ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தயங்காது: வடகொரியாவுக்கு எச்சரிக்கை!!(உலக செய்தி)
வடகொரியா ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தயங்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் ஜூன் 12ல் சந்தித்து பேசுகிறார்கள். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் முற்றிலுமாக அணுசக்தியை அகற்ற வேண்டும். அந்த மாற்றத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இந்த சந்திப்புக்கு இன்னும் ஒருமாதம் உள்ளது.
அதற்கு முன் பல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதே சமயம் வடகொரியா சார்பில் ஆத்திரமூட்டும் செயல்கள் ஏதாவது நடந்தால் சந்திப்பு ரத்து செய்யப்படும். அதற்கும் அமெரிக்கா தயங்காது. இப்போது ஒரு நாள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருநாளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து வரையறுக்கப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்புக்கு ஏற்றார்போல் அணு ஆயுத ஏவுகணை சோதனையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அதேபோல் அமெரிக்கா-தென்கொரியா போர் பயிற்சியையும் வடகொரியா எதிர்க்கவில்லை. எனவே, வடகொரியா தற்போது அமைதியான பேச்சுவார்த்தைக்கு ஏற்றார்போல் தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்களும் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவோம். முன்கூட்டியே நாங்கள் நிபந்தனை விதிக்க மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிம் சந்திப்பு வெற்றி பெறும்: டிரம்ப்
இண்டியானா மாகாணத்தில் எல்கராத்தில் நடத்த பேரணியில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசியதாவது: வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் தனது நாட்டுக்கு மிகச்சிறந்த சேவை செய்து வருகிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தான் 3 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர். பணம் கொடுத்து மீட்கவில்லை. ஆனால் 2016 ஜனவரியில் ஈரானில் இருந்து 5 அமெரிக்கர்களை விடுவிக்க ரூ.12 ஆயிரம் கோடியை ஒபாமா நிர்வாகம் கொடுத்தது.
நாங்கள் அப்படிச்செய்யவில்லை. நாங்கள் ஜூன் 12ல் சந்தித்து பேச இருக்கிறோம். மிகச்சிறந்த ஒப்பந்தம் செய்யப்போகிறோம். இந்த சந்திப்பு மிகப்பெரிய வெற்றி பெறும். உலகபாதுகாப்பு, உலக அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
தென்கொரியா, சீனா அதிபர்களும் சிங்கப்பூர் செல்கிறார்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் ஜுன் 12ல் நடக்கிறது. இந்த சந்திப்பின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்கொரியா அதிபர் மூன் ஆகியோரும் சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் சர்வதேச அமைதிப்பேச்சுவார்த்தை மூத்த இயக்குனர் விக்டோரியா கோட்ஸ்சும் அங்கு செல்கிறார்.
Average Rating