கல்யாணத்துக்கு ரெடியா?!(மருத்துவம்)
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…
நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து… இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும் இயக்கங்களுக்கான புரோகிராமிங் மரபணுவின் மெமரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றத்தான் காதலுறுகிறோம், காமுறுகிறோம். காதலோ, காமமோ தவறுகள் அல்ல… மனித இயல்புகள்.
அன்புறும் மனங்களில் எல்லாம் இது எனக்கான துணைதானா என்ற தேடலிருக்கும். இவனைத் துணையாக மாற்றிக் கொள்ளலாம் என்ற செயல்களுக்கும் இயற்கையின் விதிகள் உங்களை நகர்த்துகிறது. அப்படி நமக்கான இணையைத் தேர்வு செய்து சமூக அங்கீகாரத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுதான் திருமணம். இந்தத் திருமணம் தாம்பத்ய வாழ்க்கையை ஆணும் பெண்ணும் துவங்குவதற்கான ஏற்பாடே.
அப்படி ஒரு திருமண வாழ்க்கைக்குத் தயாராகும்போது ஆண்/பெண் இருவரும் உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். திருமண வாழ்வில் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் கேள்விகள் அம்புகளாக மாறி அன்புக் கூட்டை சிதைத்து விடாமல் இருக்க இந்த முன் தயாரிப்பு அவசியம்.
சரி… திருமண வாழ்வுக்கு எப்படி தயார் ஆவது?
மனநல மருத்துவர் மீனாட்சி சில எளிய வழிமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
Marital counselling
வெளிநாடுகளில் திருமணத்துக்கு முன்பாக Marital Counselling எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரிய நகரங்களில் மட்டுமே இந்த திருமண ஆலோசனை பற்றி தெரிகிறது.
திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களே இதற்கானத் தேவையை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு பண்பு நலன்கள் கொண்ட இருவர் இணைந்து வாழும் போது ஏற்படப்போகும் சிக்கல்களை முன் கூட்டியே கணித்து, உடலளவிலும் மனதளவிலும் ஒரு ஆணும்/பெண்ணும் தயாராக வேண்டியுள்ளது.
கூட்டுக்குடும்ப முறைகள் மறைந்து, நியூக்ளியர் குடும்பங்களின் வளர்ச்சி திருமண வாழ்வின்போது ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் கூட பெரிய பிரச்னையாக மாறி அந்த உறவை உடையச் செய்கிறது. இவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ, ஆலோசனை சொல்லவோ வாய்ப்பில்லாத நிலை. இதனால்தான் Marital counselling திருமணம் ஆகப்போகிற இருவருக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது.
ஹெல்த் செக்கப் கட்டாயம் தேவைதிருமண பந்தத்தில் இணையப் போகிற இருவர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது கடந்த கால நோய்கள் பற்றிய வரலாறு. சிறுவயதில் இருந்து இருவரையும் பாதித்த நோய்கள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கடந்தகால நோய்களால்குழந்தைப் பிறப்பில் ஏதாவது பிரச்னை வருமா அல்லது இல்லற வாழ்வில் தாம்பத்ய உறவை அது பாதிக்குமா என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணுடலில் கருப்பை, சினைப்பை மற்றும் முட்டை வெளியேற்றம், பீரியட்ஸ் பிரச்னைகள் குறித்தும் பரிசோதனை, ஆலோசனை பெறுவதும் அவசியம். ஆணுக்கு விந்தணுவின் தன்மையையும் பரிசோதித்துக் கொள்வது இனிய இல்லறத்துக்கு வழிவகுக்கும். திருமணத்துக்குப் பின் எப்போது குழந்தைப் பேறு என்பதைத் திட்டமிட்டு குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் மகளிர் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.
