ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 33 Second

கூந்தல் அழகானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மட்டும் இருந்தால் போதாது… சுத்தமான கூந்தலாக இருந்தால்தான் சிறந்த கூந்தல். கண்டதும் கவரும் கூந்தலின் வளர்ச்சி, அதில் வரும் பாதிப்பு, பாதுகாப்பு, கூந்தல் பராமரிப்பு குறித்து தொடர்ந்து அழகுக்கலை நிபுணர் ஹேமலதா, கடந்த சில மாதங்களாகத் தோழி வாசகர்களுடன் தொடர்ந்து பேசி வந்தார். இந்த இதழில் பெண்களின் மிகப் பெரும் பிரச்சனையான தலையில் தோன்றக்கூடிய ஒட்டுண்ணி வகையான பேன் குறித்தும், பேன் தொல்லை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் வருவதற்கான காரணம் குறித்தும் விளக்கியுள்ளார்.

பேன் என்பது நம் உடம்பில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு ஒட்டுண்ணி உயிரினம். பேனும் ஈறும் நம் உடம்பில் இருக்கும் சத்தையும், ரத்தத்தையும் மறைமுகமாக நமக்குத் தெரியாமலே உறிஞ்சி எடுக்கிறது. பேன் தலையில் வரக் காரணம்? அதை சரிப்படுத்தும் வழி? வராமல் தடுப்பது போன்ற சென்ற இதழுக்கான கேள்விகளுக்கு இங்கே விளக்கம் தந்துள்ளார். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் பேன் வரும் என்று சொல்ல முடியாது. எல்லோர் தலையிலும் பேன் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உண்டு.

பேன் பரவக் கூடிய ஓர் உயிரினம். அருகில் நெருங்கி அமர்ந்து உட்காருவதன் மூலமும், அருகருகே நெருங்கி தலை வைத்து படுப்பதன் மூலமும் ஒருவர் தலை முடியில் இருந்து மற்றவர் தலைமுடிக்கு பரவுகிறது. முக்கியமாக சிறு குழந்தைகள், பள்ளியிலும், பொதுவெளியிலும் அதிகம் நெருங்கியே உட்கார்ந்து விளையாடவும், படிக்கவும் செய்வார்கள். மேலும் குழுவாகவே செயல்படுவார்கள். அதனால்தான் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் அதிகமாக வருகிறது.

பேனும், பேன் மூலம் வரும் அதன் முட்டை வடிவமான ஈறும் குழந்தைகளுக்கு எப்போதும் தலைமுடிகளுக்குள் நிறைந்து இருக்கும். காரணம் அவர்களுக்கு தங்கள் முடியினை தானாகவே பராமரிக்கத் தெரியாது. அதனால்தான் குழந்தைகளின் தலையில் நீண்ட நாட்கள் பேன் ஒட்டிக்கொண்டே இருக்கும். பேனின் முட்டை முட்டையாகவே 2 வாரங்கள் வரையில் தலை முடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இரண்டு வாரத்திற்குப் பிறகே அது சிறு பேனாக உருமாறும். பேனின் ஆயுட் காலம் 1 மாதம். ஒரு பேன் தலைக்குள் 1 நிமிடத்தில் 9 இன்ச் அளவு அதிவிரைவாக நகரும் தன்மை கொண்டது.

பேனைப் பொறுத்தவரை அதன் வாழ்விடத்தில் அது ராஜாவாக விரைந்து ஓடும். பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு மாதத்தில் ஒரு பெண் பேன் முந்நூறு குஞ்சுகளை உற்பத்தி செய்துவிடக் கூடியது. இவை அதன் உடலில் ஒட்டியிருக்கும் கால்கள் வழியே தலை முடிகளையும், அணிந்திருக்கும் நம் உடைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றன. பேன்களின் உறிஞ்சுக் குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு தோதாக நம் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது.

பேன் வருவதற்கான காரணங்கள்

சின்னக் குழந்தைகளுக்கும், முடியை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கும், அதிகமாக முடி வளர்ச்சி உள்ளவர்களுக்கும் தலையில் நிறைய பேன் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தலைமுடி சுத்தமாக இல்லாமல், ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் பேனும், ஈறும் தலைமுடியில் கட்டாயம் பரவும். முடிகளில் அழுக்கு சேரச் சேர பேன் வசிப்பதற்கு ஏற்ற இடமாக நம் தலைமுடி அவைகளுக்கு வாழும் இடமாக வசதியாக அமைந்துவிடுகிறது.

ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை நாம் எடுத்துப் பயன்படுத்தினால் அதன் வழியாக பேன் அல்லது ஈறு ஒட்டிக்கொண்டு நம் முடிகளுக்குள் நுழைந்து நம் தலைமுடிகளிலும் பரவத் துவங்கும். அவை நம் முடிக்குள் இருப்பது நம் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு அவை விரைவாக இனப் பெருக்கம் செய்து பரவுகின்றன.

