பேயை காட்டினால் 20 லட்சம் – வாட்டிகனுக்கு சவால்!!

Read Time:13 Minute, 3 Second

வாடிகன் சிட்டி கிறித்துவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. கிறித்துவ மதத்தின் உயர் அதிகாரம் படைத்தவரான போப் வாடிகன் சிட்டியில் வசிக்கிறார். உலகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மதகுருக்களுக்கு மத விவாகரங்கள் குறித்த பயிற்சிகள் வாட்டிகன் சிட்டியில் அளிக்கப்படுகின்றன.

சமீபத்தில் பேயோட்டுவதற்கான பயிற்சி வகுப்பு குறித்த ஒரு அறிவிப்பை வாட்டிகன் வெளியிட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இப்பயிற்சி வகுப்பின் முக்கியக் குறிக்கோள் பேய் மற்றும் தீய சக்திகள் ஆட்கொண்டிருப்பதாக கூறப்படும் மக்களின் பிரச்சினையை மதகுருக்கள் எப்படித் தீர்ப்பது என்பதே ஆகும்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பேய்கள், தீய சக்திகள் ஆகியவற்றில் கிறித்துவம் நம்பிக்கை கொண்டிருப்பது புதிதல்ல. கிறித்துவத்தில் ஒருவரை புனிதர் என அறிவிப்பதற்கான முக்கியமான அடிப்படைகளில் ஒன்று அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டுவது.

அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்ற கூற்றுகளின் அடிப்படையிலேயே அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. திருச்சபையின் இம்முடிவுகளை உலகம் முழுவதுமுள்ள பகுத்தறிவாளர்கள் எதிர்த்தனர். ஆனால் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் புனிதரைத் தேர்ந்தெடுப்பதற்கு அதே அளவுகோலை தொடர்ந்து கடைப்பிடித்தது வாட்டிகன் .

பேயோட்டுவதற்கு வகுப்புகளை துவங்குவதாக அறிவித்திருக்கும் வாட்டிகன் சிட்டியின் நடவடிக்கை கிறித்துவத்தை மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னால் அழைத்துச்செல்லும் முயற்சியாகத் தெரிகிறது. இது போன்ற வகுப்புகளை நடத்த கிறித்துவ மக்களிடையே எழுந்த கோரிக்கைகளே வாடிகன் சிட்டி பேயோட்டும் வகுப்புகள் தொடங்குவதற்கான காரணம். இத்தாலியில் இருந்து மட்டும் பேய்கள் மற்றும் தீய சக்திகளால் பாதிப்புகளை சந்திப்பதாக ஐம்பதாயிரம் பேர் திருச்சபையை நாடியுள்ளனர்.

முழு ஐரோப்பாவிலும் இப்படிக் கோரியவர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டும். மூளை அறிவியல் மற்றும் உளவியலின் நவீன முன்னேற்றங்கள் மூலம் ஏன் இவ்வளவு பேர் இது போன்ற பிரச்னைகளுக்கு உதவியை நாடுகிறார்கள் என எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் திருச்சபையானது இம்மக்களுக்கு மிகப்பழமையான வடிவத்தில் உதவ முடிவெடுத்தது ஏன் என்பதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை.

மூளை அறிவியல் மற்றும் உளவியல் அறிவியலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மூலம் உண்மையில் எழாத குரல்களை கேட்பது, உண்மையில் நிகழாத காட்சிகளைப் பார்ப்பது போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிலையை அறியமுடியும். மனநலக் கோளாறான ஷிசோஃப்ரீனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் ஏற்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஊக்கமருந்தும் இன்றி மூளையில் ஏற்படும் வேதி இடையூறுகள் காரணமாக உண்மையில் எழாத குரல்களைக் கேட்பது, நிகழாத காட்சிகளைப் பார்ப்பது போன்ற உணர்வுகளுக்கு ஆட்படலாம்.

பாதிக்கப்பட்ட நபர்கள் மூளையின் வேதி இடையூறுகள் காரணமாக எந்தவித ஊக்கிகள் துணையின்றி குரல்களை கேட்கவும் காட்சிகளைக் காணவும் முடியும். இத்தகையை நோய்களை அறியாத குடும்பங்கள் மற்றும் நபர்கள் இந்த அனுபவங்களை புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட, ஆனால் மூளையால் உணரக்கூடியவை என விவரிக்கின்றனர். மேலும் அறியாமை மற்றும் தவறான நம்பிக்கைகள் காரணமாக பேயோட்டும் உதவியை நாடுகின்றனர்.

தொழில் ரீதியாக, நிதி அல்லது உறவுப் பிரச்னைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் அதிகரிக்கும் பிரச்னைகளை சந்திக்கும் தனிநபர்கள், அவர்களின் பாதிப்புக்கு பேய் அல்லது தீய சக்திகள் தொந்தரவே காரணமாக இருக்கலாம் எனும் நம்பிக்கையின் பாதிப்புக்குளாகிறார்கள்.

நமது துன்பத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவது மனித மூளையின் உள்ளார்ந்த போக்கை பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு அவர்களின் துயரத்துக்கான உண்மையான காரணத்தை ஆராயவும், அதனை அவர்களே அறிந்துகொள்ளவும் ஊக்கப்படுத்துவதே தன்மேல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு செய்ய வேண்டியதாகும். திருச்சபை வழங்கிவரும் தீர்வானது தனிநபர்களுக்கு தவறான வழிகாட்டுதல்களாக உள்ளதாக கருதமுடியும்.

