ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்!!(கட்டுரை)

Read Time:13 Minute, 33 Second

இந்தியாவில் மீண்டுமொரு சமூக நீதிப் புரட்சி போல், வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம் 1989’ பற்றி, நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புத்தான் இந்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கும் சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று ஒரு தரப்பும், இந்தச் சட்டம் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்று இன்னொரு தரப்பும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில், வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இரு தரப்பு வாதத்தையும் சமநிலைப்படுத்தும் விதத்தில்தான் அமைந்திருந்தது. ஆனாலும், “மத்திய பா.ஜ.க அரசாங்கம், பாதுகாக்கத் தவறி விட்டது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, கலவரம் இடம்பெற்று விட்டது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களுக்கு எதிராக, எங்கெல்லாம் வன்முறைகள் நடைபெற்று, அதில் போதிய ஆதாரங்கள் இருக்கிறதோ, அந்த மாதிரிப் புகார்களை, எடுத்த எடுப்பில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடவில்லை.

ஆனால், உச்சநீதிமன்றம், முகாந்திரம் இல்லாத புகார்களில், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்கு மட்டுமே தடை விதித்தது. அதில் கூட, ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கைது செய்யலாம் என்றே உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது; அதன்படி, பதிவு செய்யப்படும் வழக்குகள் நிரூபணம் ஆவதில்லை போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்தது.

இச்சட்டம் குறித்த வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உண்டு. ஆகவே உச்சநீதிமன்றம், இந்த வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டாம் என்றே, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஆனாலும், வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி விவாதித்து, இறுதியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதில், சில கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்தது.

அதைக் காரணம் காட்டி, மிகப்பெரிய கலவரம் உருவானது. அதனால், மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தை நாடி, “உங்கள் தீர்ப்பை மறு சீராய்வு செய்யுங்கள்” என்று மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணைக்கு மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

தலித்களின் பாதுகாப்புக் குறித்து, இப்படியொரு போராட்டம் நடைபெறுவதற்கு காரணம் என்ன? மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தலித் வாக்கு வங்கியைக் குறி வைத்து, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற டொக்டர் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பல்வேறு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த தின விழாவை, படு விமரிசையாகக் கொண்டாடியது. அம்பேத்கர் சர்வதேச மய்யம், டெல்லியில் தொடங்கப்பட்டது.

டெல்லியில் உள்ள, அவர் வாழ்ந்த இல்லத்தை, நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான், ராம்நாத் கோவிந்த் இந்தியக் குடியரசுத் தலைவரானார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.ஆர் நாராயணனுக்குப் பிறகு, ராம் நாத் கோவிந்த இந்திய குடியரசுத் தலைவரானது, மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

இதனால், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு தலித் மக்கள் முன்னேற்றத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற உணர்வு ஏற்படத் தொடங்கியது.

உத்தரபிரதேசம், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், தலித் வாக்கு வங்கி, கனிசமான அளவில் பா.ஜ.க பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம், முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

பிறகு, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு ஆங்காங்கு உள்ள மாநிலக் கட்சிகளுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் கூட பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சிக்கு விழும் தலித் வாக்குகள் விழவில்லை.

அதனால் அக்கட்சி, படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய வாக்குகளை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.கவிடமிருந்து அந்த மாநிலத்தைக் கைப்பற்ற முடியவில்லை. குஜராத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பா.ஜ.கவே ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலிலும், மலை வாழ் மக்களின் வாக்குகளைக் காங்கிரஸ் கட்சியால் பெறவே முடியவில்லை. அக்கட்சியிடம் இருந்த அந்த வாக்கு வங்கி, அடியோடு காணாமல் போய் விட்டது. அதற்கு மாறாக, அந்த வாக்குகள் பா.ஜ.கவுக்கு விழுந்து, 25 ஆண்டு கால ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து விட்டது.

எதிர்வரும் கர்நாடகத் தேர்தலில், தலித் வாக்கு வங்கியைக் குறிவைத்து, பா.ஜ.க தீவிர அரசியல் செய்கிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, தலித் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, பா.ஜ. கவுக்கும் தலித் வாக்கு வங்கிக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

ஆகவே, ஒட்டுமொத்தமாகத் தலித் வாக்கு வங்கி, காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட சூழ்நிலையை, முதன்முதலில் கையில் எடுத்தவர் ராகுல் காந்தி. அதன்பிறகு, அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுக்க, மிகச் சரியான ஆயுதம் என்று இந்தத் தீர்ப்பைக் கையில் எடுக்கவே, இந்திய அரசியலில் தலித்களின் போராட்டம் ஒரு தீவிரத்தை எட்டி விட்டது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றுமா அல்லது திருத்துமா என்பதெல்லாம் இனி வழக்கு விசாரணை நடைபெறும் போது பார்க்க வேண்டிய அம்சங்கள். ஆனால், அரசியல் இன்றைக்கு, தலித் வாக்கு வங்கிக்கும் மற்ற வாக்கு வங்கிகளுக்கும் இடையிலான போட்டியாக மாற்றப்படுவது, இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல.

விரைவில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், இந்தப் போராட்டம் மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பா.ஜ.கவுக்கே மீண்டும் கை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதேநேரத்தில், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கு உதவலாம். தமிழகத்தில் கூட, 20 சதவீதத்துக்கும் மேலுள்ள தலித் வாக்குகளை மய்யமாக வைத்தே, பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. அந்த அரசியலால், இந்த வாக்கு வங்கிகளைப் பெறும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள், சோதனையைச் சந்தித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஆனாலும், தமிழகத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்டது போன்ற பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அறிக்கையுடன் நிறுத்திக் கொள்ள, ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.கவோ இதுவரை கருத்தே சொல்லவில்லை.

இதற்கெல்லாம், தலித் வாக்கு வங்கிக்காகக் குரல் கொடுத்தால், மற்ற வாக்கு வங்கிகளை இழக்க நேரிடலாம் என்ற எண்ணமும் தமிழகத்தில் ஆவேசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி போராட்டமுமே காரணமாகும்.ஆகவே, ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடு முழுவதும் தங்கள் விருப்பப்படி, அரசியல் கட்சிகளைப் பயன்படுத்த வைத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த தீர்ப்பு மட்டுமே வாக்கு வங்கி அரசியலுக்கான போராட்டத்துக்கு வித்திட்டது என்று கூறிவிட முடியாது. இட ஒதுக்கீடு இரத்துச் செய்வோம் என்ற பா.ஜ.கவில் உள்ள ஒரு சில தலைவர்களின் பேச்சு, தலித் மக்கள் முன்னேற்றம் பா.ஜ.க ஆட்சியில் பின்னுக்குப் போய் விட்டது என்று ஏற்பட்டுக் கொண்டிருந்த குமுறல், தலித் வாக்கு வங்கியைப் பா.ஜ.க கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்கிறது என்ற அச்சம் போன்றவை, தலித் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட வைத்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வாழைப்பழம் இருந்தால் இந்த மேஜிக் கத்துக்கோங்க !!(வீடியோ)
Next post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)