ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)
கர்ப்பம் என்றால் என்ன என்றும் மருத்துவ அறிவியல் அதை மும்மாதங்களாகப் பிரித்திருப்பது பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். முதல் மும்மாத (டிரைமஸ்டர்) பராமரிப்புக் குறித்துப் பார்க்கும் முன் கர்ப்பத்துக்குத் தயாராவது குறித்து ஒரு குயிக் வ்யூ பார்ப்போம். ஏனெனில், முறையான கர்ப்ப கால பராமரிப்பு என்பது கர்ப்பம் அடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே, அதாவது கர்ப்பத்துக்குத் திட்டமிடுவதில் இருந்தே தொடங்கிவிடுகிறது. கர்ப்பத்துக்கு தயாராவது என்றால் என்ன? அதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை விளக்குகிறார், சந்தோஷ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி முரளி.
கர்ப்பத்துக்குத் தயாராதல்
பொதுவாக, பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டைகள், இயல்பான மாதவிலக்கு உள்ளவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்ற இரண்டாவது வாரத்தில் முதிர்ச்சி அடைகின்றன. மாதவிலக்கு சுழற்சி நின்ற முதல் ஐந்தாறு நாட்களும் மீண்டும் சுழற்சி ஏற்படுவதற்கு முன்பான ஐந்தாறு நாட்களும் உறவுகொள்ளும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனால் இரண்டாவது வாரத்தில், குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி நின்ற 12ம் நாளில் தொடங்கி 18வது நாளுக்குள் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
உணவுமுறை
கர்ப்பம் தரிப்பதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் வாழ்க்கைமுறையும் மிகவும் அவசியம். கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புகள், நுண்ணூட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவுகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
காலை உணவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது. இரவு முழுதும் உண்ணாமல் இருப்பதால், பசி உருவாகி உணவைச் செரிப்பதற்கான அமிலங்கள் தயார் நிலையில் இருக்கும். காலை உணவை தவிர்க்கும்போது, இவை செரிமானத்தை பாதிக்கும். அதே போல ஒவ்வொரு வேளை உணவையும் குறித்த நேரத்தில் உண்ண வேண்டியது அவசியம். அவசியம் எனில் ஓர் உணவியல் நிபுணரை ஆலோசித்து உங்களுக்கான பிரத்யேகமான டயட்டை சார்ட் ஒன்றை தயாரித்துக்கொண்டு அதைப் பின்பற்றலாம்.
வாழ்க்கைமுறை
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே சிக்கலற்ற குழந்தைப் பேறுக்கு அஸ்திவாரம். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம். தினமும் காலையில் எழுந்து அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஓசோனைஸ்டு காற்று உடலுக்குக் கிடைக்கிறது. இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கும்.
டென்ஷன், பதற்றம், மனச்சோர்வற்ற மனநிலை மிகவும் முக்கியம். மனதுக்கு இனிமையான விஷயங்களைப் பேசுவது, கேட்பது மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வது முக்கியம். டி.வி. சீரியல் பார்ப்பது, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் எந்நேரமும் உழன்றுகொண்டிருப்பது போன்ற மனதைப் பாதிக்கும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்றவை மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும். மேலும், இரவு உணவு உண்டதும் சிறிது நேரம் கழித்து
படுக்கைக்குச் செல்வது நல்லது.
படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்ட அனைத்து வகையான எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகள் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள். இவை கண் நரம்புகளைப் பாதித்து ஆழமான தூக்கத்தைக் கெடுக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்தில்தான் மெலட்டோனின் என்ற உடலுக்கு முக்கியமான ஹார்மோன் சுரக்கிறது. மேலும், உடலின் வளர்சிதைமாற்றப் பணிகள் நடப்பதும் உறக்கத்தில்தான். உறக்கம் கெடும்போது உடல் நலமும் கெடுகிறது. எனவே, உறக்கத்தைக் கெடுக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். தினமும் பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும் அவசியம்.
ஃபோலிக் ஆசிட்
கர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளையும் இரும்புச்சத்து மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இன்று பல பெண்களுக்கு வைட்டமின் பி குறைவாக உள்ளது. இதனால், உடல் பலவீனம், ரத்தசோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்னைகளும் உருவாகின்றன. குறிப்பாக, கரு உண்டாவதில் பிரச்னை, கருத் தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
இந்தப் பிரச்னைகளை தவிர்க்கவே, மருத்துவர்கள் வைட்டமின் பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்கும், கருவுறப்போகும் பெண்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், திருமணம் நிச்சயமான உடனேயே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. திருமணம் ஆன உடன் குழந்தை பெறும் திட்டம் இல்லை என்றால், குழந்தைப்பேறுக்குத் திட்டமிடத் தொடங்கும்போது எடுத்துக்கொள்ளத் தொடங்கலாம்.
ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகள்
பசலைக் கீரை, முருங்கைக் கீரை போன்ற அடர்பச்சைக் கீரைகள், பீன்ஸ், கேரட், பிரக்கோலி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், அவகடோ, திராட்சை, வேர்க்கடலை, பாதாம் போன்ற உணவுகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. அடுத்த இதழில், முதல் மும்மாதத்துக்கான பராமரிப்பு பற்றியும் முதல் மும்மாதத்தில் ஏற்படும் சந்தேகங்கள் பற்றியும் பார்ப்போம்.
Average Rating