என் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி!!(மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 25 Second

“முதல்ல கல்யாணமே வேண்டாம்னு தான் இருந்தேன். பிறகு வீட்ல சொன்னதால தான் ஒப்புகிட்டேன். ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணம் தான். கல்யாணம் ஆகும் போதே சொல்லிட்டேன். உங்க வீட்ல இருந்தும் யாரும் வரக்கூடாது. எங்க வீட்ல இருந்தும் யாரும் வர மாட்டாங்க. நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ்ந்தா போதும்னு சொன்னேன். எங்க வீட்ல இருக்கிறவங்க எதாவது சொல்ல, அவங்க வீட்டு ஆளுங்க எதாவது சொல்ல ஏதும் பிரச்னை வந்துடக்கூடாது பாருங்க. அதனால யாரும் குறுக்கிடாம வாழணும்னு நினைச்சேன். ஆனா சொந்த பந்தங்களை ஒதுக்கக்கூடாது என என்னை திருத்தி வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை கொடுத்தவங்க என் மனைவி. நான் இப்ப மாறிட்டேன். இப்ப வீடு பூரா சொந்தக்காரங்க தான்” என்கிறார் நகைச்சுவை நடிகர் வையாபுரி. எளிமையான மனிதர் போலவே தன் குறை நிறைகளை இயல்பாக நம்மோடு பகிர்ந்து கொண்டார். தன் மனைவி ஆனந்தி பற்றி பெருமிதம் பொங்க அவர் கூறிய வார்த்தைகள் இங்கே…

‘‘2001 ஜனவரியில் கல்யாணம் ஆச்சு. கல்யாணமாகி நாங்க ஹனி மூன் எல்லாம் எங்கும் போகவில்லை. பதினாறு வருடம் வரை எந்த சினிமாவுக்கும் போகவில்லை. கல்யாணம் ஆன புதிதில் திருச்செந்தூர் மற்றும் மதுரை கோவில்களுக்குப் போய்ட்டு வந்தோம். பிள்ளைகள் வளர்ந்த பிறகு சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குக் கூட்டிப்போய் இருக்கேன். ஆனால் எல்லாமே பட்ஜெட் டூர் தான். அவங்க விரும்பியதை எல்லாத்தையும் என்னால் வாங்கித் தர முடியாது. என்னால் அளவாகத் தான் வாங்கித் தர முடியும். அதை அவர்களிடம் சொல்லி தான் அழைத்துப் போவேன். மனைவியும் பிள்ளைகளும் அதை புரிஞ்சுக்குவாங்க.

என் நிலைமையைப் புரிந்து வீட்டில் சிக்கனமா நடந்துப்பாங்க. வேலைக்குக் கூட ஆள் வச்சுக்காம வீட்டில் எல்லா வேலையும் அவங்களே செய்வாங்க. அந்த பணம் இருந்தால் பசங்களுக்கு எதுக்காச்சும் ஆகுமேன்னு நினைப்பாங்க. பணத்தை அனாவசியமா செலவு பண்ண மாட்டாங்க. மால், ஹோட்டல்னு அவ்வளவா போக மாட்டோம். எப்பவாவது தான் ஹோட்டல் போவோம். நானே உங்கள் எல்லாருக்கும் வேண்டியதை வீட்டிலே சமைச்சுத் தரேன் எதுக்கு ஹோட்டல்னு சொல்வாங்க. கடுமையான உழைப்பாளி.வீட்டில் எல்லா விதமான சமையலும் நல்லா சமைப்பாங்க. நல்லா ருசியா சமைப்பாங்க. சின்ன வயசில் சாப்பிடணும்னு ஆசை இருந்தது. ஆனா வசதி இல்லை. இப்ப சாப்பிடணும்னு ஆசை இருக்கு. வயிறு இல்லை. வயிறு சுருங்கிப் போச்சு…” சிரிக்கிறார்.

