பம்மாத்து அபிவிருத்தி!!(கட்டுரை)
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள்.
கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை எல்லாம் காண நேரிட்டபோது, நம்மிடம் எவையிருந்தும் அந்தக் கணத்தில் பிரயோசனமில்லைப் போல் தோன்றியது.
நீரைத் தடங்கலின்றிப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, சிந்திக்க வேண்டிய தேவை எழுந்தது. ஒரு காலத்தில், வாளிகளால் அள்ளிக் குளித்த நமது கிணறுகள், நினைவுகளுக்குள் வந்து போயின.
அபிவிருத்தி என்பது என்ன, என்கிற கேள்வி முக்கியமானதாகும். அநேகமாக, கட்டடங்களை ஊர் முழுவதும் கட்டுவதையே அபிவிருத்தி என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
நமது அரசியல்வாதிகளும் அபிவிருத்தி என்கிற கோதாவில், ‘கொங்றீட் காடு’களைத்தான் கட்டித் திறந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான், கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளுக்கு, நமது அரசியல்வாதிகள் ‘அபிவிருத்திப் பெருவிழா’ என்று பெயர் சூட்டுகின்றனர்.
மூன்று நாட்களுக்குத் தண்ணீர் இல்லையென்றால், எந்தக் கட்டடம் இருந்தும் பிரயோசனமில்லை; ஊர் நாறிவிடும்.
அபிவிருத்தி
அபிவிருத்தி என்பது, முதலில் மக்களுக்குச் சோறு போட வேண்டும். மக்களைப் பசியிலும் பஞ்சத்திலும் வைத்துக் கொண்டு, செய்யப்படும் எந்தவொரு முன்னேற்றமான செயற்பாட்டையும் அபிவிருத்தி என்று கூற முடியாது.
பெறுமதிமிக்க ஆடைகளால், தன்னை அலங்கரிக்க நினைப்பவர், முதலில் அழுக்குப் போகக் குளிக்க வேண்டும். நாற்றத்துடன் புத்தாடை அணிந்து கொள்ளும் எவரையும், அலங்காரமாக இருப்பதாகச் சொல்ல முடியாது.
வாழ்வாதார வழிகள்
அம்பாறை மாவட்டமானது, நெல் உற்பத்திக்கும் கடற்றொழிலுக்கும் பெயர்பெற்ற பிராந்தியமாகும். நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 23 சதவீதத்தை அம்பாறை மாவட்டம் நிறைவுசெய்கிறது.
கடற்றொழிலிலும் அம்பாறை மாவட்டத்துக்கு சிறப்பானதோர் இடமுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து, அம்பாறை மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு, அதிகளவு படகுகள் வருகின்றமை வழமையாகும்.
அம்பாறை மாவட்டத்துக்கு நெல் விவசாயம், கடற்றொழில் ஆகிய இரண்டு துறைகளும்தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுத்தருகின்றவை ஆகும்.
அப்படியென்றால், இந்தத் துறைகளை மேம்படுத்துகின்றவையாகத்தான், அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகள் இருக்க வேண்டுமல்லவா?
எது நமது பிரதான வருமானமாக இருக்கின்றதோ, எதிலிருந்து நாம் பசியாறிக் கொள்கின்றோமோ, அந்தத் துறைகளைத்தானே நாம் வளர்தெடுக்க வேண்டும்?
ஆனால், இதற்கு மாறான செயற்பாடுகளைத்தான், அபிவிருத்தி என்கிற கோதாவில் நமது அரசியல்வாதிகள் அதிகமாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
நெற் செய்கை வீழ்ச்சி
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் பொருட்டு, 25 சதவீதமான காணிகளுக்கு மட்டுமே, விவசாயத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, சிறுபோகங்களில் சாதாரணமாக 01 இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இம்முறை 48ஆயிரத்து 50 ஏக்கர் காணிகளில் மட்டுமே, நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்த்தட்டுப்பாடு இதற்கான காரணமாகும்.
இக்கினியாகல குளத்திலுள்ள நீரை நம்பியே, அம்பாறை மாவட்டத்திலுள்ள நெற்காணிகளில் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் குளத்தில் 07 இலட்சத்து 70ஆயிரம் ஏக்கர் அடி நீர் இருந்தால், மொத்தக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ள முடியும்.
ஆனால், தற்போது 01 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் அடி நீர் மட்டுமே காணப்படுகின்றமையால், 25 சதவீதமான பரப்புள்ள காணிகளில் மட்டுமே விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் நெல்லுக்கான விலை பெருமளவில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் மோசமான அரிசித்தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் சந்தர்ப்பமுள்ளது.
இதேவேளை, நெல் விவசாயத்தின் மூலம், வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் தொழிலாளர்களும் தொழில்களை இழக்கும் அபாயங்களும் உள்ளன.
நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்வதற்காக, அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும், மக்களுக்குத் தரமான அரிசி கிடைக்குமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
அலட்சியம்
சிறுபோக நெற்செய்கைக்கான நீர் இல்லாமைதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாகும். நெற் செய்கைக்கான நீரை, சிறுபோகத்தில் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் பரவலாகச் செய்யப்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், நெற்செய்கை விவசாயத்துறையை மேம்படுத்துவதுதான் சிறப்பான அபிவிருத்தியாகும் என்பதை, அநேகமாக அரசியல்வாதிகள் அலட்சியம் செய்தமையே இந்த நிலைக்குக் காரணமாகும்.
அம்பாறை மாவட்டத்தில், நீரைத் தேக்கி வைக்கக் கூடிய சிறிய குளங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவை நல்ல நிலையில் இப்போது இல்லை. அந்தக் குளங்களைப் புனரமைத்து, அபிவிருத்தி மேற்கொண்டிருந்தால், போதியளவான நீரை அவற்றில் சேமித்து வைத்திருக்க முடியும்.
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு உட்பட்ட விவசாயப் பகுதியில், கரடிக்குளம் என்கிற பெயரில் குளமொன்று உள்ளது. அந்தக் குளத்தை புனரமைக்கும் பொருட்டு, குளத்தைச் சுற்றியிருந்த பல ஏக்கர் காணிகள், விவசாயிகளிடமிருந்து சுவீகரிக்கப்பட்டன. ஆனால், இன்னும் அந்தக் குளம் புனரமைக்கப்படவில்லை.
“கரடிக் குளத்தில் தேங்கியுள்ள நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்தக் குளத்தைச் சுற்றி, அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தால், குளத்தில் நீரை விரயமின்றித் தேக்கி வைத்திருக்க முடியும். ஆனால், இந்தக் குளம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், குளத்தில் நீரைச் சேமிக்க முடியாமலுள்ளது. இது குறித்து அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை” என்று, கரடிக்குளத்தை அண்டிய பகுதியிலுள்ள காணிச் சொந்தக்காரர் ஒருவர், நம்மிடம் தெரிவித்தார்.
யாருக்கும் பிரயோசமில்லாமல், நிர்மாணிக்கப்பட்ட ஏராளமான கட்டடங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கின்றமையை நாம் காணலாம். எதற்கு நிர்மாணித்தார்கள் என்று மக்களுக்குத் தெரியாத கட்டங்கள், அம்பாறை மாவட்டத்தில் அதிகம் உள்ளன.
சில அரசியல்வாதிகள், தமக்கு நெருக்கமானவர்களுக்குக் கொந்தராத்து வேலைகளைக் கொடுத்து, உழைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசாங்கப் பணத்தை, அபிவிருத்தி என்கிற பெயரில் பிரயோசனமின்றிக் கொட்டியிறைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை, நாம் கேட்டிருக்கின்றோம்.
ஆகக்குறைந்தது, இவ்வாறு செலவிடப்பட்ட நிதிகளையாவது, அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறிய குளங்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்குப் பயன்படுத்தியிருந்தால், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை நெற்செய்கை, இந்தளவு அச்சம் தரும் வகையில் வீழ்ச்சி அடைந்திருக்காது.
உதுமாலெப்பையின் காலம்
கிழக்கு மாகாணசபையில் எம்.எஸ். உதுமாலெப்பை, விவசாய அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விவசாயக் காணிகளுக்குப் போக்குவரத்துச் செய்யும் வகையிலான உள்வீதிகள் அமைக்கப்பட்டமை, நீர்ப்பாய்ச்சலுக்கான வாய்க்கால்களைப் புனரமைப்புச் செய்தமை, விவசாயத்துக்கான நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளை அடையாளம் கண்டு, அவற்றை விசாலப்படுத்தியமை என, ஏராளமான அபிவிருத்திகளை விவசாயத்துறையில் உதுமாலெப்பை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், சிறுகுளங்களைப் புனரமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில், தனது முழுமையான கவனத்தை உதுமாலெப்பையும் செலுத்தியிருக்கவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளும் சிறுபோக நெற்செய்கைக்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் வழி மூலங்களைப் பரவலாக்கம் செய்ய வேண்டிய தேவையுள்ளது.
இக்கினியாகல குளத்திலிருந்து வரும் நீரை மட்டும் நம்பியிருக்க முடியாது என்கிற செய்தியை, இம்முறை நாம் மிக அழுத்தமாகப் பெற்றுள்ளோம். ஆகவே, ஆகக்குறைந்தது, அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற சிறிய குளங்களையாவது புனரமைத்து, அந்த மாவட்டத்தின் நெல் விவசாயத்துறையை வீழ்ந்து விடாமல் உறுதிப்படுத்த வேண்டும்.
