வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 49 Second

நண்பர் ஒருவரை நீண்ட காலம் பார்க்காமல், சில நாட்களுக்கு முன் சந்திக்கையில் சிறிது அதிர்ந்து விட்டேன். தடித்து கட்டையாகத் தோற்றமளிப்பவர், இப்போது மெலிந்து கச்சிதமாகக் காணப்பட்டார். சற்று அழகாகவே இருந்தார். அதை அவரிடமே சொல்லிவிட்டேன். ஆனாலும், மெலிவிற்குக் காரணமாக, சர்க்கரை பாதிப்பு ஏதும் இருக்கிறதா, என்று சந்தேகத்தோடு கேட்டேன். அவர் அதை மறுத்து பேலியோ டயட் பற்றி சொன்னார். இந்தக் கட்டுரை பேலியோ டயட் பற்றியதல்ல. பேலியோ டயட்டில் மிக முக்கிய அங்கமான, முட்டை பற்றியது.

ஏனென்றால், நண்பர் காலை உணவாக ஐந்து முட்டைகளை (மட்டுமே!) எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்பு வரை மஞ்சள் கரு நீக்கிய (கொழுப்பில்லாமல்) முட்டை மட்டுமே சாப்பிட்டவர் அவர். அசைவப் பெரும்பான்மையினரின் மிக முக்கிய உணவென மாறிவிட்ட பிராய்லர் கோழி இறைச்சி பற்றி பலவாறாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால், சைவ உணவுக்காரர்களிடம் கூட மிகவும் பிரபலமாக இருக்கும் கோழி முட்டை பற்றிய தகவல்கள் இங்கு குறைவாகவே கிடைக்கின்றன.

பிராய்லர் கோழி முட்டைகளுக்கும் நாட்டுக் கோழி முட்டைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் எவை என்றும், அவற்றில் எது ஆரோக்கியமானது என்றும், பலவாறாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் கிடைக்கும் 80 சதவீத முட்டைகள், கூண்டிலடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழி முட்டைகள்தான் என்றும், அக்கோழிகள் தங்கள் வாழ்நாள் முழுதும் ஒரு ஏ4 தாள் அளவு உள்ள இடத்திலேயே வாழ்ந்து மடிகின்றன என்றும் சொல்லும் அசோக் கண்ணன், ஹேப்பி ஹென்ஸ் ஃபார்ம் (www.thehappyhensfarm.com) என்ற பெயரில் தரமான கோழி முட்டைகளை விற்பனை செய்கிறார்.

திருச்சி அருகில் உள்ள இவருடைய பண்ணையில், கோழிகள் கூண்டிலடைக்கப்படாமல் சுதந்திரமாக வெளியில் உலவுகின்றன. இவர்கள் அளிக்கும் தரமான தீவனத்திற்கும் மேலாக, கோழிகள் அங்குள்ள பூச்சிகளையும் தானியங்களையும் உண்டு வளர்கின்றன. இங்கு கோழிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஹார்மோன்கள், ஆண்டிபயாட்டிக் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை. குடிக்க நல்ல நீர், இயற்கையான உணவு, மற்றும் கோழிகள் முட்டையிட வசதியான கூடுகள், ஆகியவற்றை அமைத்திருப்பதன் மூலம் தரமான முட்டைகளை உற்பத்தி செய்கிறார். இவற்றை சுதந்திரமாகத் திரியும் கோழி முட்டைகள் (Free Range Eggs) என்று சந்தையில் விற்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து சில தகவல்கள்.

* நாட்டுக் கோழி முட்டைகள், பிராய்லர் கோழி முட்டைகளை விடச் சிறந்தனவா?
நாட்டுக்கோழி முட்டைகள் பிராய்லர் கோழி முட்டைகளை விடச் சத்தானவை என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றாலும், ஆண்டிபயாடிக் ஏதும் பயன்படுத்தப்படாததால் நாட்டுக் கோழி முட்டைகள் அவற்றை விடச் சற்று ஆரோக்கியமானவை என்று சொல்லலாம்.

