ஆணை இயக்குகிற மையம் பெண்தான்!!(மகளிர் பக்கம்)

Read Time:23 Minute, 6 Second

பெண்களின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர், சங்க இலக்கிய ஆய்வாளர், தனியார் நிறுவனத்தின் தலைவர், சமூகப் பணியாளர் என பல முகம் கொண்டவர் கவிஞர் சக்தி ஜோதி. 18 வருடங்களாக சமூகப்பணிக்கான நிறுவனம் ஒருபுறம், விவசாய நிலங்களில் நீர்ச்செறிவு மேலாண்மை குறித்த பணி ஒருபுறம், பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகள் என பல தளங்களில் பயணித்துக்கொண்டே தன் எழுத்துலகில் வேகத்தோடும் பெரும் விருப்பத்தோடும் பயணிக்கும் அவர் நம்மோடு தன் இலக்கிய வாழ்வு குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே…

பிறந்தது தேனி மாவட்டத்தின் அனுமந்தன்பட்டி. அப்பா மற்றும் கணவரின் சொந்த ஊரான அய்யம்பாளையத்தில் வசிக்கிறேன். அப்பா பாண்டியன் நீர் மின் திட்டத்தில் கட்டிடப் பொறியாளராக இருந்தார். அம்மா சிரோன் மணி, குடும்பத்தலைவி. வீட்டில், நான் ஐந்தாவது பெண். எனக்கு மூன்று அக்கா, ஒரு அண்ணன். நான் பிறந்த சமயம் அப்பாவுக்கு தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர் மின் திட்டத்தில் வேலை. அதனால் பிறந்த ஒன்றரை மாதத்திலிருந்து மணலாறு மலைப்பிரதேசத்தில் குழந்தை பருவம். அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் காடம்பாறை நீர் மின் திட்டப்பகுதியில் வளரிளம் பருவம். இப்போது நான் தவழ்ந்து விளையாடிய பகுதி நீரால் நிரம்பியுள்ளது. வளர்ந்த காடம்பாறைப்பகுதி அடர்கானகமாக ஆகியுள்ளது. பெண் நிலமென்றும் அவள் நீராலும், கானகத்தாலும் ஆனவள் என்றும் எப்போதும் நான் கருதுவதற்கு இவையும் காரணமாக இருக்கலாம்.

வீட்டில் அனைவருமே பாடப் புத்தகத்தோடு வாரஇதழ்களும், கதைப்புத்தகங்களும் வாசிக்கிற வழக்கம் உடையவர்கள். அதனால் இயற்கையாகவே வாசிக்கிற சூழலும் கதைகள் கேட்டு வளர்கிற வாய்ப்பும் இருந்தது. கதைப்புத்தகங்கள் வழியாகவே பால்யகாலத்தில் எழுத்துக்களை அடையாளம் அறிந்துகொண்டேன். அம்புலிமாமா, பாலமித்ரா என்று சிறுவர் நூல்களில் தொடங்கியது என் வாசிப்பு. பிறகு வார இதழ்கள், மாயாஜாலக் கதைகளை விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் என்னுடைய அண்ணன் ஜெயபாலன்,‘எத்தனை நாளைக்கு மாயாஜால, மந்திரக்கதைகள் படிப்பாய்’ எனச் சொல்லி ஜெயகாந்தனின் ‘பாரிசுக்குப் போ’ புத்தகத்தைக் கொடுத்தார்.

அதன்பின் நானும் என்னுடைய அக்கா ஜெயாவும் அண்ணனிடமிருக்கும் புத்தகங்களை போட்டி போட்டு படிப்போம். ருஷ்ய இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது அண்ணனும், என்னுடைய மாமா ஃபாதர் ராஜநாயகமும்தான். அவரும் என்னுடைய அண்ணனும் இலக்கியங்கள் குறித்து விவாதிக்கும்போது பலநாட்கள் அவர்களுக்கு அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். பள்ளிப்பருவத்திலேயே கதை, கவிதை, கட்டுரை என எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்தான். ஏழாம்வகுப்புப் படிக்கும்போது , பள்ளிக்கூடத்தில் நான் எழுதிப் பரிசு பெற்ற கதைக்காக ஃபாதர் ராஜநாயகம் பேனா பரிசளித்தார்.

