ஆஸ்திரேலியர்களை ஈர்க்கும் ஏஎப்எல் காந்தம்!(உலக செய்தி)

Read Time:6 Minute, 21 Second

இந்தியாவில் விளையாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த லீக் போட்டித் தொடர் என்றால் ஐபிஎல் டி20 என்று பொடிசுகள் கூட பளிச்சென்று பதில் சொல்லிவிடும். அந்த அளவுக்கு ஐபிஎல் கொடிகட்டிப் பறக்கிறது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடத்தப்பட்டாலும், மவுசு என்னமோ கால்பந்து விளையாட்டுக்கு தான். நாம் வழக்கமாக விளையாடும் கால்பந்து என்று நினைத்துவிடாதீர்கள். முட்டை வடிவில் இருக்கும் பந்தை வைத்துக் கொண்டு முட்டி மோதுவதைத்தான் ஆஸ்திரேலியன் புட்பால் லீக் (ஏஎப்எல்) என்று அழைக்கிறார்கள். இதே வகையை சேர்ந்த ரக்பி, ஃபூட்டி போட்டிகளின் விதிமுறைகளில் மட்டும் சில சிறிய வித்தியாசங்கள். ஏஎப்எல் தொடரை நடத்த ஆரம்பித்து 120 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1897ல் இருந்து 1989 வரை விக்டோரியன் புட்பால் லீக் ஆக இருந்து, பின்னர் ஏஎப்எல் ஆக மாறியிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் மொத்தம் 18 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. வார இறுதி நாட்களில் நடக்கும் போட்டிகளை பார்க்க திருவிழாக் கூட்டம் போல திரள்கிறார்கள். கைக் குழந்தைகளோடு கூட கிளம்பி வந்துவிடுவதை பார்க்க முடிகிறது.

வீரர்களுக்கு உடல்தகுதி மிக முக்கியம். தலா 20 நிமிடங்கள் கொண்ட 4 பகுதியாக போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியிலும் தலா 18 வீரர்கள் மற்றும் 3 மாற்று வீரர்கள். பெரிய மைதானத்தில் பந்தயக் குதிரைகளாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் சுழற்சி முறையில் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நான்கு கோல் கம்பங்கள். நடுவே ஓங்கி உயர்ந்து நிற்கும் இரண்டு கம்பங்களுக்கு இடையில் எந்த ஒரு வீரரின் மீதும் படாமல் பந்தை உதைத்தால் அதிகபட்சமாக 6 புள்ளிகள் வழங்கப்படுகிறது. அதன் இருபுறமும் உள்ள கோல் பகுதியில் பந்து சென்றால் ஆறுதலாக ஒரு புள்ளி கிடை க்கும். பந்தை வேறு வீரருக்கு பாஸ் செய்ய ஒரு கையின் உள்ளங்கையில் வைத்து மறு கையை இறுக்கிமூடி குத்த வேண்டும். பந்தை கையில் வைத்துக் கொண்டு அதிகபட்சமாக 15 மீட்டர் வரை ஓடலாம். அதற்குள்ளாக வேறு ஒருவருக்கு பாஸ் செய்தாக வேண்டும். எதிரணி வீரரை சமாளிக்க தோள்பட்டை வரை பிடித்து அமுக்கி மடக்கலாம். கழுத்து தலைப் பகுதியில் கை வைக்கக் கூடாது. வீரர்களின் சம்பளத்துக்கும் உச்சவரம்பு இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் சீசனுக்கு 5 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் ஏ கிளாஸ். காப்பீடு, ஓய்வூதியம் போன்ற அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

ஒவ்வொரு கிளப்பும் தொடர்ச்சியாக வீரர்களை தயார் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவில் கபடி வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் திடகாத்திரமாக இருப்பதை பார்த்து அவர்களுக்கு ஏஎப்எல் விளையாட்டை அறிமுகம் செய்யும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இந்த விளையாட்டு ஏற்கனவே காலூன்றி இருக்கிறது. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழகம் வரை கிளை பரப்பியிருக்கிறது ஏஎப்எல் என்ற தகவல் வியப்பூட்டுகிறது. கொல்கத்தாவை சேர்ந்த சுதிப் சக்ரவர்த்தி இந்த விளையாட்டால் ஈர்க்கப்பட்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்ததுடன், விளையாட்டு மேலாண்மை மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று மெல்போர்னில் ஏஎப்எல் கிளப் நிர்வாகியாக பணியாற்றுகிறார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் ஏஎப்எல் விளையாட்டை பிரபலப்படுத்தியாக வேண்டும் என்ற வேட்கை பிளஸ் உத்வேகத்தை ஆஸ்திரேலியர்களிடம் உணர முடிகிறது.

ஒவ்வொரு கிளப்பும் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துகின்றன. உறுப்பினர்களுக்கு சலுகை கட்டணத்தில் டிக்கெட், சீருடை, தொப்பி… என்று வாரி வழங்குகிறார்கள். தற்போது மகளிர் அணிகள், கிளப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அரசின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. கிரிக்கெட், ஹாக்கி, நீச்சலில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்திரேலியர்களின் முதல் காதல் என்றால் அது ஏஎப்எல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏஎப்எல் சாம்பியன் அணியுடன் உலக அணி மோதும் காட்சிப் போட்டிகளை, இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தவும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் போஷிசன்கள் பலவிதம்….!!(அவ்வப்போது கிளாமர்)
Next post போர் வீராங்கனையாக மீண்டும் தமன்னா !!(சினிமா செய்தி)