கொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்!
‘‘இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பூச்சிகளுள் கொசு முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் கொசுக்களால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளால் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சமாளிக்க கொசுபத்தி சுருள், எலெக்ட்ரிக்கல் லிக்யூட், உடற்பசை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த ரசாயன தயாரிப்புகள் மோசமான பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியவை.
இதற்கு மாற்றாக இயற்கை வழியில் கொசு ஒழிப்பில் ஈடுபட முயற்சிக்க வேண்டும்’’ என்கிறார் பூச்சியியல் விஞ்ஞானியான கேப்ரியல் பால்ராஜ்.‘‘ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒரு நச்சு மூலக்கூறு மட்டும் இருப்பதால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதிலிருந்து தப்பித்து கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்கின்றன. இதனால் ஒரு சில வருடங்களிலேயே ரசாயனப் பூச்சிக் கொல்லிகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
அடுத்தமுறை இன்னும் அதிக வீரியமிக்க ரசாயனங்கள் இதனால் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் கொசுக்களைக் கட்டுப்படுத்தவும், கொசுப்புழுக்களை அழிக்கவும் பல ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதிர்ந்த கொசுக்களை அழிக்க ரசாயனப் புகையும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
தோல் மற்றும் கண் எரிச்சல், தலைவலி, சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் மனக்குழப்பம் போன்றவை உடனடி விளைவுகளாகத் தோன்றுகின்றன. மேலும் நமது இனப்பெருக்கத் திறனும் நோய் எதிர்ப்புத் திறனும் மூளை நரம்புகளின் தன்மையும் மெதுவாகப் பாதிக்கப்படுகின்றன. புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்க இத்தகைய ரசாயனங்களும் முக்கிய காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்நிலையை மாற்ற தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கண்டறிந்து தயாரிக்கவும், அவற்றைப் பரவலாகப் பயன்படுத்தவும் வேண்டும். அதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. நீர்நிலைகளில் உள்ள கொசுப்புழுக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதன் மூலம் பெருமளவு கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். மேலும் கொசுக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கிரீம், அகர்பத்திகள் மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றையும் தாவர மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்க முடியும்.
இயற்கையாகக் கிடைக்கும் எலுமிச்சை புல் எண்ணெய், ஜெரேனியம் எண்ணெய், கற்பூர எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் போன்ற சில எளிதில் ஆவியாகும் எண்ணெய்களுக்கும் வேப்பெண்ணெய்க்கும் கொசுக்களை விரட்டும் சக்தி உண்டு. இந்த எண்ணெய்களை கிரீம்களிலும் தெளிப்பு மருந்துகளிலும் பயன்படுத்தி தயாரிக்கலாம். கிராம்பு எண்ணெய், கற்பூர எண்ணெய், லவங்க எண்ணெய், புங்கை எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்கு கொசுப் புழுக்களைக் கொல்லும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.
இத்தகைய இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதால் நமக்கும் நம்மைச் சார்ந்துள்ள மற்ற உயிர்களுக்கும் எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்ட தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய தாவரப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் பிற பின்விளைவுகளையும் தடுக்கலாம்.
கொசுக்களை விரட்டும் ஊதுபத்திகளிலும், தெளிப்பு மருந்துகளிலும், கிரீம்களிலும் தாவர பொருட்களான எண்ணெய்கள் மற்றும் இலைச்சாறுகள் மட்டுமே பயன்படுத்தி தயாரிக்க முடியும். இதுபோன்ற கொசு ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும், இயற்கை மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொருளுதவி செய்தால் சில ஆண்டுகளிலேயே கொசுக்களை பெருமளவு ஒழித்துவிடலாம்’’ என்கிறார்.
Average Rating