ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
நமது உடலை மூடியிருக்கும் தோலில் தோன்றும் ஒவ்வாமையை ஸ்கின் அலர்ஜி என அழைக்கிறோம். மனிதனுக்கு பலவிதங்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதுதானே சிறந்தது? நமது உடல் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும்போது இயற்கைக்கு மாறான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும்? ஒவ்வாமை என்பது இதனால் மட்டும்தான் வருகிறது என்று குறிப்பிட்ட ஒன்றை மட்டும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தூய்மை சீர்கேட்டினால் ஏற்படும் மாசு மூலமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். விளைவு, அவர்களுக்கு தொடர்ந்து விடாமல் வரும் தும்மல், மூச்சுத் திணறல், இருமல், மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் வழிதல் போன்றவை தோன்றும்.
நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சிலவகையான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் தோலில் ஒவ்வாமை ஏற்படும். உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமையினை சட்டென தோல் காட்டிக் கொடுத்து விடும். சிலருக்கு தலையில் அதிகமாக இருக்கும் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு, கண் எரிச்சல், நமைச்சல் போன்றவை தோன்றக் கூடும். குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை மாற்றி மாற்றி பயன்படுத்துவதினால் கூட சிலருக்கு அலர்ஜி உண்டாகும். உடைகளில் அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் சிலவகை சோப்புக்கள், சோப் பவுடர்கள், பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சோப்புகள், திரவங்கள், நமது குளியலறை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தயாரிப்பு கள் கூட சிலருக்கு கைகளில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. உடல் உபாதைகளுக்காக மருந்து மாத்திரைகளை தொடர்ந்து அதிகமாக எடுப்பவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மருந்துகள் மூலமாகவும், ஒவ்வாமை தோன்றும். தோலில் தோன்றும் தேமலும் ஒருவிதமான ஒவ்வாமைதான்.
ஒவ்வாமை என்பதே உடல் தன் உள் உறுப்புக்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒருவித நடவடிக்கைதான். தூசி மூக்கில் நுழையும்போது தொடர்ந்து ஏற்படும் தும்மல், இருமல், கண்களில் இருந்து நீர் வழிதல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு இவையெல்லாம் உடலில் உள்ள கழிவை வெளியேற்றும் நிகழ்வு. நமது உடல் அவற்றை வெளியேற்ற வழி தராமல், நாம் மருந்து மாத்திரைகளை உண்டு அவற்றைத் தடுப்பதன் மூலம் கழிவுகள் வெளியேறுவதற்கான வழிகளை அடைத்து வைக்கிறோம். இதனால் உடலில் உள்ள கழிவு வெளியேற்றப்படாமல் அப்படியே உடலுக்குள்ளேயே தங்கிவிடுகிறது. விளைவு தோலில் அலர்ஜிக்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி நிறைய இருந்தால் அதன் கழிவுகள் உடலுக்குள் அதிகமாக இருக்கும். அந்தக் கழிவுகளை வெளியேற்றும் வேலையை உடல் தானாகவே செய்யத் துவங்கும். உடல் தானாகச் செய்யும் வேலையை செய்ய விடாமல் அவற்றைத் தடுப்பதற்கான வேலைகளை புறத்தே நாம் செய்யும்போது எதிர்வினை ஏற்பட்டு தோல் அலர்ஜி அடையத் துவங்குகிறது.
இதில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் அழகை வெளிப்படுத்த தீவிரம் காட்டும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அவர்கள் அணியும் அணிகலன்கள் மூலமாகவும் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த இதழில் பெண்கள் அணியும் அனைத்துவகையான ஆபரணங்களால் வரும் அலர்ஜி குறித்து விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். ஆபரணங்களால் வரும் ஒவ்வாமையினை குறிக்கும் வார்த்தையே “ஜுவல் அலர்ஜி”.
