ஜிம்முக்குப் போகலாமா?! (மருத்துவம்)
ஜிம் என்பது பணக்காரர்களும், மாடல்களும், நடிகர்களும் மட்டுமே செல்ல வேண்டிய இடம் என்ற நம்பிக்கை இப்போது மாறிவிட்டது. ஃபிட்னஸ் பற்றிய அக்கறை மக்களிடம் அதிகரித்து வரும் சூழலால் எல்லா தரப்பினரும், எல்லா வயதினரும் ஜிம்முக்குச் செல்வதை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஜிம்முக்குப் போவது அவசியமா? என்னென்ன பயிற்சிகள் அங்கு கற்றுக் கொடுப்பார்கள்? என்ன மாதிரியான ஜிம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சென்னையின் பிரபல ஜிம் ஒன்றின் கிளை மேலாளரான ராணியிடம் பேசினோம்.
‘‘உடற்பயிற்சி என்பது உடலை மட்டுமல்லாமல் மனதையும் உற்சாகப்படுத்தக்கூடியது. உடலின் ஃபிட்னஸ் அழகான வடிவத்தையும், ஆரோக்கியமான உடலையும் தரும். இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கும். இவையெல்லாம் அறிவியல்ரீதியான உண்மைகள். ஏனெனில் உடலின் ஃபிட்னஸ் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும் உதவுகிறது.
பலரும் ஃபிட்னஸ் என்றால் வெறும் எடை குறைப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள். உடலின் வளைவுத் தன்மையான ஃபிளெக்ஸிபிலிட்டி, ஸ்டாமினா, தசைகளின் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் தாங்குதிறன் போன்றவற்றை அதிகரிப்பதுதான் ஃபிட்னஸ்.
உடலின் எடையை குறைப்பதை காட்டிலும் உடலின் கொழுப்பைக் குறைப்பது மிகவும் அவசியம். உடலின் எடையைக் குறைத்து தசையின் எடையைக் கூட்ட வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதபட்சத்தில் வாக்கிங் செல்லலாம். ஆனால், வாக்கிங் மட்டுமே முழுமையான ஃபிட்னஸுக்கு உதவாது. ஏனெனில், வாக்கிங்கில் கலோரி மட்டும்தான் குறையும்.
அதுவே ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும்போது கலோரியைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, வயிற்றுத்தசை, கைகளின் தசை, கால்களின் தசை என ஒவ்வொரு தசைக்குமான உடற்பயிற்சி கிடைக்கும். அதற்கேற்ற கருவிகளும் ஜிம்மில் தனித்தனியே இருக்கும்.
இத்துடன் வாரத்தில் ஒருநாள் ஜிம்மிலேயே யோகா கற்றுக் கொள்ளலாம். அதனால் மனமும் ரிலாக்ஸ் ஆகும். மசாஜ் வசதிகளும் உள்ள ஜிம்மாக இருந்தால் உடல்வலியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்டீம் வசதி கொண்ட ஜிம்மாக இருந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடல் அழகைக் கூட்டிக் கொள்ளவும், உடலின் கெட்ட நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கவும் உதவும். முக்கியமாக, இறந்த செல்களை நீக்க ஸ்டீம் வசதி பயன்படும். இதையும் மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம்.
ஜும்பா டான்ஸ் போன்றவற்றை வாரம் ஒருமுறை பயிற்சி செய்யும்போது, கலோரி குறைவதுடன், சந்தோஷமாக ஆட்டம் பாட்டத்துடன் அதனை செய்யும்போது ரிலாக்ஸாகவும் உணர முடியும். உடல் வலிமைக்கான பயிற்சிகளுக்கான கருவிகளால் தசைகளை டோன் செய்துகொள்ள முடியும். ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.
என்னதான் நாம் பயிற்சி செய்தாலும் ஜிம் போன்ற இடங்களில் நம் உடலுக்குத் தேவையான முறையான உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அங்கே உள்ள ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள், பிஸியோதெரபிஸ்ட், டயட்டீஷியன் என பல்வேறு நிபுணர்கள் கவனமான முறையில் நம் உடல் எடையை குறைக்க உதவுவதோடு நம்மை ஃபிட்டாக வைத்திருக்கவும் உதவுவார்கள்.
ஜிம்முக்குப் போவது காஸ்ட்லியானது என்றும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. மாதம் ஒரு சிறிய தொகையை இதற்காக செலுத்தி யார் வேண்டுமானாலும் தன் உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள முடியும்’’ என்று வழிகாட்டுகிறார்.உணவியல் நிபுணர் கலைவாணியிடம் ஜிம்முக்கு வருகிறவர்களின் எதிர்பார்ப்புகள் பற்றிக் கேட்டோம்…
‘‘பொதுவாக ஜிம்முக்கு வருகிறவர்கள் எடைக் குறைப்புக்காகவே வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் எடை குறைப்புக்கு உடற்பயிற்சியோடு டயட்டையும் பின்பற்ற வேண்டியது அவசியம். எனவே, அவரவர் உடல்நிலைக்கு தகுந்தவாறு டயட் சார்ட் பின்பற்ற வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ், பூசணிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ் என பல விதமான டயட் சார்ட்கள் உண்டு.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு இந்த டயட் சார்ட்டையும் பின்பற்றும்போது உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் பொருட்களை தவிர்த்து பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும் சரியாகும்’’ என்கிற கலைவாணி, பெண்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி சில விஷயங்களை அழுத்தமாகக் கூறுகிறார்.
