பெண்கள் களத்திற்கு வரவே விரும்புகிறார்கள்!”!!(மகளிர் பக்கம்)
தமிழகத்திலும் இந்திய அளவிலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த இளைஞர் அமைப்புகள் இருந்தாலும் அதன் மாநிலத் தலைமைப் பதவியில் பெண்கள் இருப்பது அரியது. மகளிர் அணி போன்றவற்றுக்கு மட்டுமே பெண்களுக்கு தலைமை நிர்வாகத்தில் இடம் தரப்படும் நிலையில் அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில பொருளாளராக இருக்கும் தீபா அகில இந்திய துணைத் தலைவராகவும் இருக்கிறார். களப்பணி மட்டுமல்ல அவரது அடையாளம். மியூஸிக் ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவியாகவும் இருக்கிறார். அவருடன் உரையாடினேன்.
“நான் பிறந்தது படித்தது எல்லாம் கோயம்புத்தூரில்தான். கல்லூரியில் படிக்கும்போது இந்திய மாணவர் சங்க தோழமைகளுடைய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்களோடு பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூகம் குறித்த பல்வேறு கேள்விகளை விவாதித்தோம். குறிப்பாக நான் ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்குள் பல கேள்விகள் இருந்தன. பெண் ஏன் அடிமை படுத்தப்படுகிறாள்?
ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு ஏன் இல்லை போன்ற பல கேள்விகள் இருந்தன. மாணவர் சங்கத்திற்குள் வரும்போது இந்த கேள்விகள் குறித்தெல்லாம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பற்றி விவாதிப்பதும் எனக்கு பிடித்திருந்தது. சாதிய ஒடுக்குமுறை, பெண்கல்வி, தனிமனித உரிமை தொடர்பான பல கேள்விகளுக்கு நான் சார்ந்து இருந்த அமைப்பில் எனக்கு விடை கிடைத்தது. அந்த ஆர்வம் என்னை தொடர்ந்து இந்திய வாலிபர் சங்கத்திலும் பயணிக்க வைத்தது. புத்தக வாசிப்பு, நேரடியாக மக்களை சந்திக்கும் கள அனுபவங்கள் என்னை தொடர்ந்து பக்குவப்படுத்தியது. அமைப்பில் இருந்துகொண்டே எம்.ஏ மகளிரியல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன். மகளிரியல் துறை பற்றி படித்த நாட்கள் என்னுடைய வாழ்வில் மாற்றத்திற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று சொல்லுவேன். அங்குதான் பெண்ணியம் சார்ந்த அரசியலை நான் கற்றுக்கொண்டேன். அமைப்பாய் ஒன்றிணைவது, உலகளாவிய பெண் போராளிகளின் வாழ்க்கை வரலாறு என்று என்னை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது அங்கு கிடைத்த அனுபவம்தான்” என்றவர் இந்திய வாலிபர் சங்கத்தின் தமிழகத்தின் முதல் பெண் மாநில பொறுப்பாளராக தனது பணியை தொடர்கிறார்.
“திருச்சியில் படித்துக்கொண்டிருந்தபோது அமைப்பில் இருந்த மனோஜ் என்பவரை காதலித்தேன். கல்லூரி முடிந்ததும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய அமைப்பு 1980களில் இந்திய அளவில் உருவாக்கப்பட்டது. இதில் 15 முதல் 40 வயதுடைய ஆண், பெண், மாற்றுபாலினம் என அனைவரும் உறுப்பினராக இருக்கிறார்கள். சமத்துவம் கொண்ட உறுப்பினர்களைத் திரட்டும் வேலையை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆண்கள் அதிகம் உள்ள இந்த அமைப்பில் மாநிலப்பொறுப்பாளராக நான் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற அமைப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முற்போக்கான அமைப்புகளில் ஆண் – பெண் பாலின பாகுபாடு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பெண்கள் நிர்வாக பொறுப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
என்னுடைய பணிகளுக்கிடையில் “கண்ணாடி உலகம்” என்னும் மியூஸிக் ஆல்பமொன்றில் நடித்தேன். ஐடி அலுவலகத்தில் காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் கதை அது. அதில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அந்த படம் ஐடி அலுவலகத்தில் எவ்வித காரணமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் போது அந்தப் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய கதை. அந்த வீடியோவில் ஐடி ஊழியராக நான் நடித்தேன். பணி நீக்கம் செய்யப்பட்டவர் அந்த மனநிலையோடு சென்னையில் சில இடங்களுக்கு பயணம் செய்கிறார். அங்கு அவர் பார்க்கும் சில காட்சிகள் அவருக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். என்பது போல் காட்சியாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் தீபக் இந்த மியூஸிக் ஆல்பத்தை இயக்கினார்…” தொடர்ந்து பேசியவர் முற்போக்கு அமைப்புகளுக்குள் பெண்கள் வருவதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்றார்.
