நோய்கள் குணமாகும்!!(மருத்துவம்)
‘‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்… முறையான யோகாசனப் பயிற்சியின் மூலம் இந்த நான்கையும் சாதிக்க முடியும்’’ என்று உறுதியான குரலில் பேசுகிறார் யோகா ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தி. இன்றைய வாழ்வில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைகளுக்கான யோகாசனங்களைக் கேட்டோம்… ‘‘மருத்துவரிடம் சென்றவுடனேயே அவர் சிகிச்சையை ஆரம்பித்துவிட மாட்டார்.
நோயின் தன்மை, அவரது வயது, வேறு பிரச்னைகள், வாழ்க்கை முறை, உடலின் சக்தி போன்ற பல விஷயங்களையும் ஆராய்ந்தபிறகுதான் சிகிச்சை தருவார். அதுபோலவே, யோகாசனம் கற்றுக்கொள்ள வருகிறவர்களுக்கும் கூட்டமாக அமர வைத்து ஆசனம் சொல்லிக் கொடுப்பது சரியான முறை அல்ல. அதனால், ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பயிற்சிகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. நீரிழிவுக்கு உண்டு நல்ல பலன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சுரப்பு குறைந்து, நீரிழிவு உருவாகிறது.
யோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழி வுக்காரர்களுக்கு நீடித்த பலன் அளிக்கும். முதுகுவலிக்கு முடிவு கட்டுவோம் கம்ப்யூட்டர் வேலைகள், வாகனம் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது என்று இன்றைய வாழ்க்கைமுறையால் முதுகுவலிக்கு எளிதாக ஆளாகிவிடுகிறோம். கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும். முதுகில் இருக்கும் தசைகளின் தளர்வுக்காக சிறிய பயிற்சிகள் கூட நிறைய இருக்கின்றன. மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்தக்கொதிப்பு இல்லை சில மருத்துவ காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டாலும் மனநிலை, சுற்றுப்புற சூழ்நிலை சார்ந்தே பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.
ரத்தப் பரிசோதனை செய்யும்போதுகூட நிற்க வைத்துப் பரிசோதித்தால் ஓர் அளவிலும், படுக்கையில் நோயாளியைப் பரிசோதனை செய்தால் வேறு அளவிலும் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ரத்த அழுத்தம் இன்னும் வேறு அளவிலும் இருக்கலாம். அதனால் ரத்த அழுத்தம் என்பது நிலையானது அல்ல.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் கட்டுக்குள் வைக்க முடியும். இதயத்துக்கு சர்வாங்காசனம்! விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. சிறுநீரகமும் தனுராசனமும் நீரிழிவு உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.
உணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். யோகிகள், முனிவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யோகாசனம் செய்யும்போது, உடலில் நடக்கிற மாற்றங்களை வைத்து வெளிநாட்டவர் பல்வேறு ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆசனத்தின் பின்னும் பல மருத்துவப் பலன்கள் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே மேற்கத்திய நாடுகள் யோகாசனத்தைக் கொண்டாட ஆரம்பித்தன. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரமே அறுசுவை என்று முன்னோர்கள் சொன்னார்கள். இன்றோ உப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகளை மட்டுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். நோய்கள் உருவாக இதுவும் முக்கியமான காரணம். இதை மாற்ற முறையான யோகப் பயிற்சிகளோடு, சரியான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கும் சாத்தியம்தான்!
Average Rating