வட பகுதி நினைவேந்தல்களும் தென் பகுதி அச்சங்களும்!!( கட்டுரை )

Read Time:18 Minute, 28 Second

சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறிய ஒரு கருத்து, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.

முள்ளிவாய்க்காலில், போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூருவது தொடர்பாக, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டு இருந்தார்.
“அவ்வாறு போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்று அமைச்சர் கூறியதே, தெற்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

“தமிழர்கள் சிலர், மே 18 ஆம் திகதியை இன அழிப்பு நாளெனக் குறிப்பிடுகிறார்களே” என்று கேட்டதற்கும் அமைச்சர், “மக்கள் விடுதலை முன்னணியினருக்குக் கிளர்ச்சியில் கொல்லப்பட்ட தமது சகாக்களை நினைவு கூர முடியும் என்றால், தமிழ் மக்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது” என்றே பதிலளித்தார். ‘இன அழிப்பு நாள்’ என்று குறிப்பிடுவதைப் பற்றி, அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

“போரின் போது, வடக்கில் கொல்லப்பட்டவர்களும் இந்நாட்டின் புதல்வர்களே” என்றும் அமைச்சர் கூறினார். இப்போது, அந்த ‘புதல்வர்’ என்ற சொல்லும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

அவ்வாறாயின், கண்டி தலதா மாளிகையைக் குண்டேற்றிய லொறியொன்றின் மூலம் தாக்கியவர்களும் ராஜிதவின் புதல்வர்களா? தெஹிவளையில் ரயிலொன்றில் குண்டு வைத்து, நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்றவர்கள் ராஜிதவின் புதல்வர்களா என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வடக்கில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமன்றி, புலிகளும் இந்நாட்டின் புதல்வர்கள் என்ற கருத்தைக் கூறிய முதலாவது சிங்கள அரசியல்வாதி ராஜித அல்ல.

போரின் இறுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 11,000க்கும் மேற்பட்ட போராளிகளைப் புனர்வாழ்வளித்து, ஏன் விடுதலை செய்தீர்கள் என்று மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேட்டால், அவர் என்ன பதிலைத் தரப் போகிறார்? அவர்களும் இந்நாட்டு மக்கள் என்றுதான் அவரும் பதிலளிப்பார்.

நாட்டின் தென் பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியும் வடக்கில் புலிகளும் நடத்திய கிளர்ச்சிகளில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில், தமது போர்க்கள சகாக்களை அவ்விரண்டு இயக்கங்களும் வருடாந்தம் நினைவுகூர்கின்றன.

இன்று புலிகள் நாட்டுக்குள் அந்தப் பெயரில் இயங்காவிட்டாலும், புலிகளின் ஆதரவாளர்கள் என்ற முறையிலேயே, வடக்கில் கொல்லப்பட்ட புலிப் போராளிகளை, இப்போது சிலர் நினைவு கூர்கின்றனர்.
இவ்விரண்டு இயக்கங்களும் வருடத்தில் இரண்டு நாட்களில் இவ்வாறு நினைவேந்தல்களை நடத்துகின்றன.

மக்கள் விடுதலை முன்னணி, தமது முதலாவது கிளர்ச்சி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதால், ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் ஐந்தாம் திகதியும் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி, அவ்வமைப்பின் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டதால், அதன் பின்னர், ஒவ்வோர் ஆண்டிலும் நவம்பர் மாதம் 13 திகதி கொல்லப்பட்ட தமது சகாக்களை நினைவு கூர்கிறது.

புலிகளும் கொல்லப்பட்ட தமது முதலாவது போராளியான சங்கரின் நினைவாக, நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். போரில் புலிகள் தோல்வியடைந்ததன் பின்னர், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மே மாதம் 18 ஆம் திகதியில், மற்றொரு நினைவேந்தலைத் தமிழ் அரசியல்வாதிகள் நடத்துகின்றனர்.

பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட போதிலும், அன்று பிரபாகரன் கொல்லப்பட்ட பிரதேசத்தில், இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய, தற்போது ஓய்வு பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கடந்த 13 ஆம் திகதி, ‘லங்காதீப’ வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியில், பிரபாகரன் மே மாதம் 19 ஆம் திகதி கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.

