அடுத்தவங்க வாழ்க்கை ஈஸின்னு நினைக்காதீங்க!(மருத்துவம்)
இன்றைய கணிப்பொறி யுகத்தில் மைக்ரோசாஃப்ட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. கணிப்பொறி உலகில் சத்ய நாதெள்ளாவுக்கும் அறிமுகம் தேவையில்லை.உலகக் கோடீஸ்வரர் என்ற பெருமையோடு உலகை ஆண்டுகொண்டிருக்கும் பில்கேட்ஸின் தளபதிகளில் முக்கியமானவர். அதிக சம்பளம் வாங்கும் அமெரிக்க வாழ் இந்திய சி.இ.ஓ பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.
இந்திய ரூபாயின் மதிப்பில் அவரின் ஒரு மாத சம்பளமே கிட்டத்தட்ட 10 கோடியைத் தொடுகிறது.பில்கேட்ஸின் நட்பு, கோடிகளில் மாத சம்பளம், அதிகாரம் மிக்க சி.இ.ஓ பதவி… கேட்டாலே பொறாமை பொங்கும்தானே… ஆனால், அவருடைய ஒரு நாள் அத்தனை சாதாரணமானது இல்லை.
தொழில்ரீதியாக சிகரம் தொடுகிற, வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கிற பலரும் தனிப்பட்ட வாழ்வில் தடுமாறுகிறவர்கள்தான். சத்ய நாதெள்ளா பிஸினஸ் உலகின் பெரும்புள்ளியாக இருந்தாலும் அவரது இரண்டு குழந்தைகளுமே மருத்துவத்தின் தொடர் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் இருப்பவர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
50 வயதில் இருக்கும் இந்த பெருமைமிகு இந்தியன் பிறந்தது ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவரது தந்தை பிரதமரின் சிறப்பு செயலாளராகவும், திட்டக்கமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றியவர். தன் பள்ளிப்படிப்பை ஹைதராபாத்தில் முடித்த சத்ய நாதெள்ளா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்.
அதன் பின்னர் அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டமேற்படிப்பும், சிக்காகோ பல்கலைக்கழகத்தின் வணிகமேலாண்மைப் பள்ளியில் முதுகலைப் பட்டமும் முடித்தார்.
1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அதே வருடம் தன்னுடைய பள்ளித்தோழியான அனுபமாவை திருமணம் செய்துகொண்டார். வாஷிங்டனில் அனுபமாவுடனான இல்லற வாழ்க்கையை இனிதாகத் தொடங்கினார். இந்தியர்கள் மீதும், இந்தியா மீதும் பில்கேட்ஸுக்குப் பெரும் மரியாதை வரும் அளவுக்கு சத்ய நாதெள்ளாவின் பங்களிப்புகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்தது.
மைக்ரோஸாஃப்ட் நிறுவன படைப்புகளிலேயே கிரீடமாக கருதப்படும் Bing-ன் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றவர். கம்ப்யூட்டர் உலகில் Data base, Windows server, Developer tools போன்ற பிரபலமான தொழில்நுட்பங்களை Azure வடிவில் Cloud software-க்கு கொண்டு வருவதில் நாதெள்ளா முக்கிய பங்கு வகித்தார் என்பதை கணிப்பொறி உலகம் நன்கு அறியும்.
மிக வேகமாக வளர்ச்சியடைந்த மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 வெர்ஷனை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிடுவதற்கும் முக்கிய காரணகர்த்தா இவரே. இவையெல்லாம்தான் 2014-ம் ஆண்டில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.இப்படி உயரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த இவரது தொழில் வாழ்க்கையின் கிராஃப் மட்டுமே உலகுக்குத் தெரிந்தவை. நடுவே 1996-ம் ஆண்டில் இவரது வாழ்வை புரட்டிப் போட்ட சம்பவம் நாம் அறியாதது.
‘‘1996-ம் ஆண்டில் அது நடந்தது. அனு கர்ப்பம் தரித்திருந்தாள். முதல் குழந்தைக்காக ஆசையாகக் காத்திருந்தோம். எதிர்பாராதவிதமாக கடுமையான பெருமூளைவாதத்துடன் கண் பார்வையின்றி ஆண் குழந்தை எங்களுக்குப் பிறந்தான். என் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட சம்பவம் அது. அடுத்ததாக ஒரு பெண் குழந்தை. அவளுக்குக் கற்றல் குறைபாடு.
ஆனால், அந்த 2 குழந்தைகளும்தான் எங்கள் வாழ்வை அர்த்தப்படுத்தினார்கள். அடுத்தடுத்து எங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதமாக்கினார்கள். மாற்றுத் திறனாளியான இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதும், வளர்ப்பதும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது மற்றவர்கள் என் குழந்தைகளைப் பார்க்கும் பார்வை முதலில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் இந்த உலகத்தை நான் மற்றவர்களின் கண் வழியே பார்க்கும் பக்குவத்தை அது கொடுத்தது. என்னுடைய தொழில்நுட்பங்கள் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கருணைப்பார்வையை உருவாக்கியது. உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளின் மீதான அக்கறையாக அது மாறியது’’ என்று ஒரு பேட்டியில் நாதெள்ளா கூறியுள்ளார்.
