பதநி… பதநி…!!(மருத்துவம்)
இயற்கையாக கிடைக்கும் நீர்ச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகள் குடிப்பது நம் உடலுக்கு நல்லது. குறிப்பாக வெயில் காலம் தொடங்கும் போதே இயற்கை அதற்கேற்றவாறு நீர்ச் சத்து நிறைந்த பொருட்களை நமக்கு வழங்குகிறது. இதில் மிக முக்கியமானது பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர். பனைமரம் எல்லா காலங்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு உணவுகளை நமக்கு வழங்கும் ஆற்றல் பெற்றது. அப்படி இயற்கையாக கிடைக்கும் பனைமரத்தின் பதநீர் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவ பேராசிரியர் அப்துல் காதர்.
“இயற்கையாக கிடைக்கும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பானங்களில் பதநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. பதநீரை சரியான பதத்தில் எடுத்து காலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் வெயில் தொடங்கும் நேரத்திற்குள் குடிப்பது நல்லது. பனை மரத்திலிருந்து இறக்கப்பட்ட பதநீர் சராசரியாக 3 மணிநேரம் வரை நன்றாக இருக்கும்.பதநீர் குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், தூக்கமின்மையால் ஏற்படும் தலை பாரம் நீங்கும். பதநீர் மூளையை ஊக்குவிக்கும் சிறந்த தன்மை கொண்டது. அதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பித்தத்தால் ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல், அசதி, சோர்வு போன்றவற்றை குறைக்கும். உடலில் இருக்கும் பித்தத்தை குறைக்கும் தன்மையும் பதநீருக்கு உண்டு.
இதில் கால்சியம், மெக்னீசியம், சால்ட், சர்க்கரை, குளுக்கோஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புரோட்டீன் மிகக்குறைவாக இருக்கிறது. சர்க்கரைச் சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை குடிக்கலாமா என்கிற கேள்வி எழலாம். தாராளமாகக் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைச் சத்து நிறைந்த பொருட்கள் எளிதாக உடலில் கரைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சமன்படுத்திவிடும். ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் 150 மில்லி லிட்டரில் இருந்து 200 மில்லி லிட்டர் வரை குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு சுத்தமான பதநீரை எடுத்து பாகு பதம் வரும்வரை காய்ச்சி கொடுத்தால் பனங்கற்கண்டு சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 1 வயது குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம். இதில் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் எலும்புகள் நன்றாக வலுப்பெறும். பற்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகள் உற்சாகத்துடன் இருப்பார்கள். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை பதநீருக்கு உண்டு. இயற்கை மனிதர்களுக்கு கொடுத்திருக்கும் மிக அற்புதமான பானம் பதநீர். சென்னை போன்ற நகரங்களில் கிடைக்கக்கூடிய பதநீர் 75 சதவீதம் சுத்தமானதாக இருப்பதில்லை. இதில் தண்ணீர் சேர்த்து விற்கப்படுகிறது.
மற்றொன்று சாக்கிரின் பொடி சேர்த்து விற்கப்படுகிறது. இதை எப்படி அறிந்துகொள்வது என்றால், பதநீர் சுவை குறைவாக இருக்கும், இனிப்பு சுவை அதிகமாக இருக்கும். இன்றைய காலச்சூழலில் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பது வருத்தம் அளிக்கும் செய்தி. சுத்தமான பதநீர் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாங்கி குடிப்பதுதான் வெயில் காலத்தில் உடலுக்கு மிக நல்லது” என்கிறார்.
Average Rating