“18 ஆம் திகதி இரவு நடந்த சண்டையில், இறந்தவர்களின் சடலங்களைச் சோதனையிட்ட போது, பிரபாகரனின் சடலம் காணப்படவில்லை. மறுநாள் காலையில், இறுதியாக நடைபெற்ற சண்டையின் பின்னர், கொல்லப்பட்டவர்களின் சடலங்களைச் சோதனையிடும் போதே, பிரபாகரனின் சடலம் காணப்பட்டது” எனவும் அவர் கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நினைவுகூரல்கள், சட்டவிரோதமானவையாகவோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ தற்போது எவரும் கருதுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அக்கட்சி சோஷலிஸத்தையே தமது இலட்சியமாகக் கொண்டுள்ளது. நடைமுறையில், முதலாளித்துவ கொள்கையுள்ளவர்கள் வெளிப்படையாகப் பேசும்போது, சோஷலிஸத்தை பயங்கரமான கொள்கையாகக் கருதுவதோ, எதிர்ப்பதோ இல்லை.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, இரண்டு முறை கிளர்ச்சிகளில் ஈடுபட்டாலும், அதன் தலைவர்கள் பலமுறை வன்முறை அரசியலை மறுத்து, பின்னர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், எவ்வளவு தான் நேர்மையாகச் செயற்பட்டாலும் அக் கட்சிக்கு பாரியளவில் மக்கள் ஆதரவு இல்லை. எனவே அவர்கள், ஆட்சிக்கு வருவார்கள் என்ற பிரச்சினையும் எவருக்கும் இல்லை.

ஆனால், புலிகளை நினைவு கூரும் விடயம், அதை விட வித்தியாசமானது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றால், புலிகள் பற்றிய மக்கள் அபிப்பிராயம் வளர்ந்து, மீண்டும் புலிகள் தலை தூக்கினால், மீண்டும் நாட்டில் போர் வெடிக்கும் எனத் தெற்கில் பலர் அஞ்சுகிறார்கள்.

ஏனெனில், இந்த நினைவேந்தல்களின் மூலம், தற்போதைய இளைஞர்கள், புலிகளின் இலட்சியத்தின் பால் ஈர்க்கப்படலாம். புலிகளின் இலட்சியம், தனித் தமிழ் ஈழமே. அதை ஒரு போதும் சாத்வீகமாகப் பெற்றுக் கொள்ள முடியாது. சண்டை மூலமே, அதை அடைந்தால் அடைய முடியும்.

புலிகளின் இலட்சியத்தையும் அதற்கான வழிமுறையையும், தென் பகுதி அரசியல்வாதிகளும் மக்களும் வெறுக்கின்றனர். அதேவேளை, தமிழர் அரசியலின் எந்த அம்ச‍ங்களையும் எதிர்க்கும் இனவாதப் போக்கும், இந்த எதிர்ப்புகளில் உள்ளடப்பட்டுள்ளன.

வடபகுதி அரசியல்வாதிகள், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் போது, புலிகளுக்கு முக்கியமான இரண்டு நாட்களிலேயே அவர்களை நினைவு கூருகின்றனர். அவற்றில், ஒரு நாளான மாவீரர் நாள் என்பது, புலிகள் இயக்கத்தாலேயே திகதி குறிப்பிடப்பட்டு, அவ்வியக்கத்தின் தலைமையில் நடத்தப்பட்டு வந்த நாளாகும்.

முள்ளிவாக்கால் தினமானது, புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட நாளாகவும், எனவே இவை, புலிகளின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த நினைவேந்தல்களைப் பலர் கருதுகின்றனர்.
எனவேதான், வடக்கில் நினைவு கூரப்படுவது போரில் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் அல்ல; புலிகள்தான் என்ற நிலைப்பாட்டில், தென்பகுதி அரசியல்வாதிகளும் மக்களும் ஊடகங்களும் உறுதியாக இருந்து, அவற்றை விமர்சித்து வருகின்றன.

இதற்குப் பதிலளிக்கும் தமிழ் அரசியல்வாதிகள், “போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர, கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிமை இருக்கிறது” என்று கூறுகின்றனர்.

அவர்கள், தாம் புலிகளை நினைவு கூருவதாக, அவ்வாறு பதிலளிக்கும் போது கூறுவதில்லை. இதன் மூலம், புலிகளை நினைவு கூர்வது பிழையென அவர்கள் தென்பகுதி மக்களுக்குக் கூறுகிறார்கள் போல்த்தான் தெரிகிறது.

புலிகளின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் வரிகள், கடுமையான கட்டுப்பாடுகள், கடுமையான தண்டனைகள், வருடக் கணக்கில் ரயில் சேவை, பஸ்சேவை மற்றும் தபால் சேவை போன்றவற்றை சீர்குலைத்தமை, கிழக்கில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது, போலல்லாது, வடக்கில் போரின் போது, தாம் பின்வாங்கும் போது, மக்களையும் இடம்பெயரச் செய்தமை ஆகியவற்றால், மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால், மக்கள் புலிகளை நேசித்தார்கள்; மதித்தார்கள். புலிகள் தோல்வியுறும் போது, அவர்களை விரும்பாத தமிழர்களும் அந்தத் தோல்வியை விரும்பவில்லை. ஏனெனில், சிங்களப் படையால் தமிழ்ப் படையொன்றுக்கு ஏற்பட்ட தோல்வியாக, அவர்கள் அதைப் பார்த்தனர்.

