‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்!!( கட்டுரை )

Read Time:13 Minute, 52 Second

போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார்.

“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தைத் தோற்கடித்த போதும், இன்னமும் அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளின் அணி திரளுகிறார்கள். நான், அண்மையில் இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, போராட்டம் நடத்தினார்கள்” என்று அப்போது கூறியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து, வெறுமனே புலிகளின் கொள்கை தோற்கடிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கானதாக அமையவில்லை.

புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை என்ற கருத்தை, அவர் அண்மைய நாட்களாகவே கூறி வந்திருக்கிறார்.

அதற்கு அப்பால், நாட்டைப் பிளவுபடுத்தும் இலக்குடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளில் ஒருங்கிணைகிறார்கள் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது கிட்டத்தட்ட, எச்சரிக்கை செய்யும் தொனியிலானது. அவர் யாரை எச்சரிக்கிறார், என்பது முக்கியமானது. ஏன், இவ்வாறான ஓர் எச்சரிக்கையை, இத்தகைய தருணத்தில், அவர் வெளியிட முனைந்திருக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

1970களில் இருந்தே, விடுதலைப் புலிகள் அல்லது தீவிரவாதத்தைக் காரணம் காட்டி, அரசியல் நடத்துவது, தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலையாகி விட்டது.

சிங்கள மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக – அவர்களுக்குப் பயம்காட்டி, தமது பக்கம் இழுப்பதற்கான ஒரு பூச்சாண்டியாகவே, இந்தத் தீவிரவாதம் அல்லது பிரிவினைவாதம் என்ற விடயம் கையாளப்பட்டு வந்திருக்கிறது.

தாம் ஆட்சிக்கு வந்தும், தீவிரவாதத்தை அடியோடு அழிப்போம்; விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்போம் என்று சூளுரைப்பதும், வாக்குறுதி கொடுப்பதும், 2009 வரை சிங்கள அரசியல்வாதிகளின் தேர்தல் உபாயங்களில் ஒன்றாக இருந்தது.

எத்தனையோ ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் இந்தச் சவால்களை விடுத்திருந்தார்கள். ஆனாலும், அதை நடைமுறைப்படுத்திக் காட்டியது, மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் மட்டுமே.

அதனால்தான், மஹிந்த ராஜபக்‌ஷவால் இப்போதும், சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாக வலம் வர முடிகிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பெருமையை வைத்துக் கொண்டு, அரசியல் வண்டியை ஓட்டிய சிங்கள அரசியல்வாதிகள், இப்போது, அந்த வெற்றி மாயை ஒளியிழக்கத் தொடங்கியுள்ளதை உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில், சிங்கள மக்களை உசுப்பேற்றவும், அவர்களின் கவனத்தைத் தமது பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு மாற்று உபாயம் ஒன்று தேவைப்படுகிறது.

இந்தநிலையில்தான், இப்போது மீண்டும் தீவிரவாதம், விடுதலைப் புலிகள் என்று பூச்சாண்டி காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். புலிகளை அழித்த போதும், அவர்களின் கொள்கையை அழிக்க முடியவில்லை என்றும், அவர்கள் வெளிநாடுகளில் பலமாக இருக்கிறார்கள், ஒருங்கிணைகிறார்கள் என்றும் புயலைக் கிளப்பி விட முனைகிறார்கள்.

தெற்கிலுள்ள அரசியல் தரப்பினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

தற்போதைய அரசாங்கத் தரப்பு ஒன்று; அதற்கு எதிரான தரப்பு ஒன்று. இரண்டுமே இப்போது தீவிரவாதம், விடுதலைப் புலிகள் என்ற விடயத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில் வெவ்வேறு உபாயங்களைக் கையாளுகின்றன.

அரசாங்கத் தரப்போ, உள்நாட்டில் தீவிரவாதக் கொள்கைகள் வலுப்பெறுகிறது என்று கூறத் தயாரில்லை. வெளிநாடுகளிலேயே புலிகள் ஒருங்கிணைகிறார்கள் என்ற பூச்சாண்டியைக் காட்ட முனைகிறது.

ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான தரப்பு, அரசாங்கத்தின் தவறால் உள்நாட்டில் கூட, புலிகள் பலம்பெறுகிறார்கள் என்று காண்பிக்க முனைகிறது.

அண்மையில் நடந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிறுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினர் வெளியிட்ட கருத்துகளைப் பார்த்தால், ஏதோ புலிகள் மீண்டும் வந்து விட்டார்கள் என்பது போல உள்ளன.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “மீண்டும் தமிழ் மக்களுடன், ஆயுதப் போர் ஒன்றை நடத்தும் நிலைக்குச் செல்ல நேரிடலாம்” என்று எச்சரித்திருக்கிறார்.

1970களில் வடக்கில் காணப்பட்ட நிலை, மீண்டும் தோன்றியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். 1970கள் தான், ஆயுதப் போராட்டம் முகிழ் விட்ட காலம்.