நாதெள்ளாவின் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய மாற்றத்தால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்
களுக்கான அமைப்பின் நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்தபோது பல அதிரடி மாற்றங்களை உண்டாக்கினார். எப்போதும் மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவராகவும் செயலாற்றி இருக்கிறார்.
தன் குழந்தைகளின் வாயிலாகவே இந்த உலகைப் பார்த்த நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட்டின் பொருட்கள் உலகில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கத் தொடங்கினார்.தன் நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாகவும், அவர்களை லட்சியத்தை நோக்கி உந்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதில் பெரும் கவனம் செலுத்தினார்.
அதேநேரத்தில், அந்த ஊழியர்களின் திறமை வாடிக்கையாளர்களிடத்தில் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் பார்வையிழந்தவர்களும் இந்த உலகத்தைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்ட Al Smart Glass என்ற மென்பொருளை அறிமுகம் செய்தார். எதிரில் இருப்பவரின் முகபாவங்கள், அசைவுகளை இந்த இந்த மென்பொருள் மூலம் உணர முடியும் என்பது இதன் சிறப்பு.
Seeing AI என்றழைக்கப்படும் இந்த மென்பொருள் விரைவில் IOS-ல் வந்துவிடும் என்றும் அறிவித்திருக்கிறார். இதேபோல் Microsoft One Note என்னும் புரோக்ராம் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் எளிதாக எழுத்துக்களை கூட்டிப் படிக்கும் வகையிலும், HoloLens முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு உதவும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் Eye tracking தொழில்நுட்பத்தின் உதவியால் ALS (Amyotrophic lateral sclerosis) என்னும் தசை நரம்பணுக்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பார்வை இழந்தவர்கள், உலகை காணவும், கணினியில் விண்டோஸ் புரோகிராமை இயக்கவும் முடியும் என்பதும் பெருமையுடன் கூறத்தக்கது. பார்க்கவும், பேசவும் முடியாத ஒருவர், தன் எண்ணங்களை வாய்மொழியால் வெளிப்படுத்த முடியாதபோது, கம்ப்யூட்டரில் வலைதளத்தைத் தானே திறந்து விண்டோஸ் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள உதவிய இந்த தொழில்நுட்பம் உலக பார்வையற்றவர்
களிடம் எத்தகைய ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இந்த தொழில்நுட்பங்களின் வரவுக்குப் பின், இதற்குமுன் இருந்ததைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் இன்று உச்சத்தை அடைந்தது. வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட சத்யநாதெள்ளாவின் தலைமையே இதற்குக் காரணம்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் திறமையான தலைவர் கிடைக்கலாம். ஆனால், நாதெள்ளாவைப் போன்ற மனிதத்தன்மை மிகுந்த நல்ல மனிதர் கிடைப்பது மிகவும் அரிது. தனக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு அதையே தன் வெற்றிப்பாதைக்கு பயன்படுத்திக் கொண்ட அவரின் படைப்புகள் வரும் காலங்களிலும் வாடிக்கையாளர்களின் தேவையை கட்டாயம் பூர்த்தி செய்யும். அதே நேரத்தில் மருத்துவ உலகிலும் பல சாதனைகளைப் படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நிறைவாக சத்ய நாதெள்ளா சொல்லும் இந்த மந்திர வார்த்தைகள் மறக்கக் கூடாதவை.‘‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறந்துவிட்டால், வாழ்க்கையே முடிந்துவிட்டது போல பலரும் கவலைப்படுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நம்முடைய வாழ்க்கையில் அதிக பொறுப்பையும், கடமையையும் அந்த குழந்தைகள்தான் நமக்குக் கொண்டு வருகிறார்கள்; கற்றுக் கொடுக்கிறார்கள்.
அவர்களுக்கு அனுதாபமோ, உதவிகளோ தேவை இல்லை. தங்களுக்கான கல்வி, மருத்துவம் போன்றவற்றைப் பெறக் கூடிய உரிமை பெற்றவர்கள் அவர்கள். நாம் அதை நிறைவேற்றுகிறவர்களாக இருந்தாலே போதும்.அதேபோல் ஒவ்வொரு மனிதருமே தன்னுடைய சொந்த வாழ்வில் தனக்கான பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதனால், மற்றவர்களின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ‘அவங்களுக்கென்ன’ என்று நினைக்கும் மனோபாவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாறிவிட்டால் விரோத மனப்பான்மை குறையும். எதிரியையும் நேசிக்க ஆரம்பிப்பீர்கள்
Average Rating