பனிரெண்டாம் வகுப்புக்குள் அந்தக் காலத்தின் முக்கியமான பல படைப்பாளர்களை வாசித்தேன். மாமா ராஜநாயகத்திற்கு நான் பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்பது விருப்பம். 90ல் காதல் திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் சக்திவேல். விவசாயத்தை மட்டுமே வாழ்வாக கொண்டவர். நாங்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் எதிர்ப்பில்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். என்னுடைய வாழ்வை போராட்டமாக நினைக்கவில்லை. இது ஒரு பயணம். என்னுடைய பல்வேறு சமூகச்செயல்பாட்டிற்கு என் மாமனார்தான் முக்கிய காரணம். அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

ஒருவேளை, திருமணம் ஆனவுடனே என்னை அவர் தன்னுடைய மருமகளாக அங்கீகரித்து இருந்தால், இன்றைக்கு ஒரு சிறந்த குடும்பத்தலைவி என்கிற பெயரோடுமட்டும் இருந்திருப்பேன். ‘என்னை ஏன் என் மாமனாரால் ஏற்க முடியவில்லை’ என்கிற என்னுடைய கேள்விதான் இந்த சமூகத்தில் என்னை அடையாளப்படுத்திக்கொள்கிற இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.

கடினமான உழைப்பு, ஆழமான வாசிப்பு இவையே தனித்திருந்த காலத்தில் என்னைத் திடப்படுத்தியது. கிராமத்தைவிட்டு எங்கேயும் வெளியே போகாத காலம் அது. உறவினர்கள் வீடு, விருந்தோம்பல் எதுவும் நான் அறியாதவை. என்றாலும் அண்ணன் வீடு, அக்கா வீடு என எப்போதாவது போவதுண்டு. மருத்துவம், கோவில் என வெளியூர் போனதுதான், இந்தப்பயணங்கள் அனைத்துமே கணவர் துணையுடன்தான். இவ்வாறாக 13 ஆண்டுகள் கடந்திருந்தன.

யாரோடும் அதிகம் பேச வாய்ப்பில்லாத அக்காலகட்டத்தில் எந்தவித திட்டமிடலுமின்றி கிடைத்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அறிவுடைநம்பி என்பவரின் அம்மா பல்வேறு நவீன இலக்கிய வாசிப்பிற்கான புத்தங்களைக் கொடுத்தார். அதன்பிறகு என் வாசிப்பு பல மடங்கு அதிகரித்தது. மகன் பிறந்தவுடன் என்னுடைய குடும்பமும், மகள் பிறந்தபின்பு என் கணவர் குடும்பமும் இயல்புக்கு வந்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்த போது பொன்னியின் செல்வன் கதையை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

‘அவர் களுக்குப் புரிந்ததோ இல்லையோ, எனக்கும் பேசிக்கொண்டிருக்க ஆட்கள் வேண்டுமில்லையா?’மகன் பிறந்த சமயத்தில், எங்கள் கிராமத்து பெண்களுக்காக தையல் பயிற்சிப்பள்ளி ஒன்றினைத் தொடங்கினேன். இடைநின்ற என் படிப்பையும் தொடர்ந்தேன். அவ்வப்போது கவிதைகள் எழுதி என் டைரியை நிரப்பிக்கொண்டிருந்தேன். அவற்றை இதழ்களுக்கு பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. கவிஞராக வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் இருந்தது இல்லை. இந்த நாட்களில் என்னுடைய வேலையில், படிப்பில், குழந்தைகள் கவனிப்பில் என எல்லாவற்றிலும் என்னுடைய கணவர் சக்திவேல் எப்போதும் துணையாக நின்றார்.