“தற்போது பல எதிர்ப்புகளையும் கடந்து முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து செயல்பட பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அமைப்பு ரீதியாக பெண்களை அணுகுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குடும்பம், சமூகம் என இது போன்ற அமைப்புகளுக்கு பெண்கள் வருவதை விரும்புவது இல்லை. பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறிவரும் பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். மாவட்டந்தோறும் பெண்கள் களப்பணியில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதியில் எந்த சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் முன்நின்று தைரியமாக போராட்டத்தை வழிநடத்தி செல்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தீவிரமாக இயங்கி வருவதை பார்க்க முடியும்” என்றவர் ஆராய்ச்சி மாணவராக தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
“திருமணத்திற்கு பிறகு சென்னை வந்த நான் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மாணவராக முறைசாரா பெண் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். ஆய்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். பெருங்குடி பக்கத்தில் இருக்கும் கல்லுக்குட்டை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் குறித்து 3 ஆண்டுகளாக ஆய்வு செய்திருக்கிறேன். சாதி அடிப்படையில் முறைசாரா தொழிலில் இருக்கும் அப்பகுதி பெண்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன்.
அப்போது அவர்களின் வாழ்க்கை மிகவும் சவாலானதாக இருப்பதை தெரிந்துகொண்டேன். அந்தப் பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற கிராமப்புறங்களில் இருந்து விவசாயம் இல்லாமல் இங்கு இடம் பெயர்ந்தவர்களாக இருந்தார்கள். கிராமப்புறப் பெண்கள் பொதுவாகவே தான் இருக்கும் வீடு அதை சுற்றியுள்ள வேலை வாய்ப்பை மட்டுமே எதிர்பார்த்து இருந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு வெளியில் சென்று வேலை பார்க்கும் வாய்ப்பும், பொருளாதார தேவையும் அவர்களை முறைசாரா வேலைகளில் ஈடுபடவைத்துள்ளது. அடிப்படை சுகாதார வசதி கூட இல்லாத இடத்தில் இருந்து பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைக்கு செல்வதை காண முடிந்தது.
இங்கு உள்ள பெண்களுக்கு அவர்களின் வீட்டிலிருந்தே அவர்களுக்கான சவால்கள் தொடங்கிவிடுகின்றன. தினந்தோறும் சவாலாக வாழ்க்கை நடத்தும் இந்த மக்களுக்கு ஒரே குறிக்கோள்தான் ‘எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதுதான்…’” தொடர்ந்து பேசியவர் தமிழகத்தில் இயங்கும் பிற அமைப்புகளோடு இணைந்து செயல்படுவது குறித்து பேசினார்.
“சென்னையில் இயங்கும் “மனிதி” மற்றும் பல பெண்கள் அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்ற சமூக அக்கறை கொண்ட அமைப்புகளோடு இணைந்து பணியாற் றுவதன் மூலமாக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன். எல்லா அமைப்புகளோடும் சில மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை கருத்தியலில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடிகிறது.
சென்னை திருவொற்றியூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மூலம் அகில இந்திய இளம் பெண்கள் மாநாடு நடக்கிறது. பெண்களுக்கான பிரச்சனை என்பது அவர்களது குடும்பத்தில் இருந்தே துவங்குகிறது. இந்த மாநாட்டில் பெண்கள் வேலை பார்க்கும் அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் கமிட்டி அமைக்கவும், சட்டத்தை அமல்படுத்தவும், பெண்களுக்கு சம வேலை சம ஊதியம் வழங்குவது, வரதட்சணை கொடுமையை தடுப்பது, அரசுத் துறையில் வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்துவது, தமிழகத்தில் இருக்கும் சுமங்கலி திட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில் இந்தியா முழுக்க உள்ள பெண்கள் கலந்துகொள்கிறார்கள். அந்தந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும், அமைப்பு ரீதியாக அந்தப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும். சமூக ஏற்றத்தாழ்வுகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக எல்லா மாவட்டத்திலும் 20 சதவீதம் பெண்களை நிர்வாகிகளாக உத்தரவாதப்படுத்தியிருக்கிறோம்” என்றவர் மறக்க முடியாத களப் போராட்டம் ஒன்றை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
“தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பணமதிப்பிழப்பு பிரச்சனையில் போராட்டம் நடத்தும்போது காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். அந்த சம்பவத்தை
இன்றும் மறக்க முடியவில்லை. அரசு மக்களின் கோரிக்கைகளையும், நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியைதான் செய்கிறதே தவிர பிரச்சனைக்கான தீர்வை அரசு ஒரு போதும் எடுத்தது கிடையாது. நீட் பிரச்சனையாக இருக்கட்டும், ஐடி ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகள், இட ஒதுக்கீட்டு பிரச்சனை என எதுவாக இருந்தாலும் சரி இந்த அரசு ஒடுக்குமுறையையே கையாள்கிறது. கோரிக்கைகளை கேட்க கூட அதிகாரிகள் தயாராக இருப்பதில்லை.
குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் வலுவான போராட்டங்களை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. சமூக நீதியை தமிழக அரசு இழந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கான ஒடுக்குமுறை என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகம் நடந்திருக்கிறது. உலக நாடுகளில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. ஆனால் இங்கு உள்ள இளைஞர்களை மத்திய அரசு பக்கோடா விற்க சொல்கிறது. எவ்வளவு கேவலமான ஆட்சியை இந்திய நாடு ஏற்று இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை” என்றார் தீபா.
Average Rating