* நாட்டுக்கோழி முட்டையை எப்படி அடையாளம் காண்பது?
நாட்டுக்கோழி முட்டைகள் பிராய்லர் கோழி முட்டைகளை விட சற்று சிறியதாக இருக்கும். ஆனால், அதை மட்டும் வைத்தே முடிவு செய்ய முடியாது. மஞ்சள் கருவின் நிறத்தை வைத்தும் சுவையை வைத்துமே முடிவு செய்ய முடியும்.

* சுதந்திரமாக உலவும் கோழி முட்டைகள் (Free Range Eggs) நாட்டுக் கோழி முட்டைகள் தானா?
கைரளி, காவேரி, கலிங்கா போன்ற கலப்பினக் கோழிகள் அளவுக்கு நாட்டுக் கோழிகள் முட்டையிடாது. அதோடு, எங்களது போன்ற வணிக ரீதியான பண்ணையில் அவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. உண்மையில் கோழிகள் என்ன இனத்தைச் சேர்ந்தவை என்பது முக்கியமில்லை. அவற்றுக்கு என்ன தீவனம் கொடுக்கப்படுகின்றது, அவை எந்தச் சூழலில் வளர்க்கப் படுகின்றன என்பதே அவை போடும் முட்டைகளின் தரத்தைத் தீர்மானிக்கின்றன.

* சுதந்திரமாக உலவும் கோழி முட்டைகளின் தரம், ஊட்டச்சத்து ஆகியன விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?
எந்த உணவுப் பண்டமானாலும் உங்களது நாவும், வயிறுமே சிறந்த சோதனைச் சாலைகள். எங்களது பண்ணையின் முட்டைகளைப் பொறுத்தவரை, பரவலாகக் கிடைக்கும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட ஆறு மடங்கு ஒமேகா 3 கூடுதலாகக் கொண்டிருக்கின்றன என்று அறிவியல் நிரூபணம் உள்ளது. அதாவது, சாதாரண முட்டையில் ஒமேகா 3, நாற்பத்தெட்டு மில்லிகிராம் என்றால் எங்களது முட்டையில் அது 300 மில்லிகிராம் இருக்கிறது.

* சந்தையில் இந்த முட்டைகள் சாதாரண முட்டைகளைவிடக் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை கூடுதல் விலை சொல்லப்படுகின்றன. எதிர்காலத்தில், அனைவரும் அன்றாடம் உண்ணும் வகையில் சகாயமான விலையில் இந்த முட்டைகள் விற்கப்படும் சாத்தியமுள்ளதா?
உற்பத்தி கூடக்கூட, எதிர்காலத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மிகப்பெருமளவில் தொழிற்சாலைகளைப் போல் உற்பத்தி செய்யப்படும் பிராய்லர் கோழி முட்டைகள் அளவிற்கு அவை விலை மலிவாகக் கிடைக்கும் வாய்ப்பில்லை.

* சுதந்திரமாகத் திரியும் கோழியின் முட்டைகளுக்கு விலையை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
இன்றைக்கு மிகச் சிலரே இந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி, இவற்றின் விலையைப் பெரும்பாலும் பண்ணை உரிமையாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். அதற்கான நியாயத்தை சந்தையின் தேவையே அளிக்கிறது. உண்மையில், இங்கு நூற்றுக்கணக்கான கோழியினங்கள் உள்ளன. முட்டைகளின் ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை.

பிராய்லர் கோழி முட்டையாயிருந்தாலும், நாட்டுக் கோழி முட்டையாயிருந்தாலும், சுதந்திரமாக உலவும் கோழி முட்டையாயிருந்தாலும், நாம் உண்மையில் பார்க்க வேண்டியது அவை ஆண்டிபயாடிக் மற்றும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றனவா என்பதும், அவை வளரும் சூழல் சுகாதாரமாக இருக்கிறதா என்பதும்தான். அதற்கு முதலில் நாம் எப்படிப்பட்ட உணவை உண்கிறோம் என்ற விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், நமது உணவே நமது நலம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரு-சென்னை இடையே விரைவு ரயில் பாதை திட்டம் : சீனாவின் உதவியை நாடியது இந்தியா!!(உலக செய்தி)
Next post பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?(அவ்வப்போது கிளாமர் )