மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?(கட்டுரை)

Read Time:12 Minute, 58 Second

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார்.

மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும்.

அதிலும் குறிப்பாக, மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் இல்லாத நேரத்தில் இது போன்ற குரல்கள் எழும்பும்; போராட்டங்கள் நடக்கும்; மாநில சுயாட்சிக் கூட்டங்கள் நடக்கும். தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் எல்லோரும் கூடி, ஆலோசித்த வரலாறுகள் எல்லாம் இந்தியாவில் உண்டு.

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது, மாநிலங்களுக்குள்ள அதிகாரங்கள் பற்றி, ‘காஷ்மீரத்து சிங்கம்’ என்று கருதப்பட்ட சேக் அப்துல்லா, போர்க்கொடி தூக்கினார்.

கேரள மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாடு கூட, இந்தக் குரலை எழுப்பினார்.
ஆளுநருக்கு அதிகாரம், குடியரசுத் தலைவரின் அதிகாரம், சபாநாயகரின் அதிகாரம் என்றெல்லாம் எப்படி அவ்வப்போது, சுதந்திர இந்தியாவில் சர்ச்சையாகி இருக்கிறதோ, அதுபோன்று ‘மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள்’ என்பதும் சர்ச்சைகளின் தொகுப்பாகவே நீடிக்கிறது.

இந்திய அரசமைப்பு, மத்திய அரசாங்கத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, ‘யூனியன் லிஸ்டில்’ வரையறுத்துள்ளது. மாநில அரசாங்கங்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, ‘ஸ்டேட் லிஸ்டில்’ தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவாக இருக்கும் அதிகாரத்தை, ‘கன்கரன்ட் லிஸ்ட்’ தெளிவாக வரையறுத்துள்ளது.

இந்தியாவில் நெருக்கடி நிலைமை அமுலில் இருந்தபோது, மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு அதாவது ‘கன்கரன்ட் லிஸ்ட்’க்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்போது மருத்துவக் கல்வியில், ‘நீட் தேர்வு’ உயர்கல்வியில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பலவற்றை, மத்திய அரசாங்கம் கொண்டு வருவதற்கும் அதை மாநில அரசாங்கங்கள் எதிர்த்துப் போராடுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணம் .

காஷ்மீரில் தொடங்கிய குரல், அண்ணா காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற கோஷமாக மாறியது. திராவிட நாட்டுக் கோரிக்கை கூட, இதன் தொடக்கமாகும். திராவிட முன்னேற்றக் கழகம், ‘காங்கிரஸ் எதிர்ப்பின்’ ஒரு பகுதியாக, ‘தென் மாநிலங்களைப் புறக்கணிக்கிறார்கள்’ என்ற கோரிக்கையை முன் வைத்தது.

‘ஹிந்தித் திணிப்பு’ உள்ளிட்ட நடவடிக்கைகளை, எளிதில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயற்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்த, இப்படிப் பேசியது தி.மு.க. 1967இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை பிரச்சாரம் இது.

தி.மு.கவின் சார்பில், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, முதலமைச்சரான கருணாநிதி இந்தப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்தார். சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியேற்றும் உரிமை, மாநில முதலமைச்சருக்கே வேண்டும் என்று, பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வாதிட்டுப் பெற்றார்.

‘தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, அதில் பெரும் சர்ச்சையே உருவானது. இது போன்ற சூழ்நிலையில்தான், ‘ராஜமன்னார் ஆணைக்குழுவை’ கருணாநிதி அமைத்தார். ஆட்சியிலிருந்த முதலமைச்சர் ஒருவர், மாநில அரசாங்கத்துக்கு இந்த அதிகாரங்கள் எல்லாம் வேண்டும் என்று, ஓர் ஆணைக்குழுவை அமைத்தது இந்திய அரசியலில் பரபரப்பானது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து, மாநில சுயாட்சித் தீர்மானமாக 1970களிலேயே நிறைவேற்றி, பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

அதைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் ‘சர்க்காரியா ஆணைக்குழுவை’ நியமித்தது. ‘மத்திய- மாநில அரசு உறவுகள்’ பற்றி ஆராய்ந்து, அறிக்கை அளிப்பது இந்த ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட கடமைகள் ஆகும். அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள், இதுவரை மத்திய – மாநில அரசுகள் உறவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை.

