ட்ரம்ப்பின் முடிவால் பேராபத்து வருமா?(கட்டுரை)
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கருத்துகளைத் துருவப்படுத்தக்கூடிய உலகத் தலைவர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். அவரது நாட்டில் மாத்திரமல்ல, சர்வதேச அரங்கிலும் கூட, அந்நிலைமை தான் காணப்படுகிறது. அவரால், இலங்கை நேரப்படி நேற்று (09) அதிகாலை எடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான முடிவொன்று, முழு உலகத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கிறது என்பது தான், கவலைக்குரியது.
ஐ.அமெரிக்காவின் வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சி, தொடர்ச்சியாகவே, கடும்போக்கு வலதுசாரிகள் பக்கம் சென்றுகொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், அக்குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் தான், பரப்புரைவாதத்தை (populism) மையமாகக் கொண்ட அரசியலை, ட்ரம்ப் முன்னெடுத்திருந்தார். அவரது கொள்கைகள் என்ன என்பது தொடர்பில் இன்னமும் குழப்பம் நிலவினாலும், அவரது அரசியல், கடும்போக்கு வலதுசாரிகளை ஈர்த்திருக்கிறது என்பது தான் உண்மையாக இருக்கிறது.
அண்மைக்கால கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் கொள்கைகளான குடியேற்றவாசிகளையும் அகதிகளையும் வெறுத்தல்; பெரு நிறுவனங்களுக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்; காலநிலை மாற்றம் தொடர்பில் சந்தேகத்தை எழுப்புதல்; தனியார் மயப்படுத்தலில் ஆர்வத்தை வெளிப்படுத்துதல்; பேரம்பேசல்களை விடுத்து, போர் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துதல் என, அத்தனை விடயங்களையும், ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தான், ஈரானின் அணுவாயுப் பலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இவ்வொப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகளோடு, ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டிருந்த நிலையில், ஐ.அமெரிக்கா மட்டும் விலகுவதானது, எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும், ஏனைய நாடுகளின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது, இதுவரை தெளிவில்லாமல் இருக்கிறது.
ஆனால், ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்திருக்கும் இம்முடிவு, ஒப்பந்தத்தை இல்லாது செய்யுமாயின், உலகில் பேரழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பது தான், இங்குள்ள சவாலாக இருக்கிறது. ஏனென்றால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் போது, ஈரான் மீது சிறியளவிலான பரிதாபம் போன்ற உணர்வு ஏற்பட்டாலும், ஈரான் என்பது, அண்மைக்காலத்தில் சவூதி அரேபியா போன்ற நாடுகளளவுக்கு, மிலேச்சத்தனமான செயற்பாடுகளைப் புரியக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது. அண்மைக்காலத்தில், மிதவாதிகள் தங்களது குரல்களை உயர்த்தி வந்தாலும் கூட, அந்நாட்டில் இன்னமும், கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்ட மதத் தலைவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இந்த ஒப்பந்தம், பரிபூரணமான, முழுமைபெற்ற ஓர் ஒப்பந்தம் கிடையாது என்பதை, கிட்டத்தட்ட அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், இரண்டு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், இதைவிடச் சிறந்ததோர் ஒப்பந்தத்தை உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அணுக்குண்டைத் தயாரிப்பதற்காக யுரேனியத்தைச் செறிவூட்டும் நடவடிக்கைகளை, ஈரான் நிறுத்துவதோடு, தங்களது அணுசக்தி ஆய்வுகூடங்களைப் பரிசோதிப்பதற்கு, ஐக்கிய நாடுகளுக்கு அனுமதி வழங்கும். இதன்மூலமாக, ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, சுமார் 3 மாதங்களில் அணுக்குண்டைத் தயாரிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்ததாகக் கருதப்படும் ஈரான், 2031ஆம் ஆண்டுவரை, சோதனைகளை அனுமதிக்க வேண்டியுள்ள நிலையில், அணுக்குண்டைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்காது. ஒப்பந்தத்திலிருந்து விலகி, ஓராண்டின் பின்னர் தான், அணுக்குண்டைத் தயாரிக்க முடியுமென்ற நிலை காணப்பட்டது.
மறுபக்கமாக, ஈரானின் அணுக்குண்டுச் செயற்றிட்டங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் பல, இவ்வொப்பந்தத்தின் காரணமாக நீக்கப்பட்டன.
இவ்வாறு காணப்பட்ட ஒப்பந்தத்தைத் தான், “வரலாற்றில் மிக மோசமான ஒப்பந்தம்” என வர்ணித்த ஜனாதிபதி ட்ரம்ப், அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். “இவ்வொப்பந்தம் காரணமாக, ஐ.அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்பது தான், அவரது விமர்சனமாக இருக்கிறது. தன்னை, மிகச்சிறந்த பேரம்பேசுநராகக் காட்டிக்கொள்ளும் அவர், ஐ.அமெரிக்காவுக்கு நேரடியாக ஏதாவது கிடைக்க வேண்டும் என்பதைக் காரணமாகக் கூறிவருகிறார்.
