ஞானசார தேரருக்காக வளையுமா சட்டம்?(கட்டுரை)

Read Time:13 Minute, 15 Second

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட விவகாரம், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளை, திரிசங்கு நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டதாக, ஞானசார தேரருக்கு எதிராகப் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த போதும், சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்பியே வந்தார்.

மியான்மாரில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்புப் பிரசாரங்களுக்குத் தலைமை தாங்கியவர் எனக் குற்றம்சாட்டப்படும், விராது பிக்குவுக்கு இணையானவராக வர்ணிக்கப்படுகின்ற ஞானசார தேரர், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், திடீர் எழுச்சி கண்டவர்.

அவரும், அவரது பொது பல சேனா அமைப்பும் தான் முஸ்லிம்களை, மஹிந்த அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்தின. ஞானசார தேரரின் பொது பல சேனா அமைப்பு, கோட்டாபய ராஜபக்‌ஷவின் பின்னணியுடன் தான் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகக் காணப்பட்டன.

பொது பல சேனா அமைப்பு கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளால், முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டனர். இது, ஆட்சிமாற்றத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஞானசார தேரருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போதைய அரசாங்கமும் இவ்விடயத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்தது.

‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்’ என்ற அவருக்கு எதிரான, பிரதான குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அவருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, இன்று வரை சாத்தியமாகவில்லை.

ஆனால், தற்செயலாக, ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்துக்குள் செய்த அடாவடித்தனம், அவர் வசமாக மாட்டிக் கொள்வதற்குக் காரணமானது. அந்தச் சம்பவத்தின் மூலம் அவர், நீதிமன்றத்தை அவமதித்தார்; சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தார். இரண்டுமே பாரதூரமான குற்றங்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் போலவே, சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், சாட்சிகளை அச்சுறுத்துவதும் பாரதூரமான குற்றம். இவைதான், ஞானசார தேரரை, ஆறு மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையிலான, சிறைத் தண்டனையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகின.

ஹோமாகம நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருக்கிறார்.

இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அவருக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்கலாம்; அல்லது, தண்டனை மீளஉறுதிப்படுத்தப்படலாம்.

ஆனாலும், அவர் ஒரு தண்டனைக் கைதியாக, இந்தப் பத்தி வெளியாகும் தருணம் வரை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் காலத்தை கழிக்க நேரிட்டுள்ளது.

பௌத்த பீடங்கள், சங்க சபாக்கள் பலவும், இந்தத் தீர்ப்பை விரும்பவில்லை; எதிர்ப்பு வெளியிட்டன; கண்டனம் தெரிவித்தன. சிறையில் அவர் காவியைக் கழற்ற இடமளிக்கக் கூடாது என்று கடிதம் எழுதின. சில பௌத்த பிக்குகள், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.

அதுமாத்திரமன்றி, கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும், பொது பல சேனாவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் ஈடுபட்டார்கள். ஆனால், “ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறோ, அவரை விடுவிக்குமாறோ கோரப் போவதில்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை, பொது பல சேனாவின் ஒருங்கிணைப்பாளர் சுமங்கலந்த தேரர், “ஞானசார தேரரின் பணிகளை முடக்கவே, அரசாங்கம் அவருக்கு நியாயமற்ற முறையில், கடூழிய சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. இராணுவத்துக்கு அரசாங்கத்தால் இழைக்கப்படுகின்ற அநீதிகளைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலே, அவர் ஆத்திரமடைந்து எதிர்த்தரப்பினரைச் சாடினார்.

இது சட்டத்தின் பார்வையில் குற்றமாகக் காணப்பட்டாலும், மத ரீதியில் ஒருபோதும் குற்றமாகாது” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்தே, பொது பல சேனாவும் பௌத்த சிங்களக் கடும்போக்காளர்களும் எந்தளவுக்குக் குழப்பமடைந்து போயுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

அதாவது அரசாங்கம், அவருக்கு நியாயமற்ற முறையில் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று கூறும் அவரே, சட்டத்தின் பார்வையில் அவர் செய்தது தவறு தான் என்றும் கூறியிருக்கிறார்.

சட்டத்தின் பார்வையில், ஞானசார தேரர் செய்த தவறுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருக்கிறது. ஆனால், இதை அரசாங்கத்தின் பழிவாங்கும் செயலாக இவர்கள் சித்திரிக்க முனைகின்றனர்.

