இந்தியாவின் இராணுவக் காய்நகர்த்தல்!!(கட்டுரை)

Read Time:10 Minute, 15 Second

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ முரண்பாடுகள் தொடர்பான இறுக்கமான பேச்சுகள், நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள், தெற்காசிய அணுசக்தி நாடுகளான இவ்விரண்டையும், தொடரியலான பாதுகாப்பு முரண்பாடுகளில் பிணைத்துள்ளன. மேலும் தொடர்ந்துகொண்டிருக்கும் எல்லைப் போராட்டம், போர்நிறுத்த உடன்படிக்கையை அறவே இரு நாடுகளும் கைவிட்டுள்ளமை, தெற்காசியப் பிராந்தியத்தில் மேலதிக நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில், ஆயுதம் ஏந்திய நான்கு ஆயுததாரிகள், பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்திய இராணுவ தளத்தினுள் நுழைந்து, மட்டுப்படுத்தப்பட்ட மோதலில் ஈடுபட்ட அளவில், அதிகபட்சமாக 18 இந்திய எல்லைப்படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பில் இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் அக்கண்டனங்களை மறுத்ததுடன், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பைப் பலப்படுத்தியமையும், இராணுவத்துக்கு மேலதிக ஆளணிகளை உள்வாங்கியமையும், இந்திய இராணுவ மற்றும், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில், மீள் தாக்குதலுக்கு தயாராதல் மற்றும் இராணுவ பலத்தை நிரூபித்தல் என்னும் அடிப்படியில் இராணுவ கொள்கைகளில் வன்போக்கைக் கடைப்பிடிக்கவும் தூண்டியிருந்தது.

மேலதிகமாக, இந்தியப் பிரதமராது போருக்கான அறைகூவல், பிராந்திய அளவில் அச்ச உணர்வை ஏற்படுத்திய போதிலும், இந்துத் தேசியவாத அரசாங்கமான பா.ஜ.கவின் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்திருந்த, பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ அறைகூவலாக அமையவில்லை. குறிப்பாக அது, பாகிஸ்தானுக்குச் சவால் விடும் வகையிலான பொருளாதாரப் போட்டிக்கான பிரதமரது அறைகூவலாகவே அன்றைய பொழுது அமைந்திருந்தபோதிலும், அண்மைக்காலங்களில், இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அறிக்கைகளும், பாகிஸ்தானுக்கு எதிரான நேரடியான இராணுவ வல்லமையைக் காட்ட முனைப்படும் ஒரு வேகத்தின் விளைவாகவே பார்க்கப்படவேண்டியதாய் உள்ளது. இதன் அடிப்படையிலேயே, பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற இருந்த சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுத்தமை, சார்க் உச்சிமாநாட்டைத் தள்ளிப்போட ஆலோசனை வழங்கியமை என்பன பார்க்கப்பட வேண்டியதாகும்.

மேலும், தனது இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துதல், சர்வதேச அரங்கில் வல்லமை பொருந்திய துணை வல்லரசாகத் தன்னை நிர்ணயம் செய்தல் தொடர்பில், இந்தியாவின் அண்மைக்கால போக்கு குறிப்பிடத்தக்கதாகும். இதன் ஒரு பகுதியாகவே, அண்மைய குடியரசு தின இராணுவ அணிவகுப்பு அமைந்திருந்தது. இதில் இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வல்லமைகொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு (BMD), பல வெளிநாட்டு இராஜதந்திரிகளினதும் பாதுகாப்பு வல்லுநர்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. இது தனது பரந்துபட்ட எல்லைக்குள் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எவ்விதமான ஏவுகணை ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கவும், குறித்த ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கவும் கூடியதான வல்லமை உடைய பாதுகாப்புத் திறன் பொருந்தியதாகும். குறித்த ஆயுத வல்லமையானது, ரேடார், உன்னதமான செயற்கைக்கோள் செய்தித்தொடர்புடன் சமாந்தரமாகவும் சடுதியாகவும் செயற்படக்கூடியதாகவும், குறிப்பாக எதிர் முனையிலிருந்து ஊடுருவும் ஏவுகணைகளை இடைமறித்தல், கட்டளை மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் மூலமாக, தேவையான இலக்குகளைக் கண்காணித்தல், ஏவுகணைத் தாக்குதலை மேற்கொள்ளுதல் என பல உயர் தொழில்நுட்பம் கொண்ட வினைத்திறன் வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பாகும்.

சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் குறித்த பாதுகாப்புக் கட்டமைப்பை, அது தவிர்ந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, இஸ்‌ரேல், சீனா ஆகியவை மட்டுமே ஏவுகணைத் திட்டத்தில் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஒரு பிரிவாக இருந்த இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள துணைக்குழுக்களை ஆதரித்தல் என்பது, 9/11 தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானால் முன்னிருந்தவாறு பேணமுடியாமல் போனமை, பாகிஸ்தானின் ஒரு புற இராணுவ விரிவாக்கத்துக்கான தோல்வியாகும். இந்தியா இந்நிலையை, சர்வதேச உதவியுடன் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்னும் நிலையில் மிகவும் இலாவகமாகக் கையாண்டிருந்த போதிலும், அதனைத் தாண்டியும், ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான, பனிப்போருக்குப் பிந்திய இராணுவ இணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற ஆயுதக்குழுக்களுடன் பாகிஸ்தான் இராணுவம் கொண்டிருந்த தொடர்பை முழுமையாகத் துண்டிக்க வேண்டியிருந்தமை, பாகிஸ்தானின் கொள்கைரீதியான தோல்வியாகும். மேலும், இணைந்த உளவுத்துறை பகிர்தலின் ஒரு பகுதியாக, குறித்த ஆயுதக்குழுக்கள் தொடர்பான (மட்டுப்படுத்தப்ப) விடயங்களை ஐ.அமெரிக்க நலனுக்காகப் பகிர வேண்டியிருந்தமையும், குறித்த ஆயுதக்குழுக்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இடையில் விரிசல் நிலையை தோற்றுவித்திருந்தது.

எது எவ்வாறாயினும், இந்நிலை இன்று இல்லை. இன்று, ஐ.அமெரிக்காவை விட பாகிஸ்தானுக்கு மிகவும் நேசமான நாடாக, சீனா மிளிர்கின்றது. இராணுவ உதவிகளையும் தளவாடங்களை வழங்குதல் உட்பட பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் மிகவும் அதிகப்படியான வகிபாகத்தை, சீனாவே கொண்டுள்ளது. இந்நிலை பாகிஸ்தான் – இந்திய இராணுவ முரண்பாடுகளில் பாகிஸ்தானுக்கும், சீன – இந்திய எல்லை முரண்பாடுகளில் சீனாவுக்கும் நன்மை தரும், ஒரு மூலோபாய நடவடிக்கையாகும் என இந்தியா உணர்ந்துள்ளதுடன், இதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவின் காஷ்மிர் பகுதிகளில் இந்திய இராணுவத்துக்கு எதிராக துணைக்குழுக்களைப் பேணுதல் தொடர்பில் சீனா, பாகிஸ்தானுக்கு எதிர் சமிக்ஞை செய்யாதலும், தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் துணைக்குழு ஒன்றின் தலைவரான மசூட் அஸ்ஹரினை ஐக்கிய நாடுகளின் “பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர்கள்” பட்டியலில் சேர்ப்பதற்கு எதிராக, வீட்டோ அதிகாரத்தை பாதுகாப்புச் சபையில் சீனா தொடர்ச்சியாகப் பயன்படுத்தலும் பார்க்கப்படவேண்டியதாகும்.

இவற்றின் பின்னணியிலேயே, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், வருடாந்த இராணுவ தின உரையில் (அண்மையில்), “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடத் தலைப்பட நேருமாயின், பாகிஸ்தானின் அணு இராணுவ வல்லமையைத் தாண்டியும், அதனை எதிர்நோக்கும் வகையிலும் நாம் போராடவேண்டியிருக்கும். அவ்வாறு போராட இந்திய இராணுவம் தயாராகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாமை காதலிக்கின்றாரா ஜாக்குலின்?(சினிமா செய்தி)
Next post உலகின் அதிவேக ரயில் எது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!!(வீடியோ)