தங்கம், வெள்ளி, வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மூலமாகச் சிலருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்படும். குழந்தைகளுக்கு காது குத்தியதுமே, பெண் குழந்தையாக இருந்தால், மெட்டல் டிசைன்களில் அழகழகாக வரும் காதணிகளை எல்லாம் மாற்றி மாற்றி வாங்கிப் போட்டு குழந்தையை அழகு பார்க்கத் துவங்குவோம். இது குழந்தைகளுக்கு பல நேரங்களில் தோலில் ஒவ்வாமையினை ஏற்படுத்தி விடும். விளைவு புதிதாகக் குத்தப்பட்ட காதின் துளைகள் புண்ணாகி, சீழ் பிடிக்கத் துவங்கும். இதற்கு ஒரே வழி காதின் துளைகளில் வேப்பங் குச்சியினை சிறிதாக ஒடித்து சொருகி வைத்துவிட்டு அந்த இடத்தில் நல்லெண்ணெய் தடவவேண்டும். விளக்கெண்ணையை சிறிதளவு குடிக்கக் கொடுக்க வேண்டும். இது குழந்தைக்கு காதில் ஏற்பட்ட ஒவ்வாமையை விரைவில் ஆற்றிவிடும்.
பெண்கள் கழுத்தில் அணியும் செயின், கைகளில் அணியும் அழகிய வளையல், காதுகளிலும், காது மடல்களிலும் அணியும் காதணிகள், மூக்குத்தி, கையில் போடும் விதவிதமான மோதிரங்கள், இடுப்பில் அணியும் ஒட்டியாணம், அங்கி, கணுக்கால்களில் போடும் கால் கொலுசு, மெட்டி, ஆண்கள் அணியும் அர்ணாக் கொடி, பெண்கள் அணியும் ஜாக்கெட்டுகள் மற்றும் உள்ளாடைகளில் உள்ள இணைப்புக் கொக்கி, வளையம் இவற்றையெல்லாம் அழுத்தமாகவும், இறுக்கமாகவும் உடலோடு ஒட்டி அணியும்போது அவை தோலில் பட்டு ஒவ்வாமையை உடனே உண்டு பண்ணிவிடுகிறது. சற்று தளர்வாக இந்த அணிகலன்களை அணியும்போது, அவர்களுக்கு தோலில் ஒவ்வாமை இருப்பின், 12 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் அதன் விளைவு தோல்களில் தெரியத் துவங்கும். இதுவே மெட்டல் அலர்ஜி என அழைக்கப்படுகிறது.
இரும்பு, காப்பர் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள் தோலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய உலோகங்கள். தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள் எப்போதாவது உண்டு பண்ணும். மேலும் நாம் பயன்படுத்தும் கைபேசியைச் சுற்றியுள்ள உலோகம், கண்களில் அணியும் கண்ணாடியைச் சுற்றியுள்ள மெட்டல் ஃபிரேம், அன்றாட பண நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் காயின்களை அதிக நேரம் கையிலேயே வைத்திருப்பது, கீ செயின்களை எந்நேரமும் கைகளில் வைத்திருப்பது, ஆண்களின் கால் சட்டை மற்றும் பெண்களின் மேலாடைகளில் உள்ள ஜிப், சிலவகை காலணிகளில் உள்ள உலோகங்கள் போன்றவைகளாலும் தோலிற்கு ஒவ்வாமை உண்டாகும்.
நமது தோல்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால் முதலில் தோலில் சற்றே நமைச்சல் அல்லது தொடர்ந்து அரிப்பு போன்றவை ஏற்படும்.
தோல் அரிக்க அரிக்க, நாம் நம்மை அறியாமல் தொடர்ந்து சொரியத் துவங்குவோம். அப்போது தோல் இயல்பாகவே சிவப்புத் தன்மையோடு தடிப்புத் தன்மையையும் அடைகிறது. தோல் விரைவில் வறண்டு, வரிவரியாகப் பிளவு ஏற்பட்டு தொடர்ந்து உரியத் துவங்கும். அதை அப்படியே விட்டுவிட்டால் சிலருக்கு சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டு, அந்த இடம் சீழ் பிடிக்கத் துவங்கும். எனவே ஒவ்வாமை ஏற்படுபவர்கள், எதை பயன்படுத்தினால் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ, அந்த உலோகத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுதல் நல்லது. உங்கள் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு விட்டால் உடனடியாக தோல் மருத்துவர்களை அணுகுவது நல்லது.
விதவிதமான மாடல்களில் கடைகளில் வரும் அணிகலன்களை எனக்கு அணிய விருப்பம். ஆனால் எனக்கு தோல் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை இருக்கிறது? நான் என்னதான் செய்வது எனப் புலம்புபவர்களா நீங்கள்? அதற்கும் இருக்கிறது தீர்வு. ஆர்டிஃபிஷியல் ஜுவல்லரி, மாடர்ன் ஜுவல்லரி, மேட்சிங் ஜுவல்லரி போன்றவைகளை அணிய விரும்புபவர்கள் 14, 18, 22 கேரட் எல்லோ கோல்ட் அணிகலன்களை வாங்கி பயன்படுத்தலாம்.