ஆனால், ஐ.அமெரிக்காவுக்கு நேரடியாக எதுவும் கிடைக்கவில்லை என்பதைப் போல, ஈரானின் அணுக்குண்டுச் செயற்றிட்டம் காரணமாக, ஐ.அமெரிக்காவுக்கு நேரடியாக எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுவும் உண்மையானது. தனக்கு நேரடியான பாதிப்பு ஏற்படாத ஒரு திட்டத்துக்காக, ஐ.அமெரிக்கா எதற்காகத் தடைகளை விதித்தது?
ஈரானின் அணுக்குண்டுச் செயற்றிட்டம் என்பது, உலகின் அமைதியைப் பாதிக்கக்கூடிய ஒன்று. உலகின் அமைதி பாதிக்கப்படுவது என்று வரும் போது, ஐ.அமெரிக்காவும் தான் பாதிக்கப்படும். அதைவிட முக்கியமாக, உலகின் பொலிஸ்காரனானத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஐ.அமெரிக்கா, அணுக்குண்டுப் பலம் மிகுந்த இன்னொடு நாடு உருவாகும் போது, தனது செல்வாக்குக் குறையுமென அஞ்சியது.
இவையனைத்தும் தான், இவ்வொப்பந்தத்தை மேற்கொள்வதற்கான காரணங்களாக அமைந்தன. இவ்வாறான சவால்கள் அனைத்தும், ஐ.அமெரிக்காவுக்கு இல்லாமல் போகின்றன என்பதே, முக்கியமான ஒரு விடயமல்லவா? இதைவிட, வேறென்ன மாதிரியான நன்மைகள், ஐ.அமெரிக்காவுக்குக் கிடைக்க வேண்டுமென, ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்?
இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, இவ்வொப்பந்தத்தில் இருக்கின்ற பிரச்சினை, அதில் ஐ.அமெரிக்காவுக்கு என்ன நன்மை, என்ன தீமை என்பது கிடையாது; மாறாக, அந்த ஒப்பந்தத்தை யார் முன்னின்று நடத்தினார்கள் என்பது தான் என்ற விமர்சனமும் இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் தான், இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பராக் ஒபாமாவின் ஜனாதிபதிப் பதவியின் அடைவுகளையெல்லாம் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற, தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகத் தான், இந்நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார் என்று சொல்வோரும் உளர்.
அவர்களின் கருத்திலும் உண்மையில்லாமலில்லை. ட்ரம்ப்பின் வாழ்க்கையில் பல தருணங்களிலும், கறுப்பினத்தவர் மீதான பாகுபாட்டையும் வெறுப்பையும் அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். 1970களில், கறுப்பினத்தவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்காமை காரணமாக, ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 1980களிலும் அது தொடர்ந்தது. அதிலும் முக்கியமாக, தவறான முறையில் கைதுசெய்யப்பட்ட கறுப்பின இளைஞர்களை இலக்குவைத்து, அப்போதைய காலத்தில் 85,000 ஐ.அமெரிக்க டொலர்களைச் செலவளித்து, பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னர், ஐ.அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமா, ஐ.அமெரிக்காவில் பிறக்கவில்லை எனவும், கென்யாவில் பிறந்தார் எனவும் தெரிவித்து, மாபெரும் இனவாத இயக்கமொன்றை, ட்ரம்ப் முன்னெடுத்தார். தனது பிறப்புச் சான்றிதழை ஒபாமா சமர்ப்பித்த பின்னரும் கூட, அதை ஏற்றுக்கொள்ளாமல், அந்தப் பிரசாரத்தை, ட்ரம்ப் தொடர்ந்திருந்தார்.
அதேபோல், ஜனாதிபதியாக மாறிய பின்னரும், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின் போது, ஏதாவதொரு விடயம் தொடர்பாக முடிவெடுக்கும் போது, “இவ்விடயத்தில் பராக் ஒபாமாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?” எனக் கேட்டுவிட்டு, அதற்கு மாறான முடிவையே ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்தார் என, ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
பராக் ஒபாமாவின் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட, காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை எடுத்தமை; மக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்கும் ஒபாமாகெயார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளை எடுத்தமை எல்லாமே, பராக் ஒபாமா மீதான வெறுப்பின் பால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களாகவே கருதப்பட வேண்டியிருக்கிறது.
இவ்வாறு, தனிநபர் ஒருவர் மீதான வெறுப்புக் காரணமாக, உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர் முன்னெடுக்கும் இச்செயற்பாடுகள், உலகைப் பேரழிவுக்குத் தள்ளிவிடக்கூடாது என்பது தான், இங்கு முக்கியமான விடயமாக இருக்கிறது.
Average Rating