குடல்நலம் காக்கும் உணவுகள்!!(மருத்துவம்)
உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையே ஆரோக்கியமான உணவுதான். நம் உணவின் மூலமே ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் தேவையான சக்தி சென்று சேர்கிறது. உணவில் இருக்கும் சத்துக்களைப் பிரித்து உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிற பணியையும், தேவையற்ற பகுதிகளை வெளியேற்றும் பணியையும் நம் இரைப்பை மற்றும் குடல் பகுதிகள் செய்கிறது. இதை கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் இன்னும் புரிந்துகொள்ள முடியும்.
நம்முடைய செரிமான மண்டலம் தொடங்குவது வாயில்தான். பற்களைப் பயன்படுத்தி, உணவைக் கடித்து, எச்சில் பயன்படுத்தி, உணவுக்குழாய் மூலமாக உணவு உள்ளே செல்கிறது. இந்த உணவு சிறுசிறு துகள்களாக உடைந்து உணவுக்குழாய் மூலம் வயிற்றுக்குச் செல்கிறது. வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், செரிமானத்துக்கான அமிலங்களும் உள்ளன. அவை இந்த உணவுத்துகள்களை இன்னும் சிறிய துகள்களாக உடைத்து அத்துடன் இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கலந்து அதில் ஏதேனும் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் இருந்தால் அழிக்கிறது.
பின்னர் இந்த உணவு சிறுகுடல் வழியாகச் செல்லும். கணையம், பித்தப்பையில் இருந்து உருவாகும் சாறுகள் உணவில் இருக்கும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்துக்களை உடைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படி உடைக்கப்படுகிற குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை சிறுகுடலில் இருக்கும் பிலி(Pili) ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ரத்த நாளங்கள் வழியாகச் செல்கிறது. செரிமானம் ஆகாத உணவு பெருங்குடல் வழியாக வெளியே செல்கிறது.
இப்படி பயணமாகும் உணவு ஆரோக்கியக் கேடாக இருந்தால் சில வயிற்று உபாதைகள் உருவாகிறது. வாய்வு, செரிமானம், அசிடிட்டி என்கிற அமிலத்தன்மை போன்றவை இவற்றில் முக்கியமானவை. இதில் உணவுமுறையை ஒழுங்குசெய்வதன் மூலம் செரிமான பிரச்னையை சரி செய்துவிடலாம்.
நேரத்துக்கு உணவு சாப்பிடுவதன் மூலமும் எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த பிரச்னையை சரி செய்ய முடியும். இரைப்பை மற்றும் குடல்பகுதிக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுவகைகளையும் அதன் பலன்களையும் இனி பார்க்கலாம்.
ஹெர்பல் பட்டர் மில்க்
தேவையான பொருட்கள்
தயிர் – 1 கப், வெள்ளரிக்காய் – 25 கிராம், புதினா – 10 கிராம், கொத்துமல்லி – 10 கிராம், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – ½ தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
மிக்ஸியில் தயிர், வெள்ளரிக்காய், புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதை க்ளாஸில் ஊற்றி உப்பு சேர்த்து பருகவும்.
பலன்கள்
தயிர் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும். குடலை ஆரோக்கியமாக வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தை அழகாய் வைக்க உதவும். கொழுப்பை குறைக்க உதவும். கோப உணர்ச்சி கட்டுக்குள் வரும்.வெள்ளரிக்காய் கொழுப்பு மற்றும் சர்க்கரையை குறைக்க உதவும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம் குறையும். சிறுநீரகத்தை பாதுகாக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.புதினா அலர்ஜியை சரிப்படுத்தும். இருமல், சளியை குணப்படுத்தும். செரிமான கோளாறு, வாயுவுக்கு தீர்வு தரும். வயிற்று வலி, Irritable bowel syndrome உள்ளவர்கள் புதினாவை உண்ணலாம். அல்சரை குணப்படுத்தும். வலி நிவாரணம் தரும்.
இஞ்சி செரிமானத்துக்கு உதவும். வாந்தி வராமல் தடுக்கும். சளி, இருமலுக்கு நல்லது.வீக்கத்தை சரி செய்யும். வலி நிவாரணம் தரும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.மலச்சிக்கல், அல்சர், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயை குணப்படுத்தும். கீல் வாதத்தைக் கட்டுப்படுத்தும்.
