மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்!(மருத்துவம்)
செல்போனோ, பைக்கோ, வீடோ… பிடித்த பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்று மனது தவியாய்த் தவிப்பது ஏன்? அப்படி ஆசைப்பட்ட பொருள் வாங்கிய பிறகு மனதில் ஏன் அத்தனை சந்தோஷம் பொங்குகிறது? இதன் உளவியல்தான் என்ன?இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் கிடைத்த முடிவுகள் சுவாரஸ்யமானவை என்பதுடன் மிக முக்கியமான செய்தி ஒன்றையும் உலகுக்கு சொல்லி இருக்கிறது.
பொழுது சந்தோஷத்தை விரும்பக் கூடியது. இதனை ஆங்கிலத்தில் Instant Gratitude என்கிறார்கள். மகிழ்ச்சி தரக்கூடிய வார்த்தைகளை காதால் கேட்டாலும், தனக்கு ஒன்று வேண்டும் என்றாலும் அது உடனே நடந்தாக வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடியது மனம். நமக்குள் இருக்கும் இந்த உடனடி மகிழ்ச்சிக்கான ஆசை உயிர் இயக்கத்திலேயே அமையப் பெற்றுள்ளது.
கண்ணுக்கெதிரே ஒரு பெரிய ரெஸ்டாரன்ட்டை பார்க்கிறீர்கள். ஆனால், உங்களிடம் போதுமான பணம் இல்லை. அங்கு உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட நினைத்தாலும், உங்களிடம் உள்ள பணத்தில் பக்கத்தில் இருக்கும் கையேந்தி பவனில் 3 பரோட்டோவோடு முடித்துக் கொள்ளும் நிலை. ஆசைப்பட்ட ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட அடுத்த சம்பள நாளுக்காக காத்திருக்க வேண்டும். இறுதியில் நீங்கள் விரும்பும் விஷயம் நடந்தால், உற்சாகம் அடைகிறீர்கள்.
இந்த உற்சாக உணர்வானது, உண்மையில் நீங்கள் வாங்கும் பொருளை விட வலுவான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. உயிரியல் ரீதியாக பார்த்தால் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் காரணியாக செயல்படும் Dopamine என்னும் ரசாயனமே அந்த உடனடி மகிழ்ச்சிக்குக் காரணம். இந்த டோபமைன் அளவு குறையத் தொடங்கும்போது வேறொன்றின் மீது ஆசை பிறக்கும். அதுதான் மனித மனத்தின் இயல்பு.
இதுவே விரும்பிய பொருள் கிடைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு சற்றே அதன்மீதான உற்சாகம் குறைந்திருக்கும். அதற்கும் டோபமைன் சுரப்பு குறைவதே காரணம். எனவே, இந்த மகிழ்ச்சிக்கான டோபமைன் அளவைத் தீர்மானிக்கும் ஆய்வு பற்றியே அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுக்கு உங்களுக்கு இஷ்டமான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று 40 டாலர் பணம் வழங்கினார்கள்.மற்றொரு குழுவினரை அந்த பணத்தின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த சொன்னார்கள். உதாரணமாக பொருட்களுக்கு பதிலாக சமைக்க ஒரு சமையல் கலைஞர் அல்லது வீட்டை சுத்தம் செய்ய ஹவுஸ் கீப்பரை நியமித்து அந்த நேரத்தை அவர்களுக்குப் பிடித்த வகையில் செலவிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பங்கு கொண்ட ஒவ்வொருவரின் மகிழ்ச்சியை அளவிட்டபோது, பொருட்கள் வாங்கியவர்களைவிட பணத்தின் மூலம், நேரத்தை தங்களுக்கு பிடித்த வகையில் செலவழித்தவர்களின் டோபமைன் அளவே அதிகமாக இருந்தது.அதாவது பணம், பொருட்களினால் வரும் மகிழ்ச்சியைவிட பிடித்த செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்ததைக் கண்டறிந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எனவே, மனிதனின் மகிழ்ச்சி பொருள்ரீதியானது அல்ல; அவன் தனக்குப் பிடித்த வகையில் செலவழிக்கும் மதிப்புமிக்க நேரமே’ என்பதைக் கண்டறிந்தார்கள்.எனவே, உங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவதற்காக நேரத்தை ஒதுக்குவதில் கவனம் செலுத்தினாலே போதும்… 200 சதவீத மகிழ்ச்சி நிச்சயம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Average Rating