நிஜமாகாத கொள்கை அறிக்கைகள்!!(கட்டுரை)
இலங்கையில், 33 நாட்கள் மட்டுமே ஒரு அரசாங்கம் பதவியில் இருந்துள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கமே அதுவாகும். அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் சிம்மாசன உரை தோல்வியடைந்ததன் காரணத்தினாலேயே, அந்த அரசாங்கம் கவிழ்ந்தது.
அக்காலத்தில், ஓர் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போதும், அப்போதைய மஹா தேசாதிபதி (Governor General), சிம்மாசன உரையை (throne speech) நிகழ்த்துவார். பின்னர், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி துறப்பது மரபாகும். அதனடிப்படையிலேயே, டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் கவிழ்ந்தது.
54 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1964ஆம் ஆண்டிலும், இதேபோன்றதோர் அரசாங்கம் கவிழ்ந்தது. அந்த வகையில், தொடர்ச்சியாக இரண்டு அரசாங்கங்கள், சிம்மாசன உரை தோல்வியடைந்ததன் காரணமாக கவிழ்ந்துள்ளன.
தற்போதைய தேசிய அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மாதம் 12ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஒத்திவைத்தார். அதேபோல், அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையொன்று காரணமாக, நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.
அதன் பின்னர், 1964 நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று சபை கூடியபோது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினது சிம்மாசன உரை, மஹா தேசாதிபதியால் நிகழ்த்தப்பட்டது. அதன் மீதான விவாதம், அதே ஆண்டு டிசெம்பர் மாதம் 3ஆம் திகதியன்று நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஆளும் கட்சியிலிருந்து 14 உறுப்பினர்கள் கட்சித் தாவியதால், 1 வாக்கு வித்தியாசத்தால், அரசாங்கம் தோல்வியடைந்தது. அதன்படி, அந்த அரசாங்கத்தாலும் பதவி விலக நேர்ந்தது.
அந்தச் சிம்மாசன உரையின் மரபிலேயே, தற்காலத்திலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, சபை மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியால் கொள்கை விளக்க உரையொன்று நிகழ்த்தப்படுகிறது.
ஆனால், அப்போது போல் இப்போது, அந்த உரைமீதான விவாதமோ அல்லது வாக்கெடுப்போ நடத்துவது கட்டாயமல்ல. தற்காலத்தில் விவாதம் நடைபெற்றாலும், வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. பழைய மரபு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அடுத்துக் கைவிடப்பட்டது.
தற்போதும் அந்த மரபு வழக்கில் இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர், அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்திருப்பார்கள். அம்மரபு முறையைக் கொண்டும், அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்திருப்பார்கள். ஆனால், அவ்வாறான முயற்சியை முன்னெடுக்க முடியாததால், இப்போது அந்த உரையைப் பற்றிய விவாதமொன்றை மட்டும், அவ்வெதிரணி கேட்டுப்பெற்றுள்ளது.
நேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய கொள்கை விளக்கவுரையானது, சற்று வித்தியாசமானது. அநேகமாக, ஜனாதிபதிகள் தாம் சர்ந்த கட்சியின் அல்லது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையே நிகழ்த்துவார்கள். ஏனெனில், பெரும்பாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியே, ஆளும் கட்சியின் தலைவராகவும் இருப்பார்.
சில சந்தர்ப்பங்களில், மாற்றுக் கட்சிகளது அரசாங்கங்களின் சார்பிலும், ஜனாதிபதிகள் தமது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்த நேரிடும். அதுபோல், இம்முறை ஜனாதிபதி, மற்றொரு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் அரசாங்கத்தின் சார்பிலேயே, கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினார்.
இது, 2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை அடுத்தும் நிகழ்ந்தது தான். அப்போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய இடத்தை வகிக்கும் அரசாங்கத்தின் சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினார். ஆனால் அப்போது, ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே, தற்போதுள்ள அளவுக்கு, கருத்து முரண்பாடுகள் காணப்படவில்லை.
வழமையாக, மஹா தேசாதிபதிகளும் ஜனாதிபதிகளும், தமது கொள்கை விளக்கவுரையின் போது, அரசாங்கத்தை ‘எனது’ அரசாங்கம் என்றே குறிப்பிடுவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே, கடந்த சில காலங்களாக நிலவிவரும் கருத்து முரண்பாடுகளைக் கருத்திற்கொள்ளும் போது, ஜனாதிபதிக்கு இம்முறை, அவ்வாறு குறிப்பிடுவதற்கு கஷ்டமாகவே இருந்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைத் தோல்வியுறச் செய்து, மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தாம் பொதுவானதோர் அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் செயற்றிட்டமொன்றை அமுல்செய்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தனர்.