உண்மையிலேயே திருச்சபை இவர்களுக்கு உதவ விரும்பினால் மதகுருக்களுக்கு மனித மூளை மற்றும் மனம் குறித்த அடிப்படைகளை பயிற்றுவிக்க வேண்டும். ஏன் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன என அறிவியல் பூர்வமாக விளக்குவது மற்றும் மனநல நிபுணர்களை நாட ஊக்கப்படுத்துவதே உண்மையில் செய்ய வேண்டியதாகும்.

இதுபோன்ற அறிவியல்பூர்வமற்ற செயல்களை ஏன் திருச்சபை பின்பற்றுகிறது என்பதற்கு நெடிய வரலாறு உண்டு. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பே தனது கூர்நோக்குப் பார்வை மூலம், பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருக்கிறது என்ற நம்பிக்கையை உடைத்து பூமி சூரியனை சுற்றுகிறது; சூரியன் பூமியை சுற்றவில்லை என நிரூபித்த்தார் கலிலியோ.

அவரை வாழ்த்துவதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை விதித்தது திருச்சபை. கலிலியோ திருச்சபைக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் ஒன்று அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து.

300 ஆண்டுகள் கழித்து கலிலியோவுக்கு தான் செய்த தவறு குறித்து மன்னிப்பு கேட்டது திருச்சபை.

இது திருச்சபை சார்பில் எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. மேலும் திருச்சபையின் பணிவு காரணமாக உண்மையில் மதத்தின் மீதான மரியாதை அதிகரித்தது. பணிவாக இருப்பதும் தவறுகள் இருந்தால், கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதுமே அறிவியல்.

முந்நூறு வருடங்களுக்கு முன் செய்த தவறை வாட்டிகன் சிட்டி மீண்டும் செய்ய விரும்பவில்லையெனில் பேயோட்டும் பயிற்சி வகுப்பு நடத்தும் முடிவை கைவிட வேண்டும். கிறித்துவத்தில் உள்ள அறிவியல்பூர்வமற்ற விஷயங்களுக்கு எதிராக ரிச்சர்டு டாகின், சாம் ஹாரிஸ் போன்ற பல அறிஞர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த விஷயத்தை விரிவாகத் தெரிந்துக்கொள்ள சாம் ஹாரிஸ் எழுதிய ´கிறித்துவ தேசத்துக்கு ஒரு கடிதம்´ மற்றும் ´நம்பிக்கையின் முடிவு´ ஆகிய புத்தகங்களை படிக்கவேண்டும். போப் ஃபிரான்சிஸ் முற்போக்கு சிந்தனையுள்ளவர். ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இங்கே , அறிவியல் ரீதியான மனோநிலைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு தெளிவான சேதியை கூறுவதற்கு திருச்சபைக்கும் போப்புக்கும் மற்றொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்தியாவிலும் தன்னைத் தானே கடவுள் என அறிவித்துக்கொண்டவர்கள் மற்றும் பேய், தீய சக்திகள் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட மக்களுக்கு தங்களது தெய்வீக சக்திகள் மூலம் உதவமுடியும் என கூறுகிற மதத்தலைவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு தசாப்தங்களாக மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் நீண்ட போராட்டம் மற்றும் அதன் தலைவர் டாக்டர் நரேந்திர தபோல்கரின் உயிர்த் தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு மாந்த்ரீகம் முதலான கண் கட்டி வித்தைகள் எதிர்ப்பு சட்டத்தை 2013-ல் கொண்டு வந்த முதல் இந்திய மாநிலமானது மஹாராஷ்டிரா.

இச்சட்டத்தின்படி மதத்தின் பெயரில் தன்னிடம் இயற்கையை கடந்த சக்தி இருப்பதாகக் கூறி குடிமக்களைச் சுரண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த சட்டத்தின் கீழ் 400க்கும் அதிகமான, தன்னை கடவுள் என கூறிக்கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவும் இத்தகைய சட்டத்தினை சமீபத்தில் இயற்றியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, பிஹார், அசாம் முதலான மாநிலங்களும் இது போல் நடவடிக்கை எடுக்கும் முயற்சிக்கான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன.

மாந்த்ரீக கண் கட்டி வித்தைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றியுள்ளதால், அறிவியல் ரீதியிலான விசாரணையின் மீது அக்கறை கொண்ட கலாசாரத்தில் இந்தியா ஐரோப்பிய நாடுகளை விட ஒரு படி முன்னே உள்ளதாக கருதப்படுகிறது.

அறிவியல்பூர்வ சூழலில் யாராவது பேய்கள் மற்றும் தீய சக்திகள் இருப்பதை நிரூபித்துக் காட்டினால் 20 லட்ச ரூபாய் ரூபாய் பரிசு தருவதாக வெளிப்படையான சவால் விடுத்திருக்கிறது மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி. பேயோட்டும் பயிற்சி வகுப்பை வாட்டிகன் கைவிடாவிட்டால் இந்த சவாலை ஏற்று தீய சக்திகள் இருப்பதை நிரூபித்துக் காட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளது இந்த அமைப்பு.

உலகம் முழுவதும் இதே போன்ற மனநிலையில் இருக்கும் அனைத்து பகுத்தறிவு நிறுவனங்களுடனும் கைகோர்த்து அறிவியல் பூர்வமற்ற வகுப்புக்கு எதிரான பிரசாரத்தை துவங்கத் திட்டமிட்டுள்ளது மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது!!(கட்டுரை)
Next post கோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)