உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு!!( கட்டுரை )
அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன.
மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன.
உலகமயமாக்கலின் முடிவு
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலக அரங்கின் மந்திரச் சொல் ‘உலகமயமாக்கல்’ ஆகும். ஆனால், கடந்த ஒரு தசாப்தமாக உருவாகி, நிலைத்துள்ள பொருளாதார நெருக்கடி, உலகமயமாக்கல் என்ற எண்ணக்கருவை நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளது.
முதலாளித்துவத்தை உந்தும் பிரதான கருவியாக, உலகமயமாக்கல் மேலும் இருக்கவியலாது என நிதி மூலதனம் உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியத்தின் செயல்நிரலில், உலகமயமாக்கலுக்கு மாற்றீடு எதுவும் தோன்றவில்லை.
இது, எதிர்காலத்தில் நிதிமூலதனத்தை வரன் முறையின்றிப் பரப்பும் கருவியை இல்லாமல் செய்துள்ளது. நிதி மூலதனம் வினைத்திறனுடன் செயற்பட இயலாமைக்கு, உலகமயமாக்கலே காரணம் என்பதோடு, அதனோடு சேர்ந்த திறந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக் கருத்துகள் வலுப்பெற்று, உலகப் பொருளாதார ஒழுங்கை, மீள் கட்டமைக்கும் திசையில் உரையாடல்களும் கொள்கை மாற்றங்களும் அவை சார்ந்த அரசியலும் நகர்ந்துள்ளன.
இவை உலகமயமாக்கலின் முடிவைக் கோருகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், கடந்த அரை நூற்றாண்டாக ஏகாதிபத்தியத்தைக் காவிச் சென்றதோடு அதைத் தக்கவைக்கும் கருவியுமாக இருந்த, அதன் பயன் முடிவுக்கு வந்துள்ளது.
இதேவேளை, இம்முடிவு நெருங்குகின்ற சமயம், இந்நெருக்கடியைக் கையாளத் திசைதிருப்பல் உத்திகள், வேகமாக அரங்கேறுகின்றன.
பொருளாதார விளைவுகளுக்கு முகங்கொடுக்க இயலாத முதலாளித்துவம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முகமாக, நாட்டின் பிற தேசிய இனங்களுக்கோ, மதச் சிறு பான்மையினருக்கோ, அயல் நாடெதற்குமோ எதிரான கடும்போக்கை மேற்கொள்ள முனைகிறது.
அதன் விளைவான முரண்பாடுகளை, ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாக்குகிறது. அத்துடன், அதுவரை சினேக முரண்பாடுகளாக இருந்த தேசிய இன, மொழி, மத, பிரதேச, சாதிய முரண்பாடுகளை, பகை முரண்பாடுகளாக்கி, அதில் ஒரு தரப்பையோ இன்னொன்றையோ ஆதரிப்பதுபோல் தோற்றம் காட்டி, தனது இருப்பை ஏகாதிபத்தியம் தக்க வைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் செயல்களை, இதன்மூலம் விளங்க இயலும்.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஒடுக்குவோரின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டோரின் தேசியவாதமும் ஏகாதிபத்திய ஆதரவுடன், தத்தம் நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதால், அமைதியாகத் தீர்க்கக்கூடிய முரண்பாடுகள் பகையாக மாறி, பொருளாதாரம் சார்ந்த முரண்பாடுகளுக்கு, வேறொரு முகத்தை வழங்குகின்றன.
இன்று விமர்சனத்துக்கு உள்ளாகும் திறந்தசந்தையும் கட்டற்ற வர்த்தகமும் முதலாளித்துவத்தின் அடிப்படைகளாக விமர்சனத்துக்கு உட்படவில்லை. மாறாக, உலகமயமாக்கலின் தோல்வியின் அடிப்படையில் அவை விமர்சிக்கப்படுகின்றன.