இது, நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், பொதுவானதோ இல்லையோ, எந்தவொரு நாடு தழுவிய அபிவிருத்தித் திட்டமும் அமுலாக்கப்படவில்லை.
இரண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கு, இந்த அரசாங்கம் பங்களிப்புச் செய்துள்ள போதிலும், அவ்விரண்டும், முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த இரண்டு திட்டங்களின் தொடர்ச்சியே அன்றி, புதிய திட்டங்கள் அல்ல. ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டை மற்றும் மொரகஹாகந்த நீர்த்தேக்கம் ஆகியவையே, அந்த இரண்டு திட்டங்களாகும்.
பாரியளவான ஊழல்களைத் தடுப்பதாகவும் ஏற்கெனவே இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டுவந்த சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதாகவும், பதவிக்கு வந்தவுடன், அரசாங்கத்தின் தலைவர்கள் வாக்குறுதியளித்தனர். அவற்றில், சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் வெற்றிகண்ட போதிலும், ஊழல் ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் படு தோல்வியடைந்துள்ளது என்றே தோன்றுகிறது.
அதேவேளை, அரசாங்கம் – சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்த போதிலும், அதற்காக, அச்சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அரசாங்கம் இப்போது பின்வாங்குகிறது.
ஊழல் ஒழிப்பு என்பது, ஜனாதிபதியும் பிரதமரும், கடந்த தேர்தல்களின் போது வழங்கிய வாக்குறுதி மட்டுமல்லாது, கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, நாடாளுமன்றம் முதன்முறையாகக் கூடியபோது, ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்கவுரையிலும் முக்கியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாண்டுகள் சென்றடைந்த நிலையில், இந்த அரசாங்கமே இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் மோசடியொன்றான மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாது, கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளைப் பாதுகாப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, திலக் மாரப்பன மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகிய இரு அமைச்சர்களும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களிடம் நிதிச் சலுகைகளைப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவும், தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்ய நேர்ந்தது. மாரப்பன மற்றும் விஜயதாச ஆகியோர், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதும் அவ்வளவு நாகரிகமான விடயமல்ல.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, இரு கட்சிகளும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டன. பிணைமுறி ஊழல் பேர்வழிகளைப் பாதுகாப்பதாக, ஜனாதிபதியே ஐ.தே.க தலைவர்களை, தேர்தல் பிரசார மேடைகளில் விமர்சித்தார். தேர்தலின் பின்னர், பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதி முயற்சி செய்தார்.
ஆனால், அரசமைப்பில் அதற்கான சட்டப் பிரமானங்கள இல்லாமையால் விட்டுவிட்டார். அதே காலத்தில், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீல சு.கவை வெளியேற்றிவிட்டு, தனியே அரசாங்கத்தை நடத்த, ஐ.தே.கவும் முயற்சி செய்தது. இறுதியில், வேறு வழியே இல்லாத பட்சத்தில், ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து, கூட்டரசாங்கத்தைத் தொடர்வதென முடிவு செய்தன.
முன்னைய அரசாங்கம், சர்வதேசச் சமூகத்தோடு, குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையோடு மோதிக்கொண்டு இருந்தது. ஆனால், மைத்திரி – ரனில் அரசாங்கம், அந்த நிலைப்பாட்டிலிலிருந்து விலகி, அச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக நடவடிக்கை எடுத்தது.
மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, புதிய அரசாங்கம் அதனை எதிர்க்காது, அதற்கு அனுசரணை வழங்க முன்வந்தது. போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளவும், அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
ஆனால், அரசாங்கம் இப்போது இந்த வாக்குறுதிகளில் இருந்துப் படிப்படியாக விலகிச் செல்கிறது. அதற்கு முக்கிய காரணம், ஜனாதிபதி அவற்றை நிறைவேற்றத் தயங்குவதேயாகும். தாம் இந்த விடயங்களில் தளர்வுப் போக்கைக் கடைபிடித்தால், மஹிந்த ராஜபக்ஷ அதன்மூலம் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவார் என்பதே ஜனாதிபதியின் பயமாக இருக்கிறது.