அதேவேளை, நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்களால் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் இருக்கிறது. ஏனென்றால், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்க வேண்டும்; அதற்கு அவர்கள் தயாரில்லை.

அதேவேளை, இந்தத் தீர்ப்பை நிராகரிக்கவும் முடியாது. ஏனென்றால், இலங்கையின் நீதித்துறை வலுவானது, நியாயமானது, பக்கசார்பற்றது; உள்நாட்டில் இடம்பெறும் குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிமன்றங்களே தீர்ப்பை அளிக்கும்; வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லை என்று கூறிக் கொள்ளும் தரப்பினர், இத்தகைய நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கவும் முடியாத சிக்கலுக்குள் அகப்பட்டுள்ளனர்.

ஞானசார தேரரைப் பொறுத்தவரையில், அவர் சிக்கிக்கொள்ள வேண்டிய இடங்களில் தப்பித்தே வந்திருக்கிறார். ஆனால், தப்பிக்கொள்ளக் கூடிய இடத்தில், வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, பொது அமைதியைக் குலைக்கமாட்டோம் என்று பௌத்த பிக்குகள் கூறியிருந்தனர்.

ஆனால், முஸ்லிம்களுக்கு எதிராக இன வன்முறைகளைத் தூண்டிவிட்டார் என்ற குற்றத்துக்காக, இதே தண்டனை, ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்டிருந்தால், இந்தளவுக்கு அமைதி பேணப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயம்.

அது, இன்னோர் இனவன்முறைக்கான களமாகவும் மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் பௌத்த சிங்களக் கடும்போக்காளர்களால், அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை.

அதேவேளை, சட்டத்தை மீறிய செயல் ஒன்றை, மத ரீதியாகக் குற்றமல்ல என்ற புதிய வாதமும் முன்வைக்கப்படுகிறது. மதமும் சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றே. ஆனால், சட்டத்தின் பிடியில் இருந்து மதம், பலவேளைகளில் பலரைக் காப்பாற்றி விடுகிறது; பலரைப் பழி தீர்த்துக் கொள்கிறது.

இந்தநிலையில், ஜனாதிபதியின் மூலம் அவருக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. சில தரப்பினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது குறித்து, ஜனாதிபதி பரிசீலனை செய்வதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு அளிக்க இணங்கினால் அது, பெரும் நெருக்கடியை அவருக்கே கொண்டு வரும்.

ஏற்கெனவே, ஞானசார தேரரைக் கைது செய்வதில் இருந்து, அரசாங்கம் தவிர்த்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு முன்னர் நிலவியது. இப்போது அவருக்கு பொதுமன்னிப்பு அளித்தால், அதுவும் நீதிமன்றம் குறுகியகாலத் தண்டனையையே அளித்துள்ள நிலையில், அதிலிருந்து பொதுமன்னிப்பு அளிப்பது சட்டத்தைக் கேலி செய்வதாகி விடும்.

தண்டனை விதிக்கப்பட்ட பலருக்கு, அதே பாணியில் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று விடும். ஞானசார தேரர் என்ற ஒரு பௌத்த பிக்கு மாத்திரம், சிறையில் தண்டனை அனுபவிக்கவில்லை; 15 பௌத்த பிக்குகள், சிறைகளில் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் மூவரும் கூட சிறைத் தண்டனையை அனுபவிக்கிறார்கள். அதுவும், சந்திரிகா பண்டாரநாயக்க கொலை முயற்சி வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட இந்து மதகுரு ரகுபதி சர்மா, 30 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில், 300 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

அவர், 19 ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்ட போதும், அவரது மனைவி, 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்த பின்னரே, நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட போதும், ரகுபதி சர்மாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்படவில்லை.

இவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் சிறைக்குச் சென்ற ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு அளித்தால், அரசாங்கம் அவரைக் காப்பாற்ற முனைகிறது என்று தானே பொருள்படும்?

எனவே, ஞானசார தேரர் விடயத்தில், சிங்கள பௌத்த தேசியவாதிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், சட்டம் வளைக்கப்பட்டு விடுமா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது தேவதை கதை அல்ல..!!(மகளிர் பக்கம்)
Next post பிரபாஸை மறக்க முடியாமல் தவிக்கும் அனுஷ்கா !!(சினிமா செய்தி)