2001ல் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி கொடுக்கிற நோக்கத்தில் தனியார் நிறுவனம் தொடங்கினேன். மகளிர் குழுக்களும், விவசாய செயல்பாடுகளும் என திண்டுக்கல், தேனி, மதுரை என மூன்று மாவட்டங்களில் இன்றைக்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது. இந்த செயல்பாட்டிற்காக விருது பெறுவதற்காக 2004ல் முதல் முறையாக சென்னை சென்றேன். அதுவும் கணவர் துணையுடன். அதன்பிறகுதான் வெளியுலகம் வர ஆரம்பித்தேன். இப்போது பல மொழிகளின் நிலங்களில் அலைந்து திரிகிற என்னுடைய சுதந்திரத்தை என் குடும்பம் புரிந்துகொள்கிறது.

2006ல் மகனை கொடைக்கானலில் பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது, அந்தப் பள்ளியின் தாளாளர் கொரியன் அப்ரஹாம், ‘வாஸந்தி வாசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். அவருக்கு வாஸந்தி தோழியாம். அதன் பிறகு ‘வாஸந்தி எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருக்காங்க. நீங்கள் தமிழ் படித்திருக்கிறீர்கள். தெளிவாக, ஆழமாகப் பேசுகிறீர்கள். எழுதுவீர்களா?’ என்று கேட்டார். ‘எழுதியதில்லை’ என்று சொன்னதும் ‘நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது, எழுத வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதுதான் என் முன் வைக்கப்பட்ட படைப்பு சார்ந்த முதல் கேள்வி.

என்னுடைய நிறுவனம் சார்ந்த ஒரு நிகழ்வில் பேசியபோது எஸ். வைதீஸ்வரன் கவிதை குறித்தும் பேசினேன். அப்போது அங்கு வந்திருந்த ஃபாதர் மோகன் லார்பீர், ‘சமூகப்பணிகள் குறித்த நிகழ்வில் கவிதையை முன்வைத்துப் பேசுகிறீர்கள், நீங்கள் ஏன் எழுதக்கூடாது?’ என்று கேட்டார். அதன் பிறகு அவர்களுடைய ஆண்டிதழ் ஒன்றிற்கு கவிதை எழுதச் சொன்னார். அதில் தான் என் ‘காலம்’ என்ற முதல் கவிதை 2007ம் ஆண்டு துவக்கத்தில் வெளிவந்தது.

ஃபாதர் மோகன் லார்பீர் மேலும் நவீன கவிதை வாசிப்பிற்கான பல புத்தகங்களை அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு அதே வருடம் சுப்ரமணிய சிவா, மகாகவி, இனிய நந்தவனம் போன்ற சிற்றிதழ்களில் என்னுடைய சில கவிதைகள் வெளிவந்தன.உயிரெழுத்து இதழிற்கு சந்தா அனுப்புவதற்காக அந்த இதழின் ஆசிரியர் சுதிர் செந்திலுடன் பேசியபோது, என்னுடைய வாசிப்புக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தேன். யூமா வாசுகியின் புத்தகத்தை அப்போது வாசித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். ‘யூமா வாசுகியா, நீங்கள் எழுதுவீர்களா?’ என்று கேட்டார். ‘கொஞ்சம், கொஞ்சம்’ என்று தயக்கத்தோடு சொன்னேன். அப்போது உயிரெழுத்திற்கு கவிதைகள் அனுப்பும்படி சொன்னார். நிறைய கவிதைகள் அனுப்பி இருந்தேன். அவற்றிலிருந்து என்னுடைய இரண்டு கவிதைகளைத் தேர்வு செய்து வெளியிட்டார். அதன்பிறகுதான் என்னுடைய கவிதைகள் பற்றிய கவனம் பலருக்கும் கிடைத்தது.

அண்ணன் ஜெயபாலனிடம்,‘தொடர்ந்து கவிதைகள் எழுத விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ‘20ம் நூற்றாண்டு இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு முன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்தை நீ மீண்டும் வாசிக்க வேண்டும்’ என்று சொன்னார். எம்.ஃபில் பட்டத்திற்காக ‘சங்க கால பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்திருந்தேன். வெள்ளிவீதியார் எனக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர். ஆனால் அண்ணன் சொன்னபிறகு சங்க இலக்கியத்தை மறு வாசிப்பு செய்யத்தொடங்கினேன்.