பொருளாதார விடயங்களில்கூட, ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பிரதேசத்தில், தொழிற்பேட்டை நிறுவுவது தொடர்பாக, பிரதமரின் ஆலோசனையின் பேரில், அமைச்சர்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட போது, தேசிய சொத்துக்களை சீனாவுக்கு விற்பனை செய்வதாகவே, மஹிந்த அணியினர் பிரசாரம் செய்தனர். இந்த விடயத்துக்காக, சீனாவுக்கு காணி குத்தகைக்கு வழங்குவதை, ஜனாதிபதியும் விரும்பவில்லை. அவர் அதனை, பகிரங்கதாகவே விமர்சித்து இருந்தார்.
அண்மையில், ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவை (Cabinet Committee on Economic Management-CCEM), தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் அதனைக் கலைத்துவிடுமாறு உத்தரவிட்டார். இவ்வாறு ஆளும் கூட்டணியிலுள்ள இரண்டு கட்சிகளுக்கும் இடையே, தீவிர கருத்து மோதல்கள் நிலவும் நிலையிலேயே, அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி, கொள்கை விளக்கவுரையை நகழ்த்தினார்.
எனவே, இந்த உரை எந்தளவுக்குப் பயனளிக்குமென்று நம்பமுடியாது. அது வெறும் சம்பிரதாயத்துக்காக நிகழ்த்திய உரையாகவே அமைந்துள்ளதென ஊகிக்க வேண்டியுள்ளது.
கோள்கை விளக்கவுரையில், ஜனாதிபதி என்ன தான் கூறினாலும், எதிர்வரும் 20 மாதங்களில், அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவைகளிலும் மக்களுக்கு தம் மீது ஏற்படுத்தும் நம்பிக்கையிலுமே, மஹிந்த அணி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியுமா? இல்லையா, என்பது தீர்மானிக்கப்படும். மூன்றாண்டுகளில் செய்ய முடியாமல் போனதை, இதுபோன்ற குறுகிய காலத்தில் செய்துமுடிப்பது, இலகுவான காரியமல்ல.
மஹிந்தவின் ஆட்சி மீண்டும் வராமல் இருப்பதையே, சிறுபான்மை மக்கள் விரும்புகின்றனர். அதேவேளை, அரசியல்வாதிகள் என்ற முறையில் அதுவே ஐ.தே.கவினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், ஐ.தே.கவும் ஜனாதிபதியும், எவ்வாறு அதை் செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகவில்லை. பொதுவாக, மக்களைக் கவரும் எந்தவொரு வேலைத்திட்டமும், அரசாங்கத்திடம் இருப்பதாக் தெரியவில்லை.
அரசாங்கம், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. இதன் காரணமாக, விலைவாசி தொடர்ந்தும் உயர்ந்துகொண்டே போகிறது. போதாக்குறைக்கு, அரசாங்கம் அண்மையில் விதித்த வருமான வரி, மத்திய வர்க்கத்தை வெகுவாகப் பாதிக்கின்றது.
2015ஆம் ஆண்டில், இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவரப் பங்களிப்புச் செய்தவர்களில், சிறுபான்மை மக்கள் மட்டுமே தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருப்பதாக உறுதியாகக் கூறமுடிகிறது. ஆனால், அவர்களின் நம்பிக்கையையும் தளர்த்தும் வகையிலேயே அரசாங்கம் நடந்துகொள்கிறது.
வடபகுதி மக்களின் காணிப் பிரச்சினையையும் அரசியல் கைதிகளின் பிரச்சினையையும், காணாமற் போனவர்களின் பிரச்சினையையும் தீர்ப்பதில் இருக்கும் பிரதான தடை, அரசாங்கத்தின் அசமந்தப் போக்கேயாகும். குறிப்பாக, காணி மற்றும் கைதிகளின் பிர்சினையை, அரசாங்கத்தின் தலைவர்கள் மனம்வைத்தால் தீர்க்கமுடியும். ஆனால், அதற்குத் தேவையான அரசியல் திடசங்கற்பம், தலைவர்களிடம் இல்லை. கண்டி மாவட்டத்தின் திகன போன்ற இடங்களில், அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை, வெகுவாகக் குறைத்துவிட்டச் சம்பவங்களாகும். இதுபோன்றச் சம்பவங்களை, அரசியல் திடசங்கற்பம் இருந்திருந்தால், தடுத்திருக்க முடியும்.
மக்களைப் பற்றி சிந்திக்காவிட்டாலும் தமது இருப்பைப் பற்றிச் சிந்தித்தாவது அரசாங்கம் இந்த விடயங்களில் உறுதியாக செயற்பட்டுத் தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால், 2020ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் தலைவர்கள், மஹிந்த அணியின் ஆட்சிக்கு இடமளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள நேரிடும்.
Average Rating