சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன் – அதுல்யா!!(மகளிர் பக்கம்)
‘காதல் கண்கட்டுதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தமிழ் பெண் அதுல்யா. ‘ஏமாலி’ படத்தில் தன்னுடைய மிடுக்கான நடிப்பில் ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்…
உங்களைப் பற்றி…
நான் பிறந்தது படித்தது எல்லாம் கோயம்புத்தூர். அப்பா கோயம்புத்தூரில் பிஸ்னஸ் பண்றாங்க. ஒரு தம்பி. நான் யுஜி முடிச்சிட்டு பிஜி படிக்க சென்னை வந்தேன். டான்ஸ்தான் என்னுடைய பொழுதுபோக்கு.
சினிமாவுக்குள் எப்படி…
சென்னையில் பிஜி படிக்கும்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ‘காதல் கண் கட்டுதே’ படம் எடுத்தார்கள். அதில் நடிக்க சொல்லி கேட்டார்கள். நடித்தேன். சினிமா துறைக்கு வருவேன் என்றெல்லாம் அப்போது தெரியாது. நான் படிச்சி முடிச்சிட்டு ஐடி கம்பெனியில் ஒர்க் பண்ணி இருப்பேன். அந்தப் படத்தின் டைரக்டர் என்னுடைய ஃபேமலி ஃப்ரெண்ட். அதனால எங்க வீட்லயும் நடிக்க அனுமதிச்சாங்க.
முதல் பட அனுபவம்…
‘காதல் கண் கட்டுதே’ படம் பண்ணும்போது வாரம் ஒரு முறைதான் ஷூட்டிங் போவேன். அந்தப் படத்துக்கு எக்கியூப்மென்ட் எல்லாம் வாடகைக்கு எடுத்துதான் படத்தை முடிச்சோம். நான் ஃபைனல் இயர் படிக்கும் போது படம் ரிலீஸ் ஆயிடிச்சி. ‘காதல் கண்கட்டுதே’ படத்தோட டீசர் வரும்போது ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் நடித்தேன்.
‘ஏமாலி’ பட அனுபவம் எப்படி இருந்தது?
‘ஏமாலி’ படத்திற்கு துரை சார் என்னை அழைத்து பேசினார். என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருந்தது. சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் மாத்திக்க சொன்னாரு. ‘காதல் கண்கட்டுதே’ படம் முடிஞ்சதுமே பெரிய படம் கிடைச்சது எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது.ஆனால் டைரக்டர் துரை சார், சமுத்திரக்கனி சார் எல்லாரும் அவங்க வீட்டு பொண்ணு மாதிரி பார்த்து கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. சமுத்திரக்கனி சார் ஒவ்வொரு சீன் முடிஞ்சதும் என்னை பாராட்டுவார்.
‘ஏமாலி’ படத்தில் ஏன் அவ்வளவு கவர்ச்சியாக நடித்திருந்தீர்கள்?
ஆபாசமான வசனங்கள் வேறு இருந்தனவே?கவர்ச்சியா நடிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு கிடையாது. ‘ஏமாலி’ கதையில் என்னோட கேரக்டர், முழுக்க முழுக்க மாடர்னான பொண்ணா இருக்கனும். அதற்காக சிகரெட் அடிப்பது போலவும், மாடர்னாகவும் நடித்தேன். அது 100 சதவீதம் கவர்ச்சி கிடையாது. என்னுடைய அடுத்த படங்களில் கூட கவர்ச்சியாக நடிக்கிற ஐடியா எனக்கு கிடையாது. இந்தப் படத்திலே எனக்கு காஸ்ட்டியூம் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. தம் அடிக்கிறவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது. யாரு அடிச்சாலும் அது தப்புதான்.
அதுல எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. இந்தப் படத்தில் இந்த சீன் வேணுமா, தம் அடிக்குற சீன் மட்டும் எடுத்துடலாமேன்னு துரை சார் கிட்ட கேட்டேன். எடுத்துட்டா அந்தப் பெண்ணோட கேரக்டரே போயிடும். இது வித்தியாசமா இருக்கும்னு சொன்னார். நடிப்பு என்றாலும் அந்த சீன் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. தற்போது தமிழ் சினிமாவில் பெண்கள் தம் அடிக்கும் காட்சிகள் சாதாரணமாக மாறிவிட்டது. சினிமாவில் மட்டும் இல்லை பொது வெளியில் பெண்கள் சாதா ரணமாக தம் அடிக்கிறார்கள் என்பதை சொல்வதற்காக இந்த காட்சிகள் வைக்கப் பட்டன,
எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும்?
எனக்கு காதல் திரைப்படங்களில், குடும்பப் பெண்ணாக நடிப்பது சுலபமாக இருக்கும். இன்னும் சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்தால் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள அது ஏதுவாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர்?
நிறைய நடிகர்களை எனக்குப் பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா மேடமோட தைரியம் பிடிக்கும். நஸ்ரியாவோட கியூட்னெஸ் பிடிக்கும். இப்படி நிறைய பேர் இருக்காங்க.
இப்போ என்ன பண்றீங்க?
டைரக்டர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படம் பண்றேன். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நானே என்னை புதிதாக பார்ப்பது போல் இருக்கிறது. ‘நாடோடிகள் 2’ நடிச்சிக்கிட்டு இருக்கேன். இந்த இரண்டு டீம் கூட ஒர்க் பண்ற அனுபவம் எனக்கு புதுசா இருக்கு.
தமிழ் சினிமாவில் புது முகங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதுமுகங்களுக்கு எப்போது வரவேற்பு இருக்கிறது. முன்பெல்லாம் பெண்கள் சினிமா துறைக்கு வருவதற்கு பயந்தார்கள். இப்போது பெண்கள் இந்தத் துறையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திறமையானவர்களை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். நடிகர்களைப் பொறுத்தவரை வயது அவர்களுக்கு பெரிய விஷயம் கிடையாது. ஆனால் நடிகைகளுக்கு வயது அதிகமானால் அவர்களால் தொடர்ந்து நடிக்க முடிவதில்லை. திருமணம் ஆன பிறகு, குழந்தை பிறந்துவிட்டால் உடல் எடை கூடுகிறது. இதனால் நடிகைகளுக்கு வாய்ப்பும் குறைந்துவிடுகிறது.
Average Rating