கோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)
இந்த சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உங்கள் கூந்தலை அழகாக ஆரோக்கியமாக வைக்க சில டிப்ஸ்..
தினமும் கூந்தலை அலசவும்
கோடையில் கூந்தலைப் பராமரிக்க செய்ய வேண்டியவைகளில் முக்கியமானவை கூந்தலை தினமும் அலசுவது தான். இதனால் அதிகமான வியர்வையால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலையும் நன்கு சுத்தமாக இருக்கும்.
ஷாம்பு
தலைக்கு குளிக்கும் போது மாய்ச்சுரைசிங் ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான எண்ணெய் பசை தலையில் இருந்தால், அழுக்குகள் தங்கும் என்று நினைத்து கடினமாக ஷாம்பு அல்லது சோப்பு பயன்படுத்தினால், கூந்தலில் அதிக வறட்சி ஏற்பட்டு, பின் கூந்தல் உடைய ஆரம்பிக்கும்.
கண்டிஷனர்
கோடையில் கண்டிஷனர் செய்வது மிகவும் அவசியமானது. இதனால் கூந்தல் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும். மேலும் கண்டிஷனர் பயன்படுத்தினால், கூந்தலுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும். எனவே தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர்
அதிகப்படியான தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் கோடையில் உடல் வறட்சியானது அதிகம் இருக்கும். அவ்வாறு வறட்சி ஏற்பட்டால், கூந்தல் உதிர ஆரம்பிக்கும் எனவே வறட்சியைப் போக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
ஹேர் மாஸ்க்
கூந்தலுக்கு அவ்வப்போது ஹேர் மாஸ்க் போட வேண்டும். இதனால் கூந்தலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதுவும் கெமிக்கல் கலந்த ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி மாஸ்க் போட வேண்டும். அதிலும் வாழைப்பழம், பப்பாளி, தயிர், தேங்காய் பால் போன்றவற்றால் மாஸ்க் போடலாம். இதனால் பட்டுப் போன்ற அழகான கூந்தலைப் பெறலாம்.
கூந்தல் வெடிப்புகள் அகற்றுதல்
கோடையில் அதிகமாக கூந்தல் வெடிப்புகள் ஏற்படும். எனவே அவ்வாறு கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டால், அதனை உடனே அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் அவை கூந்தல் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடும்.
எண்ணெய் மசாஜ்
அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் படிந்திருக்கும் மாசுக்கள் முற்றிலும் நீங்கி, இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தலும் வலுவோடு இருக்கும். அதிலும் இதனை தலைக்கு குளிக்கும் முன், சிறிது நேரம் செய்து குளித்தால், மிகவும் நல்லது.
தொப்பி
வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களில் தாக்கத்தில் இருந்து கூந்தலைப் பாதுகாக்க, வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பி அல்லது துணியை கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக, அவ்வாறு தொப்பி போடும் போது வியர்வை அதிக நேரம் தலையில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சன் ஸ்கிரீன்
சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்தும் போது, கூந்தலுக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தக் கூடாதா என்ன? எனவே கூந்தலுக்கு என்று விற்கும் சன் ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்தினால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
Average Rating