நீங்கள் அணியும் அணிகலன்களில் தோலில் படும் பகுதிகள் முழுவதையும் டிரான்ஸ்பரன்டாக உள்ள நெயில்பாலிஷ் கொண்டு ஒரு மேல் பூச்சு ஒன்றைப் பூசி, அது காய்ந்தபின் அணியப்போகும் உலோகம் உங்கள் தோலில் படாதவண்ணம் அணியலாம். டிரான்ஸ்பரன்ட் நெயில் பாலிஷ் என்பது வண்ணமற்று தண்ணீரை போன்ற தன்மையில் இருக்கும். அதை உலோகத்தில் தடவும்போது அதன் வண்ணம் வெளிப்படாது. நீங்கள் தடவி இருப்பதும் நகையில் தெரியாது. உலோகத்தின் தன்மை தோலில் படாமல் நமது தோலுக்கு ஒரு தற்காலிக பாதுகாப்பு கவசமாகத் தீர்வைத் தரும்.தவிர தோல் அலர்ஜி உள்ளவர்கள், அதிகமாக பிளாஸ்டிக்கினால் தயாரான அணிகலன்கள் அல்லது பட்டு நூல்கள், வண்ணக் காகிதங்களால் தயாரான அணிகலன்களை வாங்கிப் பயன்படுத்தலாம். உள்ளாடைகளில் கூட பிளாஸ்டிக் கொக்கிகள், வளையங்கள் கொண்டு தயாரான உடைகளை பயன்படுத்தலாம்.
தங்க ஆபரணங்களும் ஒவ்வாமையைத் தருவதாக நினைக்கும் நவீன யுகப் பெண்கள் டாட்டூஸ்களை அணிகலன்களைப்போல தேவையான வண்ணங்களில் தேவையான இடங்களில் போட்டுக் கொள்ளலாம். அதில் எக்கச்சக்கமான வடிவங்கள், வண்ணங்கள் உண்டு. ஆபரணங்களினால் உண்டாகும் ஒவ்வாமை என்பது ஆண்களுக்கு 7 முதல் 15 சதவிகிதமும், பெண்களுக்கு 26 முதல் 36 சதவிகிதமும் வருகிறது. பிளாஸ்டிக், டைட்டானியம், சில்வர், காப்பர், பிளாட்டினம் போன்ற இந்த வகை உலோகங்களால் தயாராகும் அணிகலன்களை அணியும்போது தோலில் ஒவ்வாமை தோன்றாது. இதில் தயாராகும் ஆபரணங்களை தாராளமாக இரு பாலருமே பயன்படுத்தலாம். வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் உடலுக்கு குளிர்ச்சியினையும், தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் மனித உடலில் உள்ள ஹார்மோன்களையும் சமப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு சிறியதாகவும், வளர்ந்தவர்களுக்கு கொஞ்சம் பெரிய அளவிலும், வயதானவர்களுக்கு மிகப் பெரியதாகவும் காதணிகளை அணிவதன் மூலம், காது மடல்களைச் சுற்றி நமது மூளைக்குச் செல்லும் நரம்பு, மூளையினை தொடர்புபடுத்தி, நமது உடம்பை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும். இதனால்தான் வயது ஏற ஏற உடல் தளர்ச்சி அடையாமலும், சோர்வடையாமலும் இருக்கவே மிகப் பெரிய தோடுகளை பெண்கள் அணிகிறார்கள். நமது முன்னோர்களும், நம் வீடுகளில் உள்ள வயதான பாட்டிகளும், காதுகளை வளர்த்து தண்டட்டி, பாம்படம் போன்ற கனமான அணிகலன்களை அணிந்தார்கள். காது மடலைச் சுற்றியும் விதவிதமான அணிகலன்களை அணிந்து மகிழ்ந்தனர்.
இனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…
முகப்பரு, முகப்பரு மூலம் முகத்தில் ஏற்படும் தழும்பு, மங்கு, கரும்புள்ளி… இதெல்லாம் எதனால் தோலில் வருகிறது?
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு விடுபடுவது?
Average Rating