“நாங்கள் வீட்டில் 8.30 மணிக்குள்ள சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். நான் சூட்டிங் இல்லாத நேரத்தில் எப்பவும் வீட்டில் தான் இருப்பேன். தேவை இல்லாமல் வெளியே சுற்ற மாட்டேன். சூட்டிங் இருந்தால் மட்டும் தான் தாமதமாக வருவேன். அது அவங்களுக்குத் தெரியும். எனவே அது குறித்தெல்லாம் எதுவும் கேட்க மாட்டாங்க.
சின்ன வயதில் பல நாட்கள் வேலை தேடி அலைஞ்சிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு வேலையில் பிஸியாகிட்டேன். அதனால் குடும்பத்தினரிடம் பாசம் காட்டியதில்லை. எப்படி பாசத்தை வெளிக்காட்டுவது என்று எனக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் இருப்பது போல் சின்னச் சின்ன ஊடல்கள் இருக்கத் தான் செய்யும். வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். அதனால் தான் இப்படி இருக்கேன். ‘எங்களோட சிரிச்சிப் பேச மாட்டேங்கிறீங்க’ என்று கோபித்துக்கொள்வார்கள். சிரித்தால் ’நாங்கள் சொன் னோம் என்பதற்காகத்தான் சிரிக்கிறீர்கள்’ என்று சொல் வார்கள். என்ன செய்ய என் இயல்பு அப்படி.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக 80 நாட்கள் குடும்பத்தைப் பிரிய நேர்ந்தபோது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். குடும்பத் தினரை பிரிந்திருந்ததால் அவர் களின் அருமையைப் புரிந்து கொண்டேன். அவர்களுக்குத் தேவையானதை வாங்கித் தருவது மட்டும் பாசமில்லை. அவர்களுடன் சிரித்து உரையாடுவது போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்தினமும் குடும்பத்தினருடன் சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் தான் முதன் முதலாக என் குடும்பத்துடன் திரைப்படத்துக்குப் போனேன். இப்ப ஒரு இரண்டு மூணு படம் பார்த்தாச்சு. வெளியே சில இடங்களுக்குக் கூட்டிப் போனேன். ஆனால் மறுபடி பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அதற்கான பொருளாதாரம், சினிமா வாய்ப்பு என அதைப் பற்றிய யோசனை அதிகமாகிவிட்டது. நான் பெரிசா படிக்கல. பையன் ஷ்ரவன் ப்ளஸ் டூ படிக்கிறான். பொண்ணு ஷிவானி ஒன்பதாவது படிக்கிறாள். அவர்களை பெரிய படிப்பு படிக்க வைக்கணும் என்பது என் ஆசை. என்னிடம் பெரிசா பணவசதி இல்லை. சினிமா வாய்ப்பும் பெரிய அளவில் இல்லை. சினிமாவை தவிர வேறு எந்த தொழிலும் எனக்குத் தெரியாது. அதனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

நாளை குறித்த கேள்வி மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காக இன்னும் ஏதாவது பண்ணனும் என்கிற சிந்தனை தான் அதிகமா இருக்கு. எல்லா விதத்திலும் எனக்கு ஆதாரமாக இருப்பது என் மனைவி தான். அவங்க வீட்டுக்கு மருமகனாக இருந்த என்னை அவர்களின் பெற்றோருக்கு மகனாக்கினது என் மனைவி தான். அவங்க அப்பாவுக்கு நான் தான் கொள்ளி வைத்தேன்” – நெகிழ்ந்து பேசுகிறார்.

ஆனந்தி
“கல்யாணம் ஆன புதிதில் பேசவே மாட்டார். ஜாலியான டைப் கிடையாது. ஆனா நல்ல மனசு இருக்கு. அதிக தெய்வ பக்தி உண்டு. இப்ப பரவாயில்லை. நிறைய மாறி இருக்கார். முன்பெல்லாம் சொந்தக்காரங்களே வேண்டாம் என்ற மன நிலையில் இருந்தார். அதனால் யாருமே வர மாட்டாங்க. எங்கே வெளி ஆட்கள் வந்து குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கிடுவாங்களோன்னு பயந்தார். ஆனால் எல்லாருக்கும் அப்படி நடக்காது என்பதை பின்னர் உணர்ந்து கொண்டார். இப்ப எல்லாரும் வர்றாங்க. ஆரம்பத்தில் வராமல் இருந்த என் மாமியார் கூட பிறகு அவரோட கடைசி காலம் வரை எங்களோட தான் இருந்தார்.

இப்ப என் கணவர் நல்லது கெட்டதுக்கு என் கூட வர்றார். எங்க போனாலும் இரண்டு பேரும் சேர்ந்து தான் போறோம்.
சாப்பாடு இப்படி வேணும், அப்படி வேணும், ருசியா சமைச்சுப்போடு அப்படி எல்லாம் கேட்கவே மாட்டார். நான் சமைப்பது எதுவானாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவார். நமக்கெல்லாம் இப்படி சாப்பிடணும் அப்படி சாப்பிடணும் என்று பெரிய பெரிய ஆசை இருக்கும். அவர் மிஞ்சி மிஞ்சிப்போனால் மணத்தக்காளிக் கீரையும், சுண்டக்காய் குழம்பும் கேட்பார். அவ்வளவு தான். பரிமாறக் கூட என்னை எதிர்பார்க்க மாட்டார். ‘நீ போ நான் போட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்வார். காய்கறி மற்றும் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து தருவார்.