2008ல் என் முதல் கவிதைத்தொகுப்பு ‘நிலம் புகும் சொற்கள்’ உயிர் எழுத்துப் பதிப்பகத்தில் வெளிவந்தது. எனது கவிதைகளில் சங்க இலக்கியத்தின் சாயல் இருப்பதாக சிலர் சொல்வார்கள். ஒரு வேளை இருக்கலாம். ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்வதில்லை. தற்போது வரை பதினோரு கவிதைத் தொகுப்புகள்வெளிவந்துள்ளன. இயற்கையையும், பெண்மையையும் மையப்படுத்தி கவிதைகள் எழுதுகிறேன். சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஒரு பெண் எங்கேனும் ஒரு ஆணுக்காய் காத்திருக்கிறாள். அது ஒரு நிமிடமாக இருக்கலாம், ஒரு வாழ்நாளாக இருக்கலாம். அவளின் அக்காத்திருப்பே இந்த சமூகத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவளையே நான் என் படைப்புகளில் சொல்லிவிட முனைகிறேன்.

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘சங்க கால இலக்கியத்தில் ஆண் மைய கருத்தாக்கம்’ என்கிற தலைப்பை தேர்வு செய்தேன். அந்த சமயத்தில்தான், குங்குமம் தோழியில் சங்கப் பெண்பாற் புலவர்களைப்பற்றி வெகுஜன வாசிப்புக்கு அறிமுகம் செய்யும் விதமாக கட்டுரைத்தொடரை எழுதத் தொடங்கினேன். சங்க பெண்பாற் புலவர்கள் என்று தாயம்மாள் அறவாணன் நிறுவக்கூடிய 45 புலவர்கள் குறித்து இந்த கட்டுரைத்தொடரில் எழுதினேன்.ஆண் மையச் சமூகம் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது. சமூகத்தை நகர்த்தும் மையமாக ஆண்தான் இருக்கிறான். என்றாலும் தாய்வழி சமூகத்தின் எச்சங்களை சங்க காலத்தில் காணமுடியும். எனவே ஆணை இயக்குகிற மையமாக பெண்தான் இருக்கிறாள் என்பதை பதிவு செய்யும் விதமாக பெண்பாற் புலவர்களின் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதனை தற்கால சம்பவங்கள், இலக்கியம், சினிமா என எழுத ஆரம்பித்தேன். அந்த தொடர் 38 வாரங்கள் வெளிவந்தது. இக்கட்டுரைத் தொடர் என்னுடைய எழுத்திற்கு வாசிக்கிறவர்கள் மத்தியில் ஒரு தனித்த கவனத்தைக் கொடுத்தது. அது தற்போது “சங்கப் பெண் கவிதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. குங்குமம் தோழி கட்டுரைகள் தொடராக வந்தபோது என் அம்மா முழுமையாக வாசித்தார்கள். இப்போது என் அம்மா இல்லை. ஆனால் இப்புத்தகத்தில் உயிர்த்திருக்கிறார்.

எனது சில கவிதைகள் மலையாளம், அஸ்ஸாமி, சிந்தி, ஹிந்தி போன்ற இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற அயல்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனது கவிதைகளை முன்வைத்து இளநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒரு கவிஞராக, சங்க இலக்கிய ஆய்வாளராக அயல் மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.பெண்கள் பல்வேறு பிரச்னை களுக்கிடையேதான் எழுத வருகிறார்கள். என்னுடைய படைப்புக்களில், என்னுடைய அகம் தொடங்கி நான் புறத்தே சந்திக்கும் பல்வேறு பெண்களின் அகத்தோடும் என்னைப் பொருந்திக் கொள்கிறேன்.

புதிதாக எழுத வருகிற பெண்கள் தனிப்பட்ட யாரோ ஒருவரை மட்டும் முன் மாதிரியாக அல்லது ஆதர்சமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்க்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. அன்றாடம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். நம் வாழ்க்கை நமக்குக் கொடுத்த எந்த விஷயத்தையும் மனதின் ஆழத்திலிருந்து நாம் உணர்ந்த வகையில் கவிதைகளில் பேசினால் போதும் என்று நினைக்கிறேன்.