அருகருகே தலை வைத்துப் படுத்துக் கொள்ளல், தலைகளை ஒட்டி வைத்து அருகருகே நெருங்கி அமருதல், ஒருவரது ஹெட்போனை மற்றொருவர் பயன்படுத்துதல், தலைப்பாகை, தொப்பி, ஒருவர் உடையினை மற்றொருவர் பயன்படுத்துதல், ஹேர் பேன்ட், ஹேர் க்ளிப், ஹெல்மெட் போன்றவை வழியாகவும் பேன்கள் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

பேன் தொல்லை அதிக மானால் ஸ்கால்ப்பில் உள்ள தோல் போன்ற செதில்கள் உரியும். அதன் வழியாக பொடுகு, புண், அரிப்பு, கண் சிவந்தல் போன்ற ஒவ்வாமை நமக்கு ஏற்படும். பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தையும், தலையை சொறியும்போது தலையில் இருந்து கசியும் நீரையும் உறிஞ்சி உணவாக எடுத்தே வாழுகின்றது.

பேனை நீக்கும் வழிமுறைகள்:

நமக்கோ நம் குழந்தை களுக்கோ வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால், மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோலத்தான், உடலுக்கு வெளியில், தலைகளில் ஒரு சில ஒட்டுண்ணி வகையான பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு நேர்கிறபோது அதற்கான மருத்துவத்தை அணுகி சரி செய்தல் வேண்டும். இரண்டு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து நாம் விடுபடலாம். ஒன்று மருத்துவரை அணுகுவது. மற்றொன்று வீட்டில் நாமாகவே இயற்கை முறையில் மருத்துவம் செய்து சரிசெய்வது.

குழந்தைகளுக்கு அதிகமாக பேன் இருக்கிறது என்றால், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Permethrin lotion எனும் ஆயின்மென்டையும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் Phrethrins lotion எனும் மருந்தை ஆங்கில மருந்துக்கடைகளில் வாங்கி ஈரமுடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி சுத்தம் செய்தல் வேண்டும். இந்த வகை மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்றே உபயோகிக்க வேண்டும். ஆலிவ் ஆயில் முடியில் இறுகப் பிடித்து ஒட்டியிருக்கும் பேனின் முட்டைகளான ஈறுகளின் பிடிமானத்தை தளர்த்தும் தன்மை வாய்ந்தவை.

ஆலிவ் ஆயிலை தலைமுடிகளில் படுமாறு நன்றாகத் தடவி, பாத் கேப்பை தலையில் காற்று புகா வண்ணம் நன்றாகக் கவர் செய்துவிட்டால், பேனின் முட்டைகளான ஈறுகள் முடிகளில் இருந்து தளர்ந்து வெளி வந்துவிடும். வெங்காயச் சாறு, எலுமிச்சைபழச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து, ஸ்கால்ப்பில் படுமாறு தடவி, பாத் கேப் கொண்டு முடியினை கவர் செய்துவிட்டால், அதன் வாடை ஒத்துக்கொள்ளாமல் தலைமுடியினை அலசும்போது தானாகவே பேன்கள் வெளியேறும்.

துளசி இலை பொடி, மருதாணி பூ பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, சீத்தா பழக்கொட்டை பொடியுடன் தேங்காய் எண்ணை,வெள்ளை மிளகுடன் பால்,
காட்டு சீரகத்துடன் பால், வேப்பங் கொட்டைப் பொடி – இவைகளில் உங்களுக்கு எளிதாக எது கிடைக்கிறதோ அதை தலையில் தடவி, பாத் கேப்பினை காற்று புகாவண்ணம் முடிகளை கவர் செய்து வைத்துவிட்டு, ஒரு சில மணி நேரத்தில் முடிகளை அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஹேர் டிரையரைப் பயன்படுத்தும்போதும் அதன் வெப்பத்தினாலும் பேன்கள் குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரம் ஹேர் டிரையரைப் பயன்படுத்தும் போது ஸ்கால்ப்பில் படாத வண்ணம், முடிகளில் மட்டும் படுமாறு பயன்படுத்த வேண்டும். லிஸ்டரின் மவுத் வாஷ் தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஸிடார் வினிகர் போட்டு கூந்தலை அலசினாலும் பேன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேற் குறிப்பிட்டவைகளை பேன் தொல்லை அதிகம் உள்ளவர்கள் அடிக்கடியும், குறைவாக உள்ளவர்கள் மாதமிருமுறையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அடிக்கடி தலைமுடியை பேன் சீப்பு கொண்டு சீவுதல் வேண்டும். பேன் தொல்லையால் பாதிக்கப்படுவோர் இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை அடிக்கடி செய்து கொண்டே இருந்தால் பேன் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

இனி வரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…

* நம் சருமத்தில் வரும் அடிப்படை பிரச்சனைகள்?
* தோல் ஏன் சுருங்குகிறது?
* தோலில் ஏற்படும் வறண்ட தன்மை மற்றும் எண்ணெய் தன்மைக்கான காரணம்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேருவளை கடலில் மூழ்கி அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு!!
Next post கவர்ச்சியான உடற்தோற்றம் பெருமை : பெண்களுக்கு ஹீரோயின் அட்வைஸ்!! (சினிமா செய்தி)