கொத்தமல்லி இலை சர்க்கரையை குறைக்கும். செரிமானத்துக்கு நல்லது. வீக்கத்தைக் குறைக்கும்.சரும பிரச்னையை தீர்க்கும். கண் பார்வையை
அதிகரிக்கும்.
மாதுளை இளநீர் ஃப்யூஷன்
தேவையான பொருட்கள்
இளநீர் மற்றும் தண்ணீர் – 1 கப்,மாதுளை – ½ கப், லெமன் ஜூஸ் – ¼ தேக்கரண்டி, புதினா – சிறிதளவு, தேன் – தேவையான அளவு.
எப்படி செய்வது?
இளநீர் மற்றும் தண்ணீர் அத்துடன் மாதுளை, புதினாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த ஜூஸில் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து பருகவும்.
பலன்கள்
இளநீர் வயிற்றை சுத்தப்படுத்தும். சோர்வைத் தீர்க்கும். உடலை குளிர்ந்த நிலை யில் வைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். வயிறு பிடிப்பு, வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு, எடையைக் குறைக்க, மலச்சிக்கல், Irritable bowel syndrome, சிறுநீரக கோளாறுகளை போக்க உதவும்.
மாதுளை புற்றுநோய் வராமல் தடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். கீல்வாதம், ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயதாவதைத் தடுக்கும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி தரும். புத்துணர்ச்சியை தக்க வைக்க உதவும்.தேன் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். இருமலை குணப்படுத்தும்.
வரகு முடக்கத்தான் கீரை தோசை
தேவையான பொருட்கள்
வரகு – 1 கப், முடக்கத்தான் கீரை – 1 கப், உளுந்து – ¼ கப், வெந்தயம் – ¼ தேக்கரண்டி, சீரகம் – ¼ தேக்கரண்டி, மிளகு – ¼ தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
எப்படி செய்வது?
வரகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற விடவும். அத்துடன் கீரை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை 2 மணி நேரம் வைக்கவும். அதில் மிளகு சேர்த்து பின்னர் மெல்லிய தோசை செய்து பரிமாறவும்.
பலன்கள்
வரகு நார்ச்சத்து அதிகம் கொண்டது. வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும். புரதச்சத்து உள்ளது. கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.வயிற்றுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும்.கீரையில் நார்ச்சத்து அதிகமுள்ளது. மலச்சிக்கல், அல்ஸர் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இதய நோய் வராமல் தடுக்கும். சர்க்கரையைக் குறைக்கும்.சீரகம் செரிமானத்துக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மூலநோயை குணப்படுத்தும். ஆஸ்துமா, சளி, ரத்த சோகை, சர்க்கரை நோய்க்கு இதை பயன்படுத்தலாம்.
மிளகு செரிமானத்துக்கு உதவும். எடையை குறைக்க உதவும். நுரையீரல் பிரச்னை தீர உதவும்.ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. அல்ஸர், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.வெந்தயம் செரிமான பிரச்னையைத் தீர்க்கும். கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையைக் குறைக்கும்.உளுந்தம் பருப்பில் இரும்புச்சத்து உள்ளது. புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் கனிமங்கள் உள்ளன.
மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி – 1 கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, வேக வைத்த பருப்பு மசியல் – 1 கப், இஞ்சி, பூண்டு – ½ தேக்கரண்டி,
எப்படி செய்வது?
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் மணத்தக்காளி, பருப்பு மசியல், தண்ணீர், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொதித்தவுடன் இறக்கவும்.
பலன்கள்
மணத்தக்காளி மலச்சிக்கலை தீர்க்கும். நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. தலைவலியை போக்கும்.அல்சரை குணப்படுத்தும். இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இருக்கிறது. நார்ச்சத்து அதிகமுள்ளது.பூண்டு சளியை குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதய நோய் வராமல் தடுக்கும்.மறதியை சரிப்படுத்தும்.பருப்பில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் கனிமங்களும் அதிகம் உள்ளது.
Average Rating