வெளியில் அவுட்டோர் போனால் டிரெஸ் மற்றும் அவருக்குத் தேவையான பொருட்களை அவரே தான் எடுத்து வைத்துக்கொள்வார். நான் எடுத்து வைக்கிறேன் என்றால் ‘வேண்டாம், நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்பார். அவர் வேலையை அவரே செய்து கொள்வார். தினமும் வாக்கிங் போவார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். நானும் பிள்ளைகளும் சிரித்து விளையாடிக்கொள்வோம். அவர் அதில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டார். ‘பசங்க பெரிதாகி காலேஜ் எல்லாம் போய்ட்டாங்கன்னா நம்ம கூட விளையாட மாட்டாங்க. நம்ம பக்கம் உட்கார்ந்து பேசக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் இப்பவே அவர்களுடன் ஜாலியாக இருங்க’ என்று சொல்வேன். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியாது. அவரது இயல்பு அப்படி. அதை மாற்ற முடியாது. மற்றபடி பிள்ளைகளை இதுவரை ஒரு போதும் அவர் அடித்ததில்லை. பெரிதாக கண்டிசன் எல்லாம் போட மாட்டார். அவருக்குப் பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளே செய்ய மாட்டார்கள். அவருக்கு டிவி வால்யூம் அதிகமாக இருந்தால் பிடிக்காது. அவர் கார் நகர்ந்ததும் பிள்ளைகள் சத்தம் வைத்துக்கொள்வார்கள்.

அவருக்கு சீரியல் பார்த்தா பிடிக்காது. எழுபத்தைந்து வயதாகும் என் அம்மா எங்களோட தான் இருக்காங்க. அவங்க சீரியல் பார்ப்பாங்க. எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் நான் அவர் இருக்கும் போது சீரியல் பார்க்க மாட்டேன். கோபம் வந்தால் அவர் முகத்தை வைத்துக் கண்டு பிடிக்கலாம். சிறிது நேரத்திற்கு வெளிய போய்விடுவார் அல்லது அமைதியா இருப்பார். வேறெப்படியும் கோபத்தை அவருக்குக் காட்டத் தெரியாது. நான் என் தோழிகளோடு வெளியே போவதுண்டு. எனக்கொரு கடை (Ladies accessories) வைத்து தந்தார். 5 வருடங்கள் நடத்தினேன். எனக்கு டூ வீலர் மற்றும் கார் ஓட்ட கற்றுத் தந்தது அவர் தான்.

‘சாதாரண மனுஷி எனக்கே நிறைய தோழிகள் இருக்கிறார்கள். நீங்க சினி ஃபீல்டில் இருக்கிறீர்கள். நிறைய நண்பர்களுடன் சிரிச்சுப் பேசுங்க. நல்லா பேசுங்க. சில விஷயங்களை அனுசரிச்சுப் போங்க நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள்’ என்று சொன்னால், ‘எனக்குப் பொய்யா சிரிக்கத் தெரியாது. பொய்யா பழகத் தெரியாது’ என்று சொல்வார். நிறைய நடிகர்கள் வீட்டுக்கு வருவாங்க. ஆனா இவருக்கு அவர்களோடு பெரிதா கலகலப்பா பழகத் தெரியாது. பெரிதாக அவருக்கு நட்பு வட்டம் கிடையாது. அவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லாம் கலகலப்பான டைப்பாக தான் இருக்கிறார்கள். இவர் மட்டும் சிறுவயதில் இருந்தே வாய்ப்பு தேடி சென்னை வந்து தனியாக இருந்ததாலோ என்னவோ கொஞ்சம் ரிசர்வ் டைப்பாக இருக்கிறார். மற்றபடி நல்ல குணம். அவருடைய சின்ன முக மாற்றத்தையும் நாங்கள் புரிந்து கொள்வோம். மற்றவர்கள் அவரை புரிந்து கொள்வார்களா’’ என ஆதங்கத்துடன் கேட்கிறார் ஆனந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா? (வீடியோ)
Next post சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)