இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்!!(கட்டுரை)
“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று குற்றம் சாட்டி, “ஆளுநரை திரும்பப் பெறுங்கள்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சட்டமன்றத்தில் ஆளுநர் பற்றி விவாதிக்கக் கூடாது என்று இருக்கும் விதியை இரத்துச் செய்து விட்டு, “ஆளுநர் சென்னா ரெட்டி குறித்து, சட்டமன்றத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது.
அப்போதுகூட ஆளுநராக இருந்த சென்னாரெட்டி, தனியாகப் பத்திரிக்கையாளர் கூட்டத்தை ராஜ்பவனில் நடத்தி விளக்கம் அளித்ததில்லை.
ஆனால் இந்த முறை, ஒரு கல்லூரிப் பேராசிரியை பேசிய அலைபேசி உரையாடலில், ‘கவர்னர்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால், தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் செக்ஸ் ஆசையூட்டும் வார்த்தைகளைப் பேசியது தொடர்பான, தொலைபேசி உரையாடல் விவகாரத்தை, சி.பி.ஐயிடம் விசாரணைக்கு கொடுக்க வேண்டும் என்றும் வலுவான குரல்கள் எழுந்திருக்கின்றன.
உடனே இந்த, அலைபேசி உரையாடல் விவகாரம் பற்றி, ராஜ்பவனில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, அதில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பற்றி மட்டும் பேசாமல், “பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிட மாநில அரசுக்கு உரிமை இல்லை, காவிரி உயர்மட்டக் குழு அமைக்க, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசினேன்” என்பது போன்ற மாநில உரிமைகள் பற்றி, ராஜ்பவனில் பேசியது, தி.மு.க போன்ற கட்சிகளைக் கொந்தளிக்க வைத்தது. அதனால் உடனே “ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்” என்ற கோரிக்கையை, மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து, தி.மு.கவும் முன் வைத்தது.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தைப் பொறுத்தவரை,பொலிஸ் துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதுபற்றி விசாரணையை பொலிஸ் தொடங்கி விட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில், அதன் துணை வேந்தர் ஐவர் குழுவை அமைத்து, இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த இரண்டையும் தாண்டி, ஆளுநர் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது சர்ச்சைக்கு தூபம் போட்டது. மதுரைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்தான் பேராசிரியை நிர்மலாதேவி பணிபுரிகிறார். அதுகுறித்து விசாரணை நடத்தும் அதிகாரம், துணை வேந்தருக்குத்தான் இருக்கிறது. ஆனால், துணைவேந்தருக்கு உள்ள அதிகாரத்தை, ஆளுநர் கையில் எடுத்துக் கொண்டு விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு.
ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் நேர்மையானவர் என்றாலும், இந்த விவகாரத்தில் அவரும் சிக்கிக் கொண்டு, சர்ச்சைக்குள்ளாகிறார். இவ்வளவும் நடைபெற்ற பிறகு, திடீரென்று பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிலை விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்ட பதவியில் இருப்பவருக்கு இது தேவையில்லை. ஆனால், மாநில உரிமைகளில் அவர் தலையிடுவது குறித்து, அந்தப் பேட்டியில் அதிகம் பேசியதே, ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் பெரிதாக்கியிருக்கிறது.
ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரம், உச்சக்கட்ட விவாதத்தில் இருந்தாலும், ஆளும் அ.தி.மு.க அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், ஆளுநரைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதன் அமைச்சர்கள், “விசாரணைக் குழு அமைக்க, ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது” என்று கூறி, அமைதி காக்கின்றார்கள்.
உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்குத் தீர்ப்பு வந்தால், அ.தி.மு.க அரசாங்கத்தின் தலைவிதி, ஆளுநர் கையில் என்பதால், அடக்கி வாசிக்கிறது என்றே அர்த்தமாகிறது.
பேராசிரியை விவகாரத்தில் உள்ள அனல் காற்று, அடங்குவதற்குள் பொலிஸ் தலைவர் இந்த விவகாரத்தை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதுவும் போதாது என்று, உடனே அந்த சி.பி.சி.ஐ.டி அமைப்பின் மேலதிக டி.ஜி.பியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றி விட்டு, அமரேஜ் பூஜாரி என்ற இன்னொரு டி.ஜி.பியை நியமித்துள்ளது அரசாங்கம்.
அமரேஜ் பூஜாரியும் நேர்மையானவர்; ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு, சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதைச் சொன்னதால், பொறுப்பு ஒன்றுமில்லாத பதவிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
மாணவிகளுடன், பேராசிரியை நிர்மலா தேவி நடத்திய உரையாடல் விசாரணையை, ஆளுநர் நியமித்த சந்தானமும் தொடக்கி விட்டார். சி.பி.சி.ஐ.டியும் தொடங்கி விட்டது. ஆனால், “ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்” என்ற முழக்கம் மட்டும் இன்னும் ஓயவில்லை.
