வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)
வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)
கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான் சூத்திரம்.
அதுபோலவே, ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இருந்தால், இணைந்தால் இன்பம் கிடைக்கும் என்பதை விளக்குவதுதான் ‘காமசூத்திரம்’.
காம சாஸ்திரத்தை முதன்முதலில் வார்த்தைகளில் வடித்தவர் நந்தி பகவான். நந்திபகவானின் நூலைச் சுருக்கி ஐந்நூறு அத்தியாயங்களில் செய்தவர் ஸ்வேதகேது.
அவரைத் தொடர்ந்து பப்ரவ்யன், தத்தகர், சாராயனர், ஸ்வர்ணநபன், குச்சிமாறன் என ஏராளமானவர்கள் காமநூல் எழுதினர். இவர்கள் எழுதிய அத்தனை நூல்களில் இருந்தும் சாறு எடுத்து, அற்புதப் புத்தகமாக மாற்றியவர் யோகி வாத்ஸ்யாயனர்.
இவர் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறார். இன்று கிடைத்திருக்கும் காம விளக்க நூல்களுள் மிகவும் பழைமையானது இதுதான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான நூல் என்பதால், இன்றைய நடைமுறையில் இல்லாத, ஒத்துவராத பல விஷயங்கள் நூலில் இருக்கின்றன.
அவற்றை எல்லாம் மறந்து படித்தால், இது ஓர் அற்புத பொக்கிஷமாகவே இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் மட்டும் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.
மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை, ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை.
இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனித உணர்வுகள் எல்லாம், இதற்கு முன் மிகமிகச் சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று.
யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன; பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே, இதைப்பற்றி படித்துத் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம்.
இதற்கெல்லாம் விடை சொல்கிறது காமசாஸ்திரம்.
வயிற்றுப் பசிக்கு உணவிடுவதுபோல், உடல் பசிக்கு காம விருந்து வைப்பது தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால், இதைத் தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன.
ஆனால், மனிதனின் நிலை வேறு. காமவேட்கையை எல்லா காலங்களிலும் சிறப்பாக, உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால், அவர்களுக்குச் சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன்தருவதாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது.
ஆண்-பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி, அங்கு உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது.
மேலும், எந்தச் சமயத்திலும், அனைத்துக் காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்துக்கொள்வது நல்லதே.
கணவன் மனைவி, காதலன்காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயிரினங்களில் இல்லை. மேலும், எந்த உயிரினமும் பரஸ்பரம் திருப்தி அடைவதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை.
அதனால், பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு ‘காமசாஸ்திரம்’ அவசியமே. உடல், நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ,
அதுபோல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும்.
கலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆண்-பெண் இருவரும் இணையும்போதுதான் இன்பத்தின் எல்லைவரை செல்ல முடிகிறது.
அதனால், பெண்களும் காமசாஸ்திரத்தைப் படித்து அறிந்துகொள்வது நல்லதே. பெண்கள், காமசாஸ்திரத்தை எப்படி, யாரிடம் அறிந்துகொள்வது என்பதற்கும் வழி சொல்லித் தருகிறது.
1. மணமான தோழி
2. அந்தரங்க சிநேகிதி
3. தாயின் சகோதரி (சித்தி)
4. மூத்த சகோதரி
5. வீட்டோடு இருக்கும் வயதான பணிப்பெண்
கலவி இன்பத்தை அனுபவிக்கப் பல வழிகள் இருக்கின்றன. சாஸ்திர விதிகளின்படி, திருமண முறைக்கு ஏற்ப ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அவளுடன் இல்லறம் நடத்தி காமசுகம் அனுபவிப்பதுதான் இயல்பான ஒன்று.
வைப்பாட்டி, விலைமகளிர், பலரால் அனுபவிக்கப்பட்ட இன்னொருவனின் மனைவி போன்றவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று காமசாஸ்திரம் சொல்லி இருந்தாலும், அவை இன்றைய நடைமுறைக்கு ஒத்து வராது.
எனவே, நாம் கணவன்-மனைவி உறவை மட்டுமே காமசுகம் அடைய சரியான உறவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இணை தேர்வு…
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது.
அதுபோல், காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண், தனக்குத் தகுந்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
* இருவரும் ஒரே நிலையில் உள்ள கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
* ஆணைவிட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.
* தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.
* மணந்துகொள்ளும் முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்து, அறிந்து, புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
* முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்கக் கூடாது.
* ஆணை விரும்புவதை பெண் வெளிப்படையாகச் சொல்லமாட்டாள் என்றாலும், கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
* மனத்துக்குப் பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி, ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருவாள்.
* நல்ல ஆடை அணியாத நேரத்தில், மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.
* பணக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்குப் பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.
* சந்தேகப்படுபவர்களும், அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.
அந்தக் காலத்தில் மணம் செய்துகொள்வது என்பது பல வகைகளில் நிகழ்ந்தது.
பெண்களை அடிமையாகக் கருதி தூக்கிக்கொண்டு செல்லும் ராட்சஸ மணம், பெண்களை ஏமாற்றி மணக்கும் பைசாஸ மணம், எவ்விதச் சடங்கும் இல்லாத கந்தர்வ மணம், யாருக்கும் தெரியாத ரகசியத் திருமணம் என்று இஷ்டப்படி எல்லாம் மணமுடித்தார்கள்.
தற்போது, வீட்டில் பேசி முடிக்கப்படும் திருமணம் என்றாலும் சரி, காதலன்காதலி சேர்ந்து ரகசியத் திருமணம் செய்வதானாலும் சரி, முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவு செய்த திருமணமே செல்லுபடியாகும் என்பதால், அதையே தற்போது முறைபடுத்தப்பட்ட திருமணம் என்று சொல்லலாம்.
உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார்.
தொடரும்….
Average Rating