நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக விளங்குவதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை உடையதுமான முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி நிவாரணியாக விளங்குவதுடன் வீக்கத்தை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. முருகங்கை கீரையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு சத்தூட்டம் தரும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, பால், பனங்கற்கண்டு.செய்முறை: காம்பு நீக்கிய துளிர் முருங்கை கீரையை பசையாக்கி அதிலிருந்து சுமார் 30 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதையடுத்து, காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை கொடுத்துவர குழந்தைகளின் எலும்பு, நரம்பு பலமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும். தோலுக்கு பயன்தருவதுடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதை இளம்தாய்மார்கள் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பியாக விளங்குகிறது. பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை
அதிகளவில் கொண்ட முருங்கை கீரையை பயன்படுத்தி நெஞ்சக சளியை அகற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, உப்பு. செய்முறை: 10 முதல் 20 மில்லி அளவுக்கு முருங்கைகீரை சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல், நெஞ்சக சளி பிரச்னைகள் சரியாகும். இது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான மருந்தாக விளங்குகிறது.
முருங்கை கீரையை பயன்படுத்தி கை கால் வீக்கம், வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, மஞ்சள் பொடி, சுக்குப்பொடி, உப்பு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் முருங்கை கீரையை பசையாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, சுக்குப்பொடி, உப்பு சேர்த்து சூடு செய்யவும். இதை இளஞ்சூடாக மேல்பற்றாக போடும்போது வீக்கம், வலி குணமாகும். மூட்டுவலி சரியாகும். அடிபட்ட வீக்கத்தை வற்றச்செய்யும்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரையை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாகிறது. பாலோடு சேர்த்து கொடுக்கும்போது எலும்புகளுக்கு பலம் தருகிறது. உப்போடு சேர்த்து சாறாக கொடுக்கும்போது நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. தினமும் ஒருபிடியாவது சேர்த்துக்கொள்ள பல நோய்களை போக்கும் கீரை என்பதில் சந்தேகம் இல்லை.நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு எடுத்து நசுக்கி நீரில் இட்டு காய்சி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் சரியாகும். வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும்.
Average Rating