கிச்சன் டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)
பிரெட், கொஞ்சம் பால், தேவையான சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் அரை மணி நேரத்தில் அருமையான ஐஸ்கிரீம் ரெடி. உளுந்த வடை மாவையே குட்டிக் குட்டி சீடை போல எண்ணெயில் பொரித்தெடுத்து குலோப்ஜாமூன் போல சர்க்கரைப்பாகில் போட்டால் புதுவித குலோப்ஜாமூன் சுவையாக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
பெருங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக செய்து தேங்காய் எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டால் குழம்பு, ரசம், மோர், கூட்டு இவற்றில் கொதிக்கும் போது போட்டால் வாசனை ஊரையே கூட்டும். ருசியும் மணமும் அலாதி தான். உங்கள் சமையலுக்கு ஈடு இணையே கிடையாது.
– ராஜி குருஸ்வாமி, சென்னை-88.
2 கப் புதினா இலைகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து 100Cல் அரை மணி நேரம் ரோஸ்ட் செய்யவும். ஆறியதும் கசக்கி பவுடர் செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். நிறைய நாட்கள் கெட்டுப் போகாமல் வரும். புதினா தேவைப்படும் இடங்களில் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வெண்ணெய் சுற்றி வரும் பேப்பரை கீழே வீசி விடாதீர்கள். கேக் செய்யும் போது மோல்டை லைனிங் செய்வதற்கு பயன்படுத்தினால் கேக்கை சுலபமாக எடுக்கலாம். ஊறுகாய் காய்ந்து போய் இருந்தால், அரை டீஸ்பூன் கரும்புச்சாறு சேர்த்து கலந்தால் புதிய ஊறுகாய் போல் சுவையாக இருக்கும்.
– ஹெச்.அகமது தஸ்மிலா, ராமநாதபுரம்.
ஏலக்காயை அம்மியில் நுணுக்கும் போது சிறிது அரிசி அல்லது சர்க்கரையைச் சேர்த்து நுணுக்கினால் அவை அம்மியில் ஒட்டாமல் எடுக்க சுலபமாக இருக்கும்.
– கே.ராஜேஸ்வரி, திருச்சி.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி ஜவ்வரிசியை போட்டு பொரித்து எடுத்து அதில் கரம்மசாலா, கேரட் துருவல், மிளகாய்த்தூள் கலந்து செய்தால் கரகர மொறுமொறு சுண்டல் ரெடி.
– நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.
ஜவ்வரிசி வடகத்திற்கு பச்சைமிளகாயுடன் ஐந்து பூண்டுப் பல்லை அரைத்து கலந்து வடாம் இட்டால் வாசனையாகவும் இருக்கும், வாய்வு தொந்தரவும் இருக்காது.
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
பாகற்காயை சமையல் செய்து இறக்கும்போது சிறிது மாங்காய்த்தூள் பொடியைச் சேர்த்து கலக்க பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாது. லேசான புளிப்புச் சுவையுடன் பாகற்காய் கறி நன்றாக இருக்கும்.
– எஸ்.சாந்தி, திருச்சி.
மீந்து போன தோசை மாவில் பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து பக்கோடா செய்யலாம்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து அதில் பச்சைக் கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் இதைப் பொரித்த குழம்பு கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். சிறுகீரையை ஆய்ந்து மீந்த தண்டுகளைக் குக்கரில் வைத்து வெந்ததும் பிசைந்து வடித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு தாளித்து சூப் செய்தால் மணமும் சுவையுமாக இருக்கும்.
– ஆர்.அஜிதா, கம்பம்.
முருங்கைப்பூவை எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். உங்கள் தெரு முழுவதும் வாசனை பரவும்.
– எல்.ஆர்.உமா மகேஸ்வரி, வாணியம்பாடி.
Average Rating