கண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு பலம் தரக்கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கவல்லதும், வயிற்றுபுண்களை ஆற்ற கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், தலைமுடிக்கு பொலிவை தரக்கூடியதுமான பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி. பொன் சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் பொன்னாங்கண்ணி என்ற பெயர் இதற்கு வந்தது. இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என பலவகை உண்டு. நாட்டு பொன்னாங்கண்ணி சிறந்த சுவை உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகை பொன்னாங்கண்ணியும் நன்மை தரக்கூடியதுதான்.
உடலுக்கு பொலிவு தரும் பொன்னாங்கண்ணி குளிர்ச்சி தன்மை உடையது. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. பித்த சமனியாக விளங்கும் பொன்னாங்கண்ணி கீரை கண்களுக்கு நன்மை தருகிறது. பார்வையை கூர்மையாக்குகிறது. தலைமுடி கருமையாக, அடர்த்தியாக வளர உதவுகிறது.
பொன்னாங்கண்ணியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மற்றும் கண்களுக்கு நன்மை தரும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி, நெல்லி வற்றல், சீரகம், மஞ்சள் பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், ஊற வைத்திருக்கும் நெல்லி வற்றல், சிறிது சீரகம், சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் 20 முதல் 30 மில்லி அளவு பொன்னாங்கண்ணி கீரை சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர உடல் குளிர்ச்சி அடையும். பார்வை கூர்மையாகும். வயிற்று கோளாறுகள் குணமாகும். ஈரல் அழற்சி சரியாகும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி வயிற்று புண்களை ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது, நச்சுக்களை வெளியேற்றுகிறது. நார்ச்சத்தை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி கண்களுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். பொன்னாங்கண்ணி கீரையை சுத்தப்படுத்தி தண்டுகள், காம்புகள் இல்லாமல் எடுக்கவும். நீர்விட்டு உப்பில்லாமல் வேக வைக்கவும். இளம் கீரையாக எடுத்துக்கொள்வது நல்லது. கீரையை நன்றாக வேக வைத்தபின், இதனுடன் அரை ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து, 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர பார்வை கூர்மைபெறும். பொன்னாங்கண்ணி தோல்நோய்களை குணப்படுத்துகிறது. தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு போன்றவற்றுக்கு மருந்தாகிறது. தோலில் பொலிவு ஏற்படும். இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்ட பொன்னாங்கண்ணியை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Average Rating