சிறு குளங்களை அபிவிருத்தி செய்தல்
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜே.வி.பியின் வசம் விவசாய அமைச்சு இருந்தபோது, நாட்டிலுள்ள 1,000 குளங்களைப் புனரமைக்கும் ஒரு திட்டம், மிகவும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
அந்தத் திட்டம், அதே தீவிரத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நெற்செய்கையை மேற்கொள்வதில், இத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
ஒலுவில் துறைமுகமும் கடற்றொழிலும்
இதேபோன்றுதான், அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகமொன்றை நிர்மாணித்தமை காரணமாக, அப்பிரதேசத்தில் கடற்றொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒலுவிலில் துறைமுகமொன்றை அமைக்க முடியுமா என்கிற சாத்தியவள அறிக்கைகள் எவற்றையும் கணக்கில் எடுக்காமல், கட்டப்பட்ட துறைமுகத்தால், அங்குள்ள மக்கள், கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.
ஒலுவில், பாலமுனை பிரதேச மக்களின் கணிசமான காணிகளைச் சுவீகரித்து, நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தால் எந்தவிதமான நன்மைகளும் இதுவரை ஏற்படவில்லை.
ஒலுவில் வர்த்தகத் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம் என்று இரண்டு பகுதிகள் உள்ளன. வர்த்தகத் துறைமுகத்துக்கு, விளையாட்டுக்குக் கூட, இதுவரை ஒரு சரக்குக் கப்பல் வந்து போகவில்லை.
மீன்பிடித்துறைமுகம் ஓரளவு கடற்றொழிலாளர்களுக்குப் பயன்பட்டு வந்தது. கடலுக்குச்சென்று மீன்பிடித்து வரும், சிறிய, பெரிய படகுகள், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து வந்தன.
ஆனால், சில காலமாக துறைமுகத்தின் முகப்புப் பகுதியை, மணல் அடைத்துள்ளமையால், படகுகள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
பிரமதரின் வாக்குறுதி
துறைமுகத்தை அடைத்துள்ள மணலை அகற்றுமாறு, கடற்றொழிலாளர்கள் தமது பகுதி அரசியல்வாதிகளிடம் எத்தனையோ தடவை கோரிக்கை விடுத்தும், இதுவரை நிரந்தரமான தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அழைத்து வந்து, துறைமுகப் பகுதியைக் காண்பித்ததாகவும் மணலை அகற்றித் தருவதாக அப்போது உறுதியளிக்கப்பட்டபோதும், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றும் அங்குள்ள கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்னொருபுறம், “ஒலுவில் துறைமுகத்தைப் பாரியதொரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வேன்” என்று, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கல்முனை, சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வைத்து, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. ஆனால், இதுவரையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரு துரும்பளவு முயற்சியும் இடம்பெறவில்லை.
இழப்பு
ஒலுவிலில் துறைமுகம் அமையப் பெற்றுள்ளதால், அங்குள்ள பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர். அதனால், அவர்களின் ஜீவனோபாயத்துக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளன.
தமது வாழ்க்கையைச் செழிப்பாக்குவதற்குத் துறைமுகம் தேவையில்லை என்று, ஒலுவில் மக்கள் இப்போது பகிரங்கமாகவே கூறுகின்றனர். ஒலுவில் மக்களின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்வதற்காக, அங்குள்ள அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான அபிவிருத்தியாக அமைந்திருக்கும்.
எது அபிவிருத்தி என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதல் முதலில் அவசியமாகும். அரசியலுக்கு அப்பால், நின்று சிந்திக்கும்போதுதான், மக்களுக்கு ஆற்ற வேண்டிய அபிவிருத்திகளை அடையாளம் காண முடியும்.
இந்த இடத்தில், இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அதற்காக 1,000 மில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்துப் பாரிய விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இந்த விவகாரம் தொடர்பாகக் கூறுகையில், மேற்படி 1,000 மில்லியன் ரூபாய் நிதியைக் கொண்டு, வீடில்லாத மக்களுக்கு 2,000 வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் என்பது தற்போதைய நிலையில் கூட, அதிக சொகுசுகள் நிறைந்த இடமாகத்தான் உள்ளது. இந்தநிலையில், அங்கு 1,000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டுமா என்கிற கேள்விகள் முக்கியமானவையாகும்.
எனவே, எது அபிவிருத்தி என்பதை முதலில் இனங்கான வேண்டும். இல்லாவிட்டால், கடனும் பஞ்சமும் போட்டியிட்டுக் கொண்டு வாட்டியெடுக்கும் நிலைவரம், நாட்டில் உருவாகுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.
வெளிப்படையாகச் சொன்னால், அரசியல்வாதிகளில் அதிகமானோர் அபிவிருத்திகளை வெறும் பம்மாத்துகளுக்காகவே செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்தப் பம்மாத்து அபிவிருத்திகளால், நீர் வெட்டப்படுகின்றதொரு தருணத்தில், கழிவறைகளில் வைப்பதற்கு ஒரு வாளித் தண்ணீரைக் கூட, தந்துவிட முடியாது என்பதுதான், முகம் சுழிக்க வைக்கும் உண்மையாகும்.
Average Rating