தென் மாநிலங்கள் ஒவ்வொன்றும், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் குறித்து, கோரிக்கைகளை முன்வைத்தே வந்திருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 1989 வரை இந்தச் சர்ச்சைகள் நீடித்தன.
அதன் பிறகு, ஒரு கட்சி ஆட்சிமுறை என்பதற்கு, மத்தியின் ஆட்சியில் வாய்ப்புகள் குறைந்து, கூட்டணி ஆட்சி, அதிலும் குறிப்பாக, மாநிலக் கட்சிகளின் தயவுடன் மத்தியில் ஆட்சி என்ற யதார்த்தமான நிலை உருவானது.

பலமாக இருந்த காங்கிரஸ் கட்சி, பலவீனமடைந்ததும் அதற்கு மாற்றாக, பாரதிய ஜனதா கட்சியால், தேசிய அளவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாத சூழலும், மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசாங்கத்தின் போக்குக்குக் கடிவாளம் போட்டன என்றே கூற வேண்டும்.

ஆனாலும், மத்திய – மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய, ‘ஜீவன் ரெட்டி ஆணைக்குழு’, ‘பூஞ்ச் ஆணைக்குழு’ போன்றவை நியமிக்கப்பட்டும், சர்க்காரியா ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்பட்ட நிலையே தொடர்ந்தது.

மாநிலக் கட்சிகளின் தயவுடன், மத்தியில் ஆட்சி செய்த பிரதமர்கள் வி.பி.சிங், நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே குஜ்ரால், மன்மோகன் சிங் அனைவருமே மாநிலக் கட்சிகளின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கும் முன்பு, கத்தி முனையில் நடப்பது போலவே, நடந்து கொண்டார்கள்.

ஆனாலும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தைத் தங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தார்கள். ஏறக்குறைய 1989 முதல் 2014 வரை, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியும் தேசிய முன்னணியும் ஐக்கிய முன்னணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஆட்சி செய்துள்ளன.

2014க்குப் பிறகு, மீண்டும் மாநில உரிமைகள், மாநில அதிகாரங்கள், மாநில சுயாட்சி’போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, இந்தக் கோஷம் ஒலித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என்று, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதி, ‘மாநில உரிமைகள்’ பற்றிய கோரிக்கைக்குப் புத்துயிரூட்டினார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா, ‘கர்நாடகத்துக்குத் தனிக்கொடி’ என்ற கோரிக்கையையும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையையும் முன் வைத்தனர்.

15 ஆவது நிதி ஆணையகத்தின் பரிந்துரைக்கான ஆய்வு வரம்புகள், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அளிக்கும் நிதியைக் குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் ‘மாநிலத்தின் நிதித் தன்னாட்சி’ பறிபோகிறது என்றும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதி, ஆதரவு திரட்டினார். கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், 15ஆவது நிதி ஆணையகத்தின் மாநிலங்களுக்கு எதிரான அம்சங்கள் குறித்து விவாதிக்க, தென் மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார்.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் பாதை, ‘ஜனநாயகப் பாதையாக இல்லை’ என்ற கருத்து, அனைத்துத் தரப்புகளின் மட்டங்களிலும் ஏற்பட்டு வருகிறது. பா.ஜ.கவுடன் கூட்டணியாக இருக்கும் மாநிலக் கட்சிகள் கூட, தங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபடுகிறது என்று எரிச்சற்படுகிறார்கள்.

பா.ஜ.கவுக்கு எதிரான தேர்தல் களத்தை உருவாக்குவதே இந்த மாநிலச் சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்த கூட்டங்கள், ஆலோசனைகளே தவிர, மத்திய- மாநில அரசுகளின் உறவுகளில் இந்தகைய சந்திப்புகள் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை என்பதே, காலம் கற்பிக்கும் பாடமாக எப்போதும் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர, நரைமுடி மறைய!!( வீடியோ)
Next post குழந்தைகளுடன் ஜல்லிக்கட்டு காளைகள்!!(வீடியோ)