அத்தகைய காலம் மீண்டும் தோன்றியிருப்பதாக, கோட்டாபய ராஜபக்‌ஷ உண்மையிலேயே உணருகிறாரா அல்லது அப்படியான நிலை மீண்டும் வருகிறது என்று, சிங்கள மக்களை மிரள வைக்க முனைகிறாரா?
1970களில், ஆயுதப் போராட்டம் முளை விட்டமைக்கான காரணம் என்ன என்பதை, கோட்டாபய ராஜபக்‌ஷவோ, நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக, வெளிநாடுகளில் தீவிரவாதிகள் மீண்டும் அணி திரளுகிறார்கள் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஏன் அவ்வாறான நிலை ஏற்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

தமிழ் இளைஞர்கள், 1970களில் ஆயுதமேந்தும் நிலைக்குக் காரணமாக இருந்தது, தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதம், அடக்குமுறை, மற்றும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமைதான்.

அந்தச் சூழலுடன் ஒப்பிடும்போது, இப்போது ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? இல்லை என்பதே பதிலாகும்.

கோட்டாபய ராஜபக்‌ஷ அங்கம் வகித்த அவரது அண்ணனின் அரசாங்கமோ, மைத்திரிபால சிறிசேனவின் இப்போதைய அரசாங்கமோ, தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக, அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

எனவே, மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் முளை விடுமோ என்ற அச்சம், அவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

தாம், தமது கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்று உணரும், சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவருக்குமே ஓர் அச்சம் இருக்கும். அதை அச்சம் என்பதை விட, அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வு என்பதே சரி.

அந்த உணர்வுதான், அவர்களை எச்சரிக்கிறது. தாம் நல்லிணக்கத்தை, நிலையான அமைதியை ஏற்படுத்தாத நிலையில், தமக்கு முன்னர் இருந்தவர்கள் விட்ட அதே தவறையே தாமும் செய்து கொண்டிருக்கிறோம், என்ற முன்னெச்சரிக்கை அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

அதுமாத்திரமன்றி, காலம் காலமாகவே, போரை முடிவுக்குக் கொண்டு வருதல், தீவிரவாதத்தைத் தோற்கடித்தல் போன்ற கோசங்கள்தான், சிங்கள மக்களுக்கு இனிப்பான தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.

அதை மீண்டும் தூசிதட்ட வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

மூன்று தசாப்த காலப்போர், சிங்கள மக்களுக்குள் ஒருவித வெற்றித் தாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அது 2009இல், முழுமையாக அடக்கப்படவில்லை. அவ்வாறான தாகம், அடக்கப்படுவதையும் சிங்கள அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

ஏனென்றால், அந்தத் தாகம் அடக்கப்பட்டு விட்டால், அவர்களில் பெரும்பாலானோருக்கு, அபிவிருத்தி சார்ந்த, அறிவு சார்ந்த அரசியலை முன்னெடுக்கத் தெரியாது.

தீவிரவாதம், பிரிவினை, விடுதலைப் புலிகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தியே தேர்தல்களை எதிர்கொண்டு பழகிய அவர்கள், அந்தப் பூச்சாண்டியைத் தான் இப்போதும் நம்பியிருக்கிறார்கள்.

அதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவோ, கோட்டாபய ராஜபக்‌ஷவோ மாத்திரமன்றி மைத்திரிபால சிறிசேனவும் கூட விதிவிலக்கானவர் அல்ல.தேசியபோர் வீரர்கள் நினைவு நிகழ்வில், ஜனாதிபதியின் உரை அதைத் தான் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தமது அரசாங்கம், மூன்று ஆண்டுகளாகப் புலிகளின் கொள்கையைத் தோற்கடிப்பதற்கு, வெளிநாடுகளுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள், வெற்றி பெறவில்லை என்று, அவர் கூறியிருக்கிறார். அதைத் தோற்கடிக்க, ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

எனினும், விடுதலைப் புலிகளின் கொள்கையைத் தோற்கடிப்பதற்குத் தனது அரசாங்கம், அறிவுசார் முறையில் எதைச் செய்திருக்கிறது என்பதை, ஜனாதிபதி ஒருபோதும் மீளாய்வு செய்திருக்கவில்லை என்பதையே, அவரது இந்தக் கருத்து உணர்த்துகிறது.

தமிழ் மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிலையான அமைதியை, அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தாமல், இன்னொரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில்தான், அவர் இவ்வாறு பேசத் தொடங்கியிருக்கிறார்.

தமது இயலாமைகளை மறைக்க, அவர்களுக்கு மீண்டும் தீவிரவாதம், பிரிவினைவாதம் என்ற பூச்சாண்டி தேவைப்படுகிறது. தேர்தல்கள் நெருங்க நெருங்க, இன்னும் பல பூச்சாண்டிப் பூதங்கள் வெளியே வரும். அவற்றை நம்பியே அரசியல் நடத்திப் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, அதிலிருந்து வெளியே வரத் தெரியாது.

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தெரியாத, புலிப் பூச்சாண்டியை மட்டுமே நம்பி, அரசியல் செய்து பழக்கப்பட்டு விட்ட, சிங்கள அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், புலிகள், வெளிநாடுகளில் உயிர்ப்புடன் இருப்பதே நல்லது.

அப்போது தான் அவர்களால், இந்தப் பூச்சாண்டிகளைக் காட்டி, சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்! (வீடியோ)
Next post சொரியாசிஸின் அடுத்த நிலை!!(மருத்துவம்)