சர்வதேச தொழில் தாபனம்: தொழிலாளருக்கு குழிபறித்தல்!!(கட்டுரை)

Read Time:23 Minute, 8 Second

A Palestinian protester waves her national flag in front of Israeli security forces during a protest marking the Palestinian Land Day in the West Bank village of Nabi Saleh near Ramallah, March 28, 2015. Land Day commemorates the unrest that erupted in March 1976 when Israeli Arabs protested the Israeli government’s confiscation of thousands of acres of Arab-owned land and in which six Arab citizens were killed by Israeli police. Photo by Shadi Hatem
உலகளாவிய அமைப்புகள், மக்கள் நல நோக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை, மக்களின் பொதுநலனில் அக்கறை கொண்டவை. அதனால், அதன் தேவையும் முக்கியத்துவமும் தவிர்க்கவியலாதது என்றெல்லாம் எமக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை அமைப்புகளும் ஆற்றும் பணிகள் பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உலக மக்கள், அவற்றின் மீது அளவற்ற நம்பிக்கை வைக்கக் காரணமாயுள்ளன. ஆனால், நடைமுறையில் இவ்வமைப்புகளால் எதையும் பெரிதாகச் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் நாம் காணவியலும். ஆனால், நாம் இன்னமும் நம்பிக்கை வைக்கும்படி கேட்கப்படுகிறோம். அல்லது, நல்லது நடக்கும் என்று நம்பவைக்கப்படுகிறோம். அண்மையில், சர்வதேச தொழில் தாபனம் (International Labour Organsation – ILO) தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை வெனிசுவேலா அரசு அதிகரித்ததைக் கண்டித்ததோடு, முதலாளிமாருக்கு நட்டத்தை ஏற்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகளை, நிறுத்த வேண்டும் என்றும் கோரியது. அத்துடன், வெனிசுவேலா அரசாங்கத்தின், ‘அடிப்படை உரிமைகளுக்கும் முதலாளிமார் உரிமைகளுக்கும் எதிரான செயற்பாடுகள்’ குறித்து ஆராய, விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடிய அரசாங்கம், “வெனிசுவேலாவின் அரசு மீது, சர்வதேச தொழில் தாபனம் ஏற்படுத்தியுள்ள விசாரணை ஆணைக்குழுவை, கனடிய அரசாங்கமும் கனடிய மக்களும் வரவேற்கிறார்கள். மனித உரிமைகளுக்கும் முதலாளிமார் உரிமைகளுக்கும் எதிராகவும் ஜனநாயக விரோத வெனிசுவேலா அரசாங்கத்தின் செயற்பாடுகளை, கனடிய மக்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்” என்று தனது ஊடகக்குறிப்பில் குறிப்பிட்டது. இதன் மூலம், இரண்டு விடயங்களைக் கனடிய அரசாங்கம் செய்கிறது. முதலாவது, முதலாளிமார் உரிமைகள் என்ற போர்வையில், தொழிலாளர்களின் உரிமைகளை முதலாளிமார் பறிப்பதை, மனித உரிமையின் பேரால் நியாயப்படுத்துகிறது. இதன் மூலம், வெனிசுவேலாவை மனித உரிமை மீறல்கள் உள்ள நாடாகச் சித்திரிக்கிறது. இரண்டாவது, எதுவித அடிப்படையுமின்றி, வெனிசுவேலாவை ஜனநாயக விரோத அரசு என்று அழைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளில் ஒன்றாகவுள்ள சர்வதேச தொழில் தாபனத்துக்கு நீண்ட வரலாறுண்டு. 1818ஆம் ஆண்டு ஆங்கில தொழிலதிபர் ரொபேட் ஓவன், பிரான்ஸில் நடைபெற்ற புனிதக் கூட்டுறவு மாநாட்டில், தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அதற்காகச் ‘சமூக ஆணைக்குழு’ ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தார். பருத்தி ஆலை உரிமையாளரான ஓவன், தனது ஆலையில் வேலை செய்பவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட வேலை நேரம், மேம்படுத்தப்பட்ட தொழிலாளர் வசதிகள், தொழிலாளர்களுக்கு வீடு அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு வசதிகள் என்பவற்றை வழங்கி, முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 1819ஆம் ஆண்டு, பிரித்தானிய நாடாளுமன்றம், ஆலைகளில் வேலைசெய்பவர்களுக்கு, குறித்தொதுக்கப்பட்ட வேலை நேரத்தை உறுதிப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. இதைச் சாத்தியமாக்கியதில் பிரதான பங்கு ரொபேட் ஓவனைச் சாரும். ஓவனின் கோரிக்கைக்கு, ஏனைய முதலாளிகளிடம் பாரிய வரவேற்பு இல்லாத போதும், தொழிலாளர்களின் உரிமைக்கான குரல்கள், ஐரோப்பாவெங்கும் வலுக்கத் தொடங்கின. இதன் விளைவால், பாரிசில் 1864ஆம் ஆண்டு முதலாவது தொழிலாளர் சர்வதேச அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1866இல் முதலாவது சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ், சர்வதேச தொழிலாளர் சட்டவாக்கத்துக்கான கோரிக்கையை எழுப்பியது. 