குறிப்பாக, கடந்த ஆண்டு அந்நிய நிறுவனங்களுக்கு எதிராக, அரசுகளின் நடவடிக்கை நான்கு மடங்கு கூடியுள்ளது. தனது கட்டுப்பாட்டை மீளப் பெறுவதை நோக்கி அரசு நகர்கிறது. உலகின் முதனிலைப் பொருளாதாரங்களே, கட்டற்ற வர்த்தகத்துக்குத் தடைகளை அதிகம் முன்வைக்கின்றன.
இன்று அரசுகள், தம் காக்கும் கரங்களை அகல விரித்துள்ளதால், பொருளாதாரத் தடைகள், இறக்குமதி வரையறைகள், சுங்க வரிவிதிப்பு, அனுமதி வழங்கல் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள், வந்தேறுகுடிகளுக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்றன நடக்கின்றன.
அரசு மீண்டும் ‘ஆயா அரசு’ எனும் நிலைப்பாட்டிலிருந்து, அதிகாரத்தைப் பாவிக்க முடிகிறது. இதை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணலாம்.
மதவாதத்தின் மாறும் வடிவங்கள்
மதங்கள் யாவும் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது மெய்யாயின், மனிதர் ஏன் மதங்களின் பெயரால் மட்டுமன்றி, மதப் பிரிவுகளின் பெயராலும் தம்மிடை போராடி மடிய வேண்டும்?
மதச் சிந்தனை வேறுபாடுகளின் பெயரில் நடந்த, சமூக மோதல்களின் யுகம் போய்விட்டது. ஒவ்வொரு மதத்துக்கும் மதப் பிரிவுக்கும் அது தோன்றிய சில காலத்துக்குள்ளேயே, தன் கருத்தை மக்களிடையே பரப்ப, அரச அதிகாரத்தைப் பிடிப்பதோ, மதத் தலைமையின் செல்வாக்குக்குள் அரசைக் கொண்டுவருவதோ முக்கிய தேவையாகின.
மதம் சார்ந்த மோதல்கள், மனிதர் மறுவுலகம் போகும் மார்க்கம் பற்றிய தத்துவ விவாதங்களின் விளைவுகளல்ல. அவற்றுக்கு வலிய பொருள்முதல்வாதக் காரணங்கள் இருந்தன.
இந்தியாவின் தெற்கில் பல்லவர் ஆட்சியில் சமணரின் ‘கழுவேற்றம்’ முதல், மதங்களின் பெயரால் நடந்த அதிநீண்ட போரான ‘சிலுவை யுத்தம்’ வரை, அறம் சார்ந்த காரணங்களிலும் வலியதாக அரசியல் காரணங்கள் இருந்துள்ளன.
பல மதங்களையும் பிறப்பித்த சமூகச் சூழல்கள் இன்று இல்லை. மத நடைமுறைகள், முதலாளித்துவச் சூழுலுடன் பெருமளவும் இணங்கியுள்ளன. முதலாளித்துவ விழுமியங்களுடன், வலிதாக முரண்பட்ட மதங்களை, முதலாளித்துவம் தனக்கு வாய்ப்பாக்குகிறது.
முதலாளித்துவத்தின் பயனாக, முதலாளித்துவ ஜனநாயகமும் தேசங்களும் தேச அரசுகளும் தோன்றின. ஆயினும், தனது இருப்பை மிரட்டும் எதையும் ஏற்காத முதலாளித்துவம் தேசியத்தின் பெயரால், தேசங்களை ஒடுக்குகிறது.
ஜனநாயகத்தின் மூலம் தனது ஆட்சியைப் பேணவிலாதபோது, சர்வாதிகாரமாகிறது. அதற்குப் பாசிசம் துணையாகிறது.
பாசிசம் என்பது, முதலாளித்துவ ஜனநாயகம் வலுவற்றுப் போகையில், அதனிடத்தில் வரும் பகிரங்க சர்வாதிகாரப் பிரதியீடாகும்.