இந்தியாவில் ஆளுநர்கள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்த விவகாரத்தில், அப்போது அம்மாநில ஆளுநராக இருந்த ரோமேஷ் பண்டாரியின் செயல்பாடுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
குஜராத்தில், லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் நடைபெற்ற மோதல் உச்சநீதிமன்றம் வரை போய் வாதிடப்பட்டது. கர்நாடாகாவில் பா.ஜ.க முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க அனுமதி கொடுத்த விவகாரத்தில், ஆளுநராக இருந்த பரத்வாஜுக்கும், பா.ஜ.கவுக்கும் நேரடி மோதலே ஏற்பட்டது. மேற்குவங்கத்திலும் மம்தா பானர்ஜி, ஆளுநர் மோதல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் இப்போது ஆளுநர் பற்றிய சர்ச்சை தொடங்கியிருக்கிறது.
ஆனால், மாநிலத்தில் இருக்கும் அரசாங்கத்தால் அந்தச் சர்ச்சை எழவில்லை. எதிர்க்கட்சிகள்தான் சர்ச்சையை எழுப்புகின்றன என்பதே தமிழக ஆளுநர் விவகாரத்தில் உள்ள விநோதமான நிலைப்பாடு.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆளுநர்கள் நியமனம் எப்படியிருக்க வேண்டும்; யாரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக, ‘சர்க்காரியா ஆணைக்குழு’ அளித்த பரிந்துரை மிகவும் முக்கியமானது. ‘ஆளுநர் என்பவர், எந்த மாநிலத்துக்கு நியமிக்கப்படுகிறாரோ, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. அந்த மாநிலத்தின் அரசியலுடன் தொடர்புடையவராக இருக்கக் கூடாது. தீவிர அரசியலில் இருந்தவரை, ஆளுநராக நியமிக்கக் கூடாது’ என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக, ‘தீவிர அரசியலில் இருந்தவர், ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது’ என்ற சர்க்காரியா ஆணைக்குழுவின் பரிந்துரை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி மொத்தமாக மீறப்படுகிறது.
பெரும்பாலும், அரசியலில் தீவிரமாக இருந்தவர்கள் அல்லது தங்கள் கட்சியில் அமைச்சராகப் பதவி கொடுக்க முடியாத நபர்கள் போன்றவர்களைத்தான், ஆளுநராக நியமிக்கிறார்கள்.
அரசியல்வாதிகளை ஆளுநராக நியமிக்கும் இந்தப் போக்குதான், ராஜ்பவன்களை அரசியல் மாளிகைகளாக மாற்றி விடுகின்றன. அதற்கு தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் விதிவிலக்கு அல்ல என்பதை, ராஜ்பவனில் அவரே முன்னின்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு வெளிப்படுத்தியது.
அதேபோல், ஆளுநருக்கான அதிகாரங்கள் அரசியல் சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தாலும், ‘விருப்பு அதிகாரங்கள்’ என்ற ஓர் ஆயுதத்தை, ஆளுநர்கள் பெரும்பாலும் தங்கள் இஷ்டப்படி பயன்படுத்துவதே அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து, துணை வேந்தரை நியமித்தார் ஆளுநர். அதுகூடப் பெரிய சர்ச்சையாகவில்லை.
ஆனால், காவிரி உயர்மட்டக் குழுவை அமைக்காமல் தடுத்துக் கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்ததுதான் பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டது.
ஆகவே, பேராசிரியை அலைபேசி உரையாடல், ஒரு சாட்டாக இருந்தாலும், அதற்கு முன்பே ஆளுநர் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளால், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் குமுறிக் கொண்டிருந்தன. அதுதான் இப்போது, பேராசிரியை விவகாரத்தில் எரிமலையாகி விட்டது.
‘ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும்’ என்ற நிலை உருவாக வேண்டும். இல்லையென்றால், ‘தீவிர அரசியலில் இல்லாதவர்களை, ஆளுநர்களாக நியமிக்க வேண்டும்’ என்ற சர்க்காரியா ஆணைக்குழுவின் பரிந்துரைகள், செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்களுக்கும் தமிழ்நாட்டில், ஆளுநருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் நடக்கும் போராட்டத்துக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
ஆனால், சர்க்காரியா ஆணைக்குழுவுடைய பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த, மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பேற்கும் பாரதீய ஜனதா கட்சி விரும்பவில்லை. இதனால்தான், இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள் அசிங்கப்படுவது மட்டுமல்ல, ராஜ்பவன்கள் அரசியல் கட்சி அலுவலகங்களாக மாறி நிற்கின்றன.
Average Rating