBSE) மூலம் நடத்துவது சமூக அநீதி மட்டுமல்ல; நமது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும் கூட. உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. போல மாறியது நமது நாட்டின் சாபக்கேடு. இதனால் நீதி நிலை நாட்டப்படவில்லை. தொடர்ந்து நடைபெற வேண்டிய சட்டப்போராட்டம், ‘நீட்’ தேர்வு தயாரிப்பு என்ற வகையில் சுருங்கிப் போயுள்ளது. மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டத்திற்கு மாறுவது ஏற்புடையதல்ல.
ஏனெனில் அந்தப் பாடத்திட்டங்களும் பாடநூல்களும் 10 ஆண்டுகளுக்கு முந்தியவை. தமிழகக் கல்விப் பாடநூல்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டாண்டுகளில் மொத்தப் பாடங்களும் மாறிவிடும். ‘நீட்’ தேர்வுக்கு அடிப்படையிலான +2 க்கு புதிய பாடம் வரும் கல்வியாண்டில் வந்துவிடும். இதிலுள்ள குறைபாடுகளை உடன் சரி செய்து செழுமைப் படுத்திவிடலாம். ‘நீட்’ தேர்வை மையமாகக் கொண்டு பெற்றோர்களும் தனியார் சுயநிதிப் பள்ளிகளும் சிபிஎஸ்இயை நோக்கி படையெடுக்கும் நிலை காணப்படுகிறது. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையை உண்டாக்கும்.
சிபிஎஸ்இ இல் பாடச்சுமை குறைப்பு பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு இணையான தமிழகப் பாடத்திட்டம் சிறப்பானது இருந்தபோதிலும் இதனடிப்படையில் ‘நீட்’ கேள்விகள் அமையும் என்பதில் உத்தரவாதமில்லை. இனி +1,+2 வகுப்புகளைத் தாண்டி பிற வகுப்பிலிருந்து வினாக்கள் கேட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏற்கனவே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வினாத்தாள் அளித்தவர்கள்தானே! சில லட்சம் பேருக்குத் தேர்வு நடத்த எவ்வித அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மத்திய வாரியம் ‘நீட்’ தேர்வு நடத்துகிறது.
அதன் குளறுபடிகள் எண்ணற்றவை. 20 லட்சம் பேருக்குக்கூட முறையாக தேர்வுகள் நடத்தக்கூடிய தமிழகப் பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை மற்றும் தேர்வாணையம் இந்தப் பணியை செய்யும் நிலை வரவேண்டும். சில ஆண்டுகளில் மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டம் மாற்றப் படுமேயானால் உடனே நமது பாடத் திட்டத்தையும் மாற்றிட முடியாதல்லவா! ‘நீட்’ தேர்வுக்கு தற்காலிக அல்லது நிரந்தர விலக்குக் கோருவது ஒருபுறம். +1,+2 வில் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வை தமிழக அரசே நடத்தவேண்டிய உரிமையை நிலைநாட்டுவது அவசியம்.
ஜிப்மரில் தனி நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசால் முடியுமெனில் மாநில அரசால் ஏன் முடியாது? +1,+2 பாடங்களை முழுமையாகப் படிக்காமல், பள்ளிக்கே செல்லாமல் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பெறமுடியும் என்பதை பீகார் மாணவி நிரூபித்திருக்கிறார். நுழைவுத்தேர்வு நடந்தாலும் +1,+2 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவது அவசியம். ‘கோச்சிங்’ சென்டர்களாக கல்வி நிறுவனங்களை மாற்றுவது உலகமயத் தந்திரம்.
கல்வியை மேலும் வணிகமயமாக்க இது உதவும். நம்மிடம் உள்ள சுமார் 2000 மருத்துவ இடங்கள் கைவிட்டுப் போகும்போது, பிற மாநில இடங்களை நமது மாணவர்கள் பெறுவார்கள் என்று வீம்பு பேசுவது அநியாயம். இரண்டு அல்லது பல ஆண்டுகள் பயிற்சிகள் இல்லாமல் இது சாத்தியமில்லை. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்பு துளியுமில்லை. அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என ‘நீட் படுகொலைகள்’ இனியும் நிகழாதிருக்க பெண்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும். தேர்வு அவசியமென்றால் பிற தகுதித்தேர்வு போன்று அதைத் தமிழக அரசே நடத்த வேண்டும். இல்லாவிடில் சமூகநீதியும் பெண் கல்வியும் கேள்விக்குறியாகிவிடும்.”
Average Rating