மக்களுக்கு வெறியூட்ட, தேசிய உணர்வைவிட மத உணர்வு வலுவானது என்பதால், சோவியத் ஒன்றியத்தை வலு விழக்கச்செய்ய, இஸ்லாமிய மதவாதத்தைப் பாவித்த ஏகாதிபத்தியம், அதைச் சீனாவிலும் பின்னர் பிற நாடுகளிலும் பாவித்தது. இதன் இன்னொரு கட்டம் இப்போது அரங்கேறுகிறது.
அதேவேளை, நவீன தென்னாசிய இந்து, பௌத்த மதவாதங்கள், நேரடி ஏகாதிபத்திய ஊக்குவிப்பின்றி 20 ஆண்டுகளுக்கும் மேல் செழித்தன. இந்தியாவில் இப்போது ஆட்சிலுள்ள இந்துத்துவ பாசிசக் கட்சி, மத அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறது.
இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் பெயரில் அரசியலை முன்னெடுத்த பாசிசக் கட்சி, ஆட்சியில் இல்லாவிடினும் ஆட்சிகளில் அதற்குச் செல்வாக்குண்டு. முஸ்லிம்களைக் இலக்கு வைக்கும் சிங்கள-பௌத்த பாசிச வெறியர்களுடன், நேரடி உறவில்லாதபோதும், பாசிச வெறியர்களைக் காக்க அது முன்னிற்கிறது.
அரசாங்கத்தையும் அதிலும் வலுவான அரச இயந்திரத்தையும் சிங்கள பௌத்த பாசிசச் சிந்தனை ஆழ ஊடுருவி வருகிறது. மியான்மாரின் ‘ஜனநாயக மீட்சி’யையொட்டி, பர்மிய – பௌத்த பாசிசம் வலுவுடன் எழுந்தது. அதன் பயனாக முஸ்லிம்களான றோகிஞ்சாக்கள் படும் இன்னல்களை நாமறிவோம்.
இன்று மேற்குலகுக்கோ அல்லது மனித உரிமைக் காவலர்களுக்கோ, இந்தியாவில் வலுக்கும் இந்துத்துவ பாசிச வெறியாட்டம் பற்றியோ, இலங்கையிலும் மியான்மாரிலும் பரவும் பௌத்த பாசிச வெறியாட்டம் பற்றியோ கவலையில்லை.
ஏனெனில், இந்துத்துவமும் தேசியவாத பௌத்தமும் மேற்குலகின் கட்டுப்பாட்டை ஏற்பதோடு, ஆசிய நாடுகளின் மக்களைப் பகைமூட்டிப் பிரிக்கும் பணியையும் செய்கின்றன. இதனால், மதத்தின் பெயரால் வலுப்பெறும் பாசிச அபாயம் பற்றிய விழிப்பை ஏற்படுத்தல் அவசியமானது.
பாசிசம் புதிய போக்குகள்
முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட, ஐரோப்பிய பாசிசக் குணவியல்புகளின் அடிப்படையில், பாசிச நிறுவனங்களாகக் கருதப் போதாத பாசிசப் போக்குகளையுடைய அரச, அரசியல் நிறுவனங்கள் பலவுள்ளன.
அதைவிட, அதிகாரத்தைப் பிடிக்க நவீன பாசிசம் பாவிக்கும் வழிமுறைகளும் ‘செவ்வியல் ஐரோப்பிய பாசிசம்’ பாவித்த ஜனரஞ்சக வழிமுறைகளும் வேறு. ஐரோப்பிய நவபாசிசம், முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளுள் தனது நகலிகளை நட்டுள்ளது.
அதனால், குறிப்பாக ஐரோப்பாவில், குடியேறிகளும் தொழிலாளி வர்க்கமும் இடதுசாரி இயக்கமும் பற்றிய பாசிச நிகழ்ச்சி நிரலின் முக்கிய கூறுகளை, ‘நடு-வலது’ கட்சிகள் மட்டுமன்றி ‘நடு-இடது’ கட்சிகளும் எளிதாக ஏற்கின்றன.
