காமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்!!(மகளிர் பக்கம்)
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21 வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா அதிக பதக்கங்களை வென்ற காமன்வெல்த் போட்டி இதுவே. இதில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்கும். இதன்மூலம் இந்தியா இந்த ஆண்டு பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 71 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 218 பேர் கலந்துகொண்டனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து பேட்மிண்டன் வீர்கள் கலந்துகொண்ட போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், சாய்னா நேவால் தங்கப் பதக்கமும், பி.வி. சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர். சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதோடு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவு ஸ்குவாஷில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பதக்கங்களை பெற்று நாடு திரும்பியுள்ளார். “2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ போட்டியில் தங்கம் வெற்றிபெற்ற ஞாபகம் வருகிறது. அதற்கு பிறகு பெரிய அளவில் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த போட்டியில் பதக்கங்களோடு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆகஸ்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அடுத்தகட்ட பெரிய சவாலுக்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது” என்று தீபிகாவும் ஜோஷ்னாவும் தெரிவித்தனர். டெல்லியை சேர்ந்தவர் மணிகா பத்ரா. சிறு வயதிலிருந்தே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர். சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரை சேர்ந்த மெங்குயுவை 4-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மொத்தம் இரண்டு தங்கம், ஒரு வெள்ளியென மூன்று பதக்கங்களை பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் இரும்பு மங்கையான மேரிகோம், மகளிர் குத்துச்சண்டை பிரிவின் இறுதிச்சுற்றிக்கு முன்னேறி தங்கம் வென்றார். வடக்கு அயர்லாந்து போட்டியாளரான கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 புள்ளியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் செய்கோம் மீராபாய் சானு. இவர் 48 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 196 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த்தில் புதிய சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ பிஸ்டல் இறுதிச்சுற்றில் துடிப்பாக விளையாடி 38 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்து தங்கத்தை வசப்படுத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பளுதூக்கும் போட்டிகள் நடைப்பெற்றன.இதில் 69 கிலோ பளுதூக்கும் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றார். இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் காமன்வெல்த் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் தன்னோடு போட்டியிட்ட நியூசிலாந்து வீராங்கனை டைலாவை 13-2 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
Average Rating