தாம்பத்யம் குறித்த சந்தேகங்களுக்கும் மருத்துவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். புதிய உறவை, புதிய சூழலை ஏற்றுக் கொள்ளத் தயாராவது…இருவர் இணைந்து நடத்தும் இல்லற வாழ்வில் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கு என்று நம்பிக்கைகள், வழிமுறைகள் இருக்கும். அவற்றை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
பெரியவர்கள் அல்லது மனநல மருத்துவர் முன்னிலையில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். இருவர் மனதிலும் திருமண வாழ்வு குறித்த எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தலாம். எது நடைமுறை வாழ்வில் சாத்தியம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் திருமணமாகி வருகிறாள் என்றால் கணவர் வீட்டுக்கு ஏற்ப அவளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொது விதி நம் ஊரில் நிலவுகிறது. ஆனால், இந்த மாற்றம் என்பது இரண்டு இடத்திலும் நிகழ வேண்டும். தன் வீட்டை விட்டு புதிய உறவுகளுடன் வாழ வரும் பெண்ணுக்கு அன்பும், நம்பிக்கையும் கொஞ்சம் உரிமையும் புகுந்த வீட்டில் வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
திருமணம் ஆன புதிதில் தனிமை மணமக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தனிமை மற்றவர்களால் அபகரிக்கப்படாமல் இருந்தால்தான் சீண்டலும், தீண்டலும் அன்பும் சேற்றில் தாமரைகளாக மலர்ந்து திக்குமுக்காட வைக்கும்.
விட்டுக் கொடுப்பது எது வரைக்கும்?!
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் காதல் திருமணம் செய்திருந்தார். திருமண உறவின் இன்னொரு அர்த்தமே தாம்பத்ய உறவும், அதன் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதும். இருவரது எதிர்பார்ப்புகளையும் திருமணத்துக்கு முன்பாகவே பேசித் திட்டமிட்டிருந்தால் அந்த விவாகரத்தைத் தவிர்த்திருக்க முடியும். திருமணம் வரை மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வது போல் தலையாட்டுவதும், தன் விருப்பம் அல்லது வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் நடிப்பதும் இதுபோன்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இருவரும் உண்மையாக, இயல்பாக இருப்பது மிக முக்கியம்.
மனநலப் பரிசோதனையும் அவசியம்ஒருவர் மனநலக் குறைபாடு உள்ளவர் எனில் அவர் திருமண வாழ்வுக்கான தகுதியை இழக்கிறார். சட்டப்படி குடும்ப வாழ்வு, தாம்பத்ய வாழ்வு இரண்டுக்கும் அவர் தகுதியில்லாதவராகிறார். ஜாதகத்தை மட்டும் வைத்து நடக்கும் ஒரு சில திருமணங்களில் உண்மை தெரிந்தே மனநலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. மனநல பாதிப்பு உள்ளவர்கள் முழுமையான தாம்பத்ய வாழ்வை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.
எனவே, திருமணத்துக்கு முன்பாக மன நோய் பாதிப்புகள் இருக்கிறது எனில் அவர்கள் முறையாக மருத்துவரை அணுகிப் பேச வேண்டும். மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் வழியாக குணமடைய வாய்ப்புள்ளதா? தாம்பத்ய உறவுக்கு இதனால் ஏதும் தொந்தரவு இருக்காதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக ஒருவருக்கு தாம்பத்யமே பிடிக்காமல் இருக்கலாம், ஆணையே வெறுப்பவராக இருக்கலாம். இவற்றுக்கு மனநல ஆலோசனை பெறுவதன் மூலமே தீர்வு காண முடியும்.
அந்த விஷயத்துக்கு ஃபிட்டா?!
திருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவருக்கும் நம்பிக்கைக்கு உரிய யாரும் பாலியல் கல்வியைச் சொல்லித் தருவதில்லை. பாலியல் சொல்லித்தரும் புத்தகங்கள், வீடியோக்கள், ஆன்லைன் கதைகள் இவர்களுக்கு தவறான ஆசான்களாக மாறுகிறது. இது இயல்புக்கு மாறான விஷயங்களைச் சொல்லித் தருகிறது. அதில் பாலியல் தொடர்பாக சொல்லப்படும் கதைகள், வீடியோக்கள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.
அவற்றைப் பார்த்து விட்டு தன்னால் இதுபோல உறவு கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஆணுக்கும் எழுகிறது. பெண்ணுக்கும் குழப்பம் வருகிறது. இதுபோன்ற எதுவும் உண்மை இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்வதுடன், தேவைப்பட்டால் மருத்துவரையும் அணுகியும் இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ஆம்… அன்பு மிகுந்த ஒரு வாழ்வுக்குத் தயாராகும் நீங்கள் அன்பு செய்வதில் கடலெனப் பெருகுங்கள். உங்கள் அன்புக்கு அணை போடும் சந்தேகங்களுக்கு முன்பாகவே தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ஆண், பெண் வாழ்விலும் ஆர்வத்துடன் காத்திருக்கும், கற்பனைகளுக்குப் பஞ்சம் இல்லாத முதலிரவு குறித்து வெளிப்படையாகப் பேசுவோம்.
Average Rating