பொதுவாகவே பெண்கள் திடமாக இருக்கவேண்டும். பெண்தான் உண்மையில் பலமானவள். எந்த பெண்ணும் வாழ்க்கைக்கு பயந்து துறவை நாடி போவதில்லை. தன் குடும்பத்திற்காக தனக்கு விருப்பமான சில விஷயங்களை தான் துறந்து விடுகிறார்கள். பெண் என்பவள் எப்போதும் கொடுப்பவளாக இருக்கிறாள். இதை பெண்கள் உணர்ந்து துணிவாக இந்த வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்.

பெண்கள் அதிகம் வாசிப்பதில்லை என்பது பொதுவாக ஆண் எழுத்தாளர்களின் குற்றச்சாட்டு. படிப்பதற்கான, எழுதுவதற்கான சூழல் பல பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இன்றைக்கும் உண்மை. ஆனால் சில ஆண் எழுத்தாளர் கள் இதனை உணர்ந்து கொள்கிறார்கள். எழுத வருகிற பெண்களுக்கு ஆதரவாக இருக்கவும் செய்கிறார்கள். பெண்கள் எழுத வரும் போது முதலில் விமர்சனத்திற்கு உட்படலாம். உண்மையில் திறமையும் ஈடுபாடும் இருப்பதை அறிந்துகொண்ட பிறகு பெண் எழுத்தாளர்களுக்கான மரியாதையை ஆண் எழுத்தாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதே என் எண்ணம்.

இளமையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன். என்னை தைரியமான பெண்ணாக உணர வைத்தது அவரது எழுத்து தான். ‘பாரிசுக்குப்போ’வில் வரும் லலிதா கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். சாண்டில்யனின் மஞ்சளழகியும் அந்தப் பருவத்தில் எனக்குப் பிடித்திருந்தது.நம்முடைய இளமைப்பருவத்தில் எதில் ஆர்வம் கொள்கிறோமோ அதுவாகத்தான் நம் நாற்பது வயதுகளில் இருப்போம் எனவும் நம்புகிறேன். நான் அந்த வயதில் விதைத்த வாசிப்பெனும் விதை தான் இந்த வயதில் மரமாகி நான் ஒரு கவிஞராக பலருடைய மனதோடு நெருங்கி இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன்.

என்னை ஏற்றுக் கொள்வதில் என் மாமனாருக்கு இருந்த மனத்தடைதான், நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இந்த சமூகத்தில் பெண்ணுக்கு நிகழ்கிற தடைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதனாலேயே என்னுடைய மனதின் பல்வேறு தடைகளை உடைத்து கொள்ளவும் முடிந்தது. என் அப்பாவுக்கு நான் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அம்மாவுக்குத்தான் என்னை கவிஞராக காணமுடிந்தது. திருமணத்திற்குப்பிறகு என்னுடைய பல்வேறு விருப்பங்களுக்கு மதிப்பளித்து கணவர், மகன், மகள் மற்றும் என்குடும்பத்தினர் கொடுத்த அரவணைப்புதான் இன்று இந்த சமூகத்தில் ஒரு கவிஞராக நான் அறியப்பட முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். l

– ஸ்ரீதேவி மோகன்

கவிதைத் தொகுதிகள்

* நிலம் புகும் சொற்கள் (2008)
* கடலோடு இசைத்தல் (2009)
* எனக்கான ஆகாயம்(2010)
* காற்றில் மிதக்கும் நீலம்(2011)
* தீ உறங்கும் காடு(2012)
* சொல் எனும் தானியம்(2013)
* பறவை தினங்களைப் பரிசளிப்பவள்(2014)
* மீன் நிறத்திலொரு முத்தம் (2015)
* மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்(2016)
* இப்பொழுது வளர்ந்துவிட்டாள்(2016)
* வெள்ளிவீதி (2017)

கட்டுரைத்தொகுப்பு

* சங்கப் பெண் கவிதைகள் (2017)

பெற்றிருக்கும் விருதுகள்

* சிற்பி விருது
* திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
* தேனி மாவட்டம் இளம் கவிஞர் விருது
* தமிழக அரசு நூலக விருது.
இவை தவிர தன்னுடைய பணி சார்ந்து நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பூனம் கவுர் இயக்குனர் மீது புகார்… !!(சினிமா செய்தி)
Next post முகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்!!