புலிகளால் கடைசி வரை வேட்டையாடப்பட்ட ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும், அப்போது மகிழ்ச்சியடையா விட்டாலும் சிலவேளை ஆறுதல் அடைந்திருப்பார்கள்.
தமிழ் மக்களின் இந்த இன உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பதாலேயே, வட பகுதி நினைவேந்தல்களைத் தென்பகுதி அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் விமர்சிக்கின்றனர்.

மறுபுறத்தில், அரசியல் ஆதாயத்துக்காகவும் உள்ளார்ந்த இனவாதத்தாலும் இந்த நினைவேந்தல்களை விமர்சிப்போருக்குப் புறம்பாக, நேர்மையாகவே இவற்றால் நாட்டில் மீண்டும் இனப்போர் வெடிக்குமோ என்ற உண்மையான அக்கறையுடன் அவற்றை விமர்சிப்பவர்களும் தெற்கே இருக்கின்றனர்.

அந்த உண்மையான உணர்வுகளைத் தமிழர்களில் எத்தனைப்பேர், உணர்ந்து இருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே.

இந்த நினைவேந்தல்களின் போது, சாதாரண மக்கள் தமது உறவினர்களின் இழப்புக்காகக் கண்ணீர் வடித்துக் கதறி அழுது, இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.

அதேவேளை, அரசியல்வாதிகள் புலிகளின் வீரத்தையும் தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் போற்றிப் புகழ்கிறார்கள். உண்மையிலேயே, அந்தத் தியாகங்களில் சில, சிந்தித்தும் பார்க்க முடியாதவை. தாம் சரியென நம்பும் ஓர் இலட்சியத்துக்காகத் தம்மையே வெடி குண்டாக மாற்றிக் கொள்வது, ஒன்றும் சாதாரண மனிதனால் செய்யக்கூடியதல்ல.

இது போன்றவற்றைச் செய்த சில இராணுவ வீரர்களும் இருந்தார்கள் தான். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் புலிகளின் வாகனத்தின் மீது ஏறி, அதையும் தம்மையும் வெடிக்கச் செய்த, ஹசலக்க காமினி என்ற இராணுவ வீரர் அதற்கு உதாரணமாகும். தென் பகுதி மக்கள் அதைப் போற்றிப் புகழ்கிறார்கள்.

அதேபோல், தம்மையே வெடி குண்டாக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் தமிழ் மக்கள் போற்றிப் புகழ்கிறார்கள். அவர்கள் தமக்காக, தமது விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்ததாகவே கருதுகிறார்கள்.

ஆனால், இவ்வாறு புலிகளின் தியாகங்களைப் புகழும் போது, தற்போதைய இளைஞர்களும் யுவதிகளும் அவற்றால் கவரப்பட்டு, அவற்றைத் தமக்கு உதாரணமாக்கிக் கொள்வார்களோ எனத் தென்பகுதி அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அதனால்தான், புலிப் போராளிகளின் மயானங்களை (மாவீரர் துயிலும் இல்லங்கள்) படையினர் சிதைத்தார்கள் என ஊகிக்கலாம்.

இந்த நிகழ்ச்சிகளின் போது, அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் போரின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்திலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள். தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்கிறார்கள். இவை உணர்வுகளைத் தூண்டக் கூடிய விடயங்களே.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி, அதாவது பிரபாகரனின் பிறந்த நாளன்று, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற 17 வயது மாணவன், அப்போது அரசியல் கைதிகளுக்காக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டங்களால் உணர்ச்சிவசப்பட்டு, கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலின் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் கூறின.

எனவே, இந்த ஆர்ப்பாட்டங்களோடு, புலிகளின் தியாகங்களின் பாலான ஈர்ப்பும் மற்றொரு போருக்கான மூலப் பொருள்களாகுமெனத் தென் பகுதியில் பலர் கருதுகின்றனர்.

சுருங்கக் கூறுவதாக இருந்தால், இந்த விடயத்தில் இரண்டு அம்சங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.

ஒன்று, புலிகளாக இருந்தாலும் சாதாரண மக்களாக இருந்தாலும் அவர்களின் இழப்புக்காகக் கண்ணீர் சிந்தவும் அவர்களது தியாகங்களைப் போற்றிப் புகழவும் தமிழர்களுக்கு இருக்கும் உரிமையை எவராலும் மறுக்க முடியுமா என்பதாகும்.

இரண்டாவது, அந்த உரிமையின் பிரகாரம் நடைபெறும் நினைவேந்தல்கள், மற்றோர் இனப்போருக்கு வித்திடாதா என்பதும் தமிழ்த் தலைவர்கள் அதை விரும்புவார்களா என்பதுமாகும்.

இந்த விடயத்தில், தெற்கையும் வடக்கையும் ஐக்கியப்படுத்துவது, முடிந்த காரியமாகத் தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாப்கின்க்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்கள்!!(வீடியோ)
Next post 240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்! (சினிமா செய்தி)