ஒரு காலத்தில் கொலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முற்போக்குச் சக்தியான தேசியவாதம், இரண்டாம் உலகப் போருக்குச் சிலகாலம் பின், சிலசமயம் மதத்தைத் தேசிய அடையாளமாக உள்வாங்கிப் பேரினவாதமாயும் குறுந் தேசியவாதமாயும் சீரழிந்த மூன்றாமுலக நாடுகளில், பாசிசம் வளமான விளைநிலத்தைக் கண்டது.
இத்தகைய அடையாள-அடிப்படை அரசியல், பழைய ஏகாதிபத்திய எதிர்ப்பை இழந்ததுடனன்றி, ஏகாதிபத்திய அனுசரணையை விருப்புடன் நாடி பாசிசக் குணவியல்புகளைப் பெறுகிறது. இருப்புக்கு ஒடுக்குமுறை தேவையாகும் போது, அது பாசிசமாகிறது. இத்தகைய பாசிச விருத்திகளை, யாரும் பொருட்படுத்துவதில்லை.
தென்னமெரிக்காவில், ஜனரஞ்சக முறைகளால் பாசிசம் அதிகாரத்துக்கு வருமளவுக்கு நிலைமைகள் முதிராதபோது, பாசிச ஆட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்திய உதவியுடன் இராணுவச் சதிப் புரட்சிகள் மூலம் அமைந்தன.
சட்டப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிய வலதுசாரித் தேசியவாதிகள், துருக்கியிலும் சிங்கப்பூரிலும் போன்று, அரசாங்கத்தை பாசிச ஆட்சியாக்கினும் மேற்குலக ஏகாதிபத்தியமும் ஊடகங்களும் அதைச் ஜனநாயகமாகவே, கருதும் போக்கு அதிகரித்து வந்துள்ளது.
போர்க்குணமுள்ள அதிதேசியவாத, அடிப்படைவாதக் கட்சிகளை நவ-பாசஸிஸக் கட்சிகளாகக் கருதும் அதேவேளை, அவற்றின் எதிரிணைகளுக்கு விலக்களிக்கும் ஆபத்தான போக்கும் உள்ளது.
மியான்மாரின் அரக்கன் தேசியக் கட்சி, சித்தாந்தத் தளத்தில், ம.ப.த.வினும் 969 இயக்கத்தினும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இலங்கையின் ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனவிலும் சிங்ஹல ராவயவிலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல; இந்தியாவின் பா.ஜ.க, பஜ்ரங் தல்லிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் குறைந்த பாசிசக் கட்சியல்ல.
ஜனரஞ்சகப் பாசிசம் ஆபத்தானதாக மாறியுள்ளமையால் அதை கவனமாகவும் உறுதியாகவும் கையாள வேண்டியது அவசியம். அதற்கான வலு அரசுகளிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான வலுவை ஏற்படுத்தும் தேவையை அரசுகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன.
அவை, இந்த ஜனரஞ்சகப் பாசிசத்தைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசம் போலன்றி, நவீன பாசிசம் தனது வேலைத்திட்டத்தை அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் இயங்கும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுகிறது.
இப்பின்னணியிலேயே, வலது திசை நோக்கிய அரசியல் விலகலைப் பேணுவதில் ஆட்சியாளர்கள் குறியாயுள்ளார்கள். உலக முதலாளித்துவமும் முதலாளித்துவ ஜனநாயக அரசியலும் அதிதேசியவாதத்தையும் குடிவரவு எதிர்ப்பையும் முஸ்லிம் விரோத இனவாதத்தையும் பற்றிப் பொறுமை காக்கின்றன.
