எல்லை பிரச்னையை தவிர்க்க இந்தியா – சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்!!(உலக செய்தி)
டோக்லாம் போன்று எதிர்காலத்தில் எல்லை பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க, இந்தியா-சீன ராணுவம் இடையே தகவல் தொடர்பை பலப்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முடிவு செய்துள்னர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச, பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை சீனா சென்றார். உகான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளத்தில் ஜின்பிங்கை சந்தித்து மோடி பேசினார். உகானில் உள்ள ஹூபே அருங்காட்சியகத்தை ேமாடிக்கு ஜின்பிங் சுற்றிக் காட்டினார். பின்னர், கிழக்கு ஏரிக்ரையில் நேற்று காலை மோடியும், ஜின்பிங்கும் தேநீர் அருந்தியபடி நடந்து சென்று, இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினர். பிறகு, ஒரு மணி நேரம் படகு சவாரி செய்தபடி பேசினர். இந்த சந்திப்பு பற்றி இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோலலே கூறியதாவது: இந்திய-சீன எல்லை பகுதியில் அமைதியை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர்.
எல்லைப் பிரச்னைகளை தவிர்க்கவும், இரு தரப்பிடையே நம்பிக்கையையும், புரிதலையும் அதிகரிப்பதற்காகவும் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தற்போதுள்ள தகவல் தொடர்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நியாயமாக அமல்படுத்த வேண்டும் என தங்கள் நாட்டு ராணுவத்தினருக்கு இரு தலைவர்களும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இரு நாடுகள் இடையேயான வலிமையான தகவல் தொடர்பு, பிராந்திய மற்றும் உலக ஸ்திரத்தன்மை ஏற்பட உதவும் என அவர்கள் நம்புகின்றனர். எல்லை பிரச்னைகளுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வை காண்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதிகளின் செயல்பாட்டை இரு தலைவர்களும் ஆதரித்துள்ளனர். இந்தியா-சீனா இடையேயான 3,488 கிமீ நீளமுள்ள எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இதுவரை 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. மேலும், அனைத்து வேறுபாடுகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தேவையான அறிவும், பக்குவமும் இரு நாடுகளுக்கும் உள்ளதாக தலைவர்களும் நினைக்கின்றனர்.
இரு நாடுகள் இடையேயான ஒட்டு ெமாத்த உறவை மனதில் வைத்து, இருதரப்பின் உணர்வுகள், கவலைகள் மற்றும் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து செயல்பட வேண்டும். இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சம அளவிலும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் கருதுகின்றனர். மேலும், வேளாண், மருந்து பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜின்பிங்குடன் மோடி பேசினார். மேலும், இரு நாடுகள் இடையே விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் பேசினர். உலகளவில் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் சீரான பொருளாதாரத்தை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர். வளரும் நாடுகளின் தேவைகளை நிறைவேற்ற, நிதி மற்றும் அரசியல் அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.
உலகின் முதுகெலும்பு
சீன அதிபர் ஜின்பிங் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவும், சீனாவும், நல்ல நண்பர்களாக, நல்ல அண்டை நாடுகளாகவும் இருக்க வேண்டும். இரு தரப்பு உறவு வலுவாக இருக்க, இருதரப்பின் கவலைகளை சரியான நேரத்தில் தீர்க்க நெருங்கிய தகவல் தொடர்பை ஏற்படுத்துவது அவசியம். வேறுபாடுகளை மிகவும் பக்குவமான விதத்தில் அணுக வேண்டும். உலக பன்முகத்தன்மை மற்றும் பொருளாதார உலகமயமாக்கலில் இந்தியாவும், சீனாவும் முதுகெலும்பாக உள்ளன. அதனால், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும். உலகின் ஸ்திரத்தன்மைக்கும், மனித இனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் சீனா-இந்தியா உறவு நன்றாக இருக்க ேவண்டியது முக்கியம்’’ என்றார்.
ஆக்கபூர்வமான டீ சந்திப்பு
ஜின்பிங்குடன் நடத்திய சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘பல துறைகளில் இந்தியாவும், சீனாவும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து அதிபர் ஜின்பிங்குடன் பேசினேன். பொருளாதார உறவு, இருநாட்டு மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், வேளாண்மை, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்துவது பற்றியும் பேசினேன்’’ என்றார். டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, ‘ஜின்பிங்குடன் நேற்று காலை பேச்சுவார்த்தையை தொடர்ந்தேன். இருதரப்பு உறவில் பல விஷயங்கள் குறித்து விவாதித்தேன். டீ சந்திப்பில் ஆக்கபூர்வமாக விவாதித்தோம். வலுவான இந்தியா-சீனா உறவு இரு நாடுகளுக்கும், உலகுக்கும் பலனளிக்கும். அமைதி, செழிப்பு, வளர்ச்சி ஏற்பட உகானின் அழகான கிழக்கு ஏரிக்கரையில் ஜின்பிங்குடன் படகு சவாரி செய்தேன்’ என குறிப்பிட்டுள்ளார். ஜின்பிங்குடன் மதிய விருந்தை முடித்துவிட்டு மோடி நேற்று இந்தியா புறப்பட்டார்.
ஆப்கானில் பொருளாதார திட்டம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பொருளாதார திட்டத்தை ஏற்படுத்துவது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி பேசினார். இதற்கு ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டார். இந்த நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Average Rating