எண்டோதீலியம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை!!(மருத்துவம்)
நுரையீரல் நோய்கள், இதயநோய்கள், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு என தற்போது அதிகரித்துவரும் உயிர்கொல்லி நோய்களுக்கு மருத்துவரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் மூல காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல் என்பதைப் பலரும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஏனெனில் ரசாயன கழிவுகள் காரணமாகவும், மாசடைந்த காற்றை சுவாசிக்கும் காரணமாகவும் நம் உடலில் உள்ள Endothelium என்னும் மெல்லிய படலம் சேதமடைவதாலேயே இத்தகைய நோய்கள் வருகின்றன. பொதுமக்களிடம் எண்டோதீலியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்’’ என்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவரான ஜாய் தாமஸ்.
எண்டோதீலியம் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…
‘‘மனித உடலில் தமனிகள்(Arteries), நரம்புகள்(Veins) மற்றும் மயிரிழை போன்ற நுண்குழாய்கள்(Capillaries) என சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கு ரத்த நாளங்கள் உள்ளன. இந்த மிகப்பெரிய நெட்வொர்க்கை Endothelial என சொல்லப்படும் செல்கள்தான் பராமரிக்கின்றன. ஆயிரக்கணக்கான Endothelial செல்களைக் கொண்ட கட்டமைப்பு Endothelium என்று குறிப்பிடப்படுகிறது.
நரம்புகள், ரத்தநாளங்கள் என உடல் முழுவதும் உள்ள குழாய்களில் இந்த எண்டோதீலியம் மெல்லிய படலமாக மூடப்பட்டிருக்கும். இதுதான் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.’’
எண்டோதீலியத்தின் வேலைகள் என்ன?
‘‘ரத்தக்குழாய் சுவற்றை பாதுகாப்பதும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதும் எண்டோதீலியத்தின் முக்கியமான வேலை. ரத்தத்தில் உள்ள ரசாயனங்கள் மற்றும் வெள்ளை, சிவப்பு அணுக்கள் மற்றும் ரத்த தட்டுக்கள். உடல் திசுக்களுக்குள் செல்லாமலும், திசுக்களிலுள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ரத்தத்தில் கலக்காமலும் பாதுகாக்கும் அரணாக இந்த எண்டோதீலியம் செயல்படுகிறது.
உடலில் அடிபடும்போது ரத்தம் அதிகமாக வெளியேற விடாமல் ரத்தத்தை உறைய வைக்கும் அதே நேரத்தில், ரத்த குழாய்களுக்குள் ரத்தத்தை உறைய
விடாமல் சீராக ஓட வைக்கும் வேலையையும் இந்த எண்டோதீலியல் செல்கள் செய்கின்றன. உதாரணமாக எடை அதிகம் உள்ள பொருட்களை தூக்கும்போது, வேகமாக நடக்கும்போது, ஓடுவது அல்லது உடற்பயிற்சி போன்ற கடினமான வேலைகளைச் செய்யும்போது தசைகளுக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடை வேகமாக எடுத்துச் செல்வதும் இதனுடைய வேலையாகும்.’’
எண்டோதீலியம் பழுதடைந்தால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன?
‘‘ரத்த அழுத்த மாறுபாடுகள், ரத்தநாளங்கள் சுருக்கம் மற்றும் விரிவடைதல், அழற்சி நிகழ்வுகள்(Inflammatory process), ரத்தத்தில் ஆக்சிஜன் சுழற்சி மற்றும் ரத்த உறைதல் போன்றவற்றில் எண்டோதீலியம் மிக இன்றியமையாததாக இருக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கும் எண்டோதீலியத்தின் ரோக்கியத்துக்கு நைட்ரிக் ஆக்ஸைடு சமநிலையில் இருக்க வேண்டும். நைட்ரிக் ஆக்ஸைடு சமநிலை தவறினால் எண்டோதீலியம் சேதமடைந்து ரத்தத்தில் இருக்கும் உயிரணுக்கள் ரத்த நாளங்கள் வழியாக அருகில் உள்ள திசுக்களுக்குள் கலந்துவிடலாம்.
பெரிய ரத்தநாளங்களில் சுவர் இருப்பதுபோல் நுண்ணிய ரத்த நாளங்களில் (Capillaries) சுவர் இருக்காது. வெறும் எண்டோதீலியப் படலம் மட்டுமே இருக்கும். இந்த நுண்ணிய ரத்தக்குழாய்களில்தான் ஆக்சிஜன் உள்ளேற்றம், கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் மற்றும் உணவிலிருந்து ஆற்றல் மாற்றம் போன்றவை நடைபெறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தை ஒழுங்காகப் பராமரிப்பதிலும் எண்டோதீலியம் தீவிரமாக
செயலாற்றுகிறது.
ரத்த ஓட்டம் வழியாக ரத்த அழுத்தத்தை உண்டாக்குவதற்கும், ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் ரத்தநாள எதிர்ப்பு (Vascular Resistance) தேவைப்படுகிறது. இந்த முறையான ரத்த சுழற்சி எதிர்ப்பு அமைப்பை Systematic Vascular Resistance என்று சொல்கிறோம். இது அதிகமாகும்போது ரத்த அழுத்த அதிகரிப்பும், குறையும்போது ரத்த அழுத்த குறைவும் ஏற்படுகிறது. இதிலிருந்தே இதயம் காப்பதில் எண்டோதிலியத்தின் முக்கியத்தை நாம் உணர முடியும்.’’
எண்டோதீலியம் எதனால் சேதம் அடைகிறது?
‘‘மாசடைந்த காற்று, புகை, மதுப்பழக்கம், ரசாயன ஆலைகளிலிருந்து வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் ரத்தநாளங்களில் உள்ள இந்த மெல்லியபடலமான எண்டோதீலியம் சேதமடைகிறது. மேலும் நம் உடல்சார்ந்த உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை போன்றவற்றாலும் எண்டோதீலியம் சேதமடைகிறது.
எண்டோதீலியம் சேதமடைவது, நீரிழிவு, இதயநோய், மாரடைப்பு, பார்க்கின்ஸன், ஆர்த்தரைடிஸ், குளுக்கோமா, சிறுநீரக செயலிழப்பு, ரத்த உறைதல், உடல்பருமன் மற்றும் தூக்கக்குறைபாடு போன்ற பலநோய்களுக்கு காரணமாகிறது.’’எண்டோதீலியத்தை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?
‘‘சுற்றுச்சூழல் மாசிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும், புகைப்பழக்கத்தை கைவிடுவதும் இதில் முக்கியம். வெளியில் செல்லும்போதும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போதும் மாஸ்க் அணிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் வீட்டுக்குள்ளேயும் ரசாயன வெளிப்பாடுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். (உதாரணம் கொசுமருந்து மற்றும் சாம்பிராணி புகை, டாய்லெட் கிளீனர் வாசனை) ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலமும் எண்டோதீலியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.’’
Average Rating