‘‘பெண்களுக்கு இளவயதில் உடல் மேல் இருக்கும் அக்கறை பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை. குழந்தைகள், கணவர் என குடும்பத்தின் மேல் காட்டும் அக்கறையில் சிறுபகுதியையும் தன் உடலின் மேல் காண்பிப்பதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதும் இன்றைய தேதியில் அத்தியாவசியமாகிவிட்டது. வீடு, அலுவலகம் என எந்நேரமும் பிஸியாக இருப்பதால் உடலின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது.
தற்போது பெரும்பாலும் அலுவலக வேலைகளும் கணினி முன் உட்கார்ந்து செய்வதாகவே இருக்கிறது. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற நவீன சாதனங்கள் வந்த பிறகு உடலுக்கான பயிற்சி பெண்களுக்குக் குறைந்துவிட்டது. வாகன வசதியும் பெண்களின் நடையைப் பெருமளவு குறைத்துவிட்டது. நிலைமை இப்படி இருப்பதால் பெண்களின் உடல் எடை கூடுவதில் அதிசயம் இல்லை. அதனால்தான் இன்றைய பெண்கள் உடல்ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
முந்தைய காலத்தில் Communicable disease எனப்படும் தொற்றுநோய்களால் இறந்தவர்கள்தான் அதிகம். ஆனால், தற்போது மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் Non communicable disease காரணமாக இறப்பவர்களே அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம்.
அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது. கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரியைக் குறைக்க உதவும். பெண்கள் நன்றாக இருந்தால்தான் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நன்றாக வைத்திருக்க முடியும். தற்போது இந்த விழிப்புணர்வு பெண்களிடம் ஓரளவு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு ஜிம்முக்கு வருகை தரும் பெண்களின் எண்ணிக்கையே ஓர் உதாரணம்’’ என்கிறார்.
ஜிம்முக்கு வருகிற பெண்கள் என்ன சொல்கிறார்கள்…
ரம்யா
இன்றைய தினசரி வாழ்வில் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஜிம்முக்கு வந்த பிறகு ரொம்பவும் ஆரோக்கியமாக உணர்கிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உற்சாகமா இருக்கிறது. இங்கே குழுவாக இணைந்து செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாருடனும் செய்யும்போது மத்தவங்களை பார்த்து நம்மளும் இன்னும் நல்லா ஒர்க் அவுட் பண்ணணும் என்கிற நினைப்பு வருகிறது. மற்ற பெண்களோட நட்பா பழகறதும் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்க்கை இலகுவா இருக்கிற மாதிரி உணர முடியுது.
சிந்துஜா
எனர்ஜி லெவல் மெயின்டெயின் ஆகுது. கழுத்து வலி, மூட்டுவலி குறைந்து ரொம்ப வலுவாகவும், ஃபிட்டாகவும் உணர்கிறேன். டயட்டீஷியன் மூலமாக அவரவர்க்கு தகுந்தபடி டயட் லிஸ்ட்டும் கொடுக்கிறாங்க. பேலன்ஸ்ட் டயட்டை ஃபாலோ பண்றேன். அதனால் உடலும் மனமும் ரொம்ப ஆரோக்யமாக இருக்கு.
என்னைப் பார்த்து வீட்டில் இருப்பவர்களும் காய்கறிகள், பழங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆரோக்யமா சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. நான் வேலை செய்யும் இடத்திலும் சில பேர் ஜிம்மோட அவசியத்தை உணர ஆரம்பிச்சிருக்காங்க. ஸ்டீம், மசாஜ் போன்ற வசதிகள் இருப்பதால் அதெல்லாம் செய்துகொள்ளும்போது உடல் மற்றும் மனதுக்கு ரிலாக்ஸாக உணர முடியுது.
வனஜா
நகரத்துப் பெண்கள் கிராமத்துப் பெண்கள் போல குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்றது ரொம்ப குறைவு. நகரப்பெண்களுக்கு பெரிதாக உடற்பயிற்சி கிடையாது. அதனால் உடல் எடை கூடி பல பிரச்னைகள் வருகிறது. அதனால் இப்ப ஃபிட்னஸ் கான்ஷியஸ் பெரும்பாலான பெண்களிடம் வந்திருக்கிறது. இந்த மாதிரி ஜிம்முக்கு வரும்போது ஃபிட்னஸ் கிடைக்குது. மன அழுத்தம் குறையுது. உற்சாகமாக உணர முடியுது.
பெண்களுக்கான தனி ஜிம்மாக இருப்பதால் சுதந்திரமாக இருக்க முடியுது. நேரத்தை ரொம்ப உபயோகமாக செலவழிக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். மாரத்தான் போன்றவை நடத்தப்படுவதால் வெளியிலும் போய் உடற்பயிற்சி செய்யும்போது வித்தியாசமாக உணர முடியுது. எனக்கு ஜிம்முக்கு வந்ததற்குப் பிறகு மூட்டுவலி, முதுகுவலி இதெல்லாம் குறைந்திருக்கிறது.
Average Rating