மூன்றாமுலகின் பாசிச எதிர்ப்பாளர்கள், குறிப்பாகச் சமூக நீதிக்கான வெகுசனப் போராட்டங்கள் தொடர்பாக, பாசிசப் போக்குகளுக்கு ஏகாதிபத்தியம் வழங்கும் செயலூக்க ஆதரவையும் செயலின்மை ஆதரவையும் பற்றி விழிப்போடிருக்க வேண்டும்.
நவகொலனியத்தின் புதிய கட்டம்
கொலனி யுகத்தில் அதிகம் கவனமீர்க்காத முரண்பாடுகள் பற்றிக் கவனமெடுக்குமாறு நவகொலனியச் சூழல் வேண்டுகிறது. அம் முரண்பாடுகளுள் பல்லின நாடுகளின் தேசிய இன முரண்பாடுகளும் பழங்குடிகளின் தேசிய இன உரிமைகளும், சாதிப் பாகுபாடும் ஒடுக்குமுறையும் அனைத்திலும் மேலாகப் பால்நிலைப் பிரச்சினைகளும் அடங்கும்.
பல்வேறு சமூக முரண்பாடுகளுக்கும் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டுக்குமுள்ள உறவை, மனத்தில் இருத்துவதும் வர்க்கப் போராட்டத்தை முக்கிய இணைப்பாகக் கொள்வதும் முக்கியம்.
மனிதச் சுற்றாடலின் சேதம், நெருக்கடி மட்டத்தை எட்டியுள்ளதுடன் இக்கோளத்தில் மனித இருப்பை மிரட்டுகிறது. இந்நெருக்கடிக்கு முதலாளித்துவத்திடம் விடையில்லை. நெருக்கடியின் பிரதான காரணம், முதலாளித்துவமே எனக் கூறப் பசுமை அரசியல் தவறுகிறது.
இது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தேசங்கள் மீதும் பிரச்சினையின் சுமையை ஏற்றுகிறது. முதலாளித்துவத்தின் இலாபப் பேரவாவின் விளைவுகளான நுகர்வுப் பழக்கத்தையும் கழிவின் பெருக்கத்தையும் பல்தேசியக் கம்பெனிகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் மூன்றாமுலகின் மீது திணிக்கின்றன.
மூன்றாமுலகில் போரையும் உள்நாட்டுப் போரையும் ஏகாதிபத்தியமே பேணுகிறது. மோதல்கள், முன்கண்டிராத சதவீதத்தில் மக்களிடத்தில் இடப் பெயர்வை ஏற்படுத்தியுள்ளன.
மூன்றாமுலகிலிருந்து வறுமையாலும் மோதல்களாலும் நிகழும் இடப்பெயர்வு, விருத்திபெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மலிவான, பணிவான உழைப்பாளர்களை வழங்குகின்றது. அத னோடு சேர்ந்து, பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், நிறவாதமும் நவீன பாசிசமும் மீள எழுந்துள்ளன.
அண்மைய தசாப்தங்களில், தெரிந்தெடுத்த நாடுகளில் இறைமைக்குக் குழிபறிக்கவும் உள்நாட்டுப் போரை ஊக்குவிக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் மக்கள் பிரிவினரின் நியாயமான மனக்குறைகளை, ஏகாதிபத்தியம் தனக்கு வந்தவாறு பயன்படுத்தியுள்ளதால், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பற்றி, ஏகாதிபத்தியத்தின் புதிய கரிசனையைக் கவனமாகச் சோதிக்கவேண்டும்.
இன்றைய உலக அரசியல் அரங்கின் குறுக்குவெட்டு முகத்தோற்றம் மிகவும் குழப்பமான, நெருக்கடியான சித்திரத்தையே தருகிறது. அதேவேளை, ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான தௌ்ளத் தெளிவான பிரிகோடு, தோற்றம் பெறுவதையும் மறுப்பதற்கில்லை.
இது உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் போராடுவதைத் தவிர வழிவேறில்லை என்பதை உணர்த்துகிறது.
Average Rating