1883ஆம் ஆண்டு, சுகாதாரக் காப்புறுதி, கடமையின்போது விபத்து, ஓய்வூதியம் ஆகியன தொடர்பான சட்டங்கள், ஜேர்மனியில் நிறைவேற்றப்பட்டன. இவை, ஐரோப்பாவில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களாகும். 1886ஆம் ஆண்டு மே நான்காம் திகதி, சிக்காகோவில் 350,000 தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலையை உறுதிப்படுத்துமாறு கோரி, வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வியக்கம், மிருகத்தனமாக அடக்கியொடுக்கப்பட்டது. 1889ஆம் ஆண்டு, பாரிஸில் இரண்டாவது சர்வதேச அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 1890இல் பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகள், பிரித்தானியாவில் கூடி, தொழிலாளர் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களை ஆராய்ந்தனர். முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டு, இடம்பெற்ற பாரிஸ் சமாதான மாநாட்டில், உலக நாடுகள் சங்கம் (League of Nations) உருவாக்கப்பட்ட வேளை, அதன் ஓர் அமைப்பாக சர்வதேச தொழில் தாபனம் உருவானது. தொழிலாளர்கள் தவிர்க்கவியலாத சக்தி என்பதை, போரில் ஈடுபட்ட நாடுகளின் தலைவர்களும் பெருமுதலாளிகளும் உணர்ந்து கொண்டார்கள். இதன் விளைவால், தொழிலார்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது தவிர்க்கவியலாததாயிற்று. எட்டு மணி நேர வேலை நேரம், சிறுவர்களை வேலைக்குச் சேர்த்தலைத் தடைசெய்தல், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்தல், தொழிலாளர்களின் சமூக நலன்களில் அக்கறை, தொழிலாளர்கள் கூட்டாகச் சம்பளத்துக்கு பேரம் பேசும் உரிமை என்பவற்றை, உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டதே சர்வதேச தொழில் தாபனம் ஆகும். இதன் உருவாக்கத்திலும், தொடக்க காலச் செயற்பாட்டிலும் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்றின. இன்று முன்னெப்போதையும் விட, தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். உலகமயமாக்கல், எல்லைகளற்ற பல்தேசியக் கம்பெனிகளையும் நிறுவனங்களையும் வளர்த்துவிட்டுள்ள நிலையில், தொழிலாளர் உரிமைகள் காவு கொள்ளப்படுகின்றன. அதேபோல, நவதாராளவாதம் தன் கோரமுகத்தை மூன்றாமுலகில் வெளிப்படுத்துகையில், தொழிலாளர் உரிமைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. இப்பின்னணியில், எதையும் பெரிதாகச் செய்யவியலாத சர்வதேச தொழில் தாபனம், இப்போது முதலாளிகளின் நலன்பேணும் அமைப்பாகியுள்ளமை முரண்நகை. வெனிசுவேலாவின் மீதான விசாரணைக்கு, சர்வதேச தொழில் தாபனம் உத்தரவிட்டுள்ளமையின் பின்னணியை விளங்குதல் முக்கியம். இவ்விசாரணை மூலம், தொழிற்சட்டங்கள், வெனிசுவேலாவில் மீறப்படுகின்றன என்று ஊடகங்கள் காட்ட முனைகின்றன. இவ்விசாரணைக்கு அடிப்படை யாதெனில், வெனிசுவேலா அரசாங்கம், முதலாளிமாருடன் கலந்தாலோசிக்காமல், அவர்களது அனுமதியின்றித் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியமையே ஆகும். விந்தை யாதெனில், உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள், தங்கள் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தக் கோரி, அரசுக்கெதிராகத் கடந்த தசாப்தகாலமாகப் போராடி வருகிறார்கள். அவை, வேலைநிறுத்தங்கள், பேரணிகள் எனப் பல்வகைப்பட்டதாக அமைந்துள்ளன. ஆனால், வெனிசுவேலா அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெனிசுவேலா முதலாளிமார், சர்வதேச தொழில் தாபனத்திடம் முறையிட்டுள்ளனர். இதற்கு உடனடியாக, சர்வதேச தொழில் தாபனம், நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, தொழிற்சங்கம் அமைக்கவோ, அதில் சேரவோ அனுமதி மறுக்கப்பட்ட தொழில் உடன்படிக்கைகள், பல்வேறு தனியார் துறைகளில் வழங்கப்படுகின்றன. இவை, குறிப்பாக மூன்றாமுலக நாடுகளில் அரங்கேறுகின்றன. இவை, ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையையே கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகும். இது குறித்துக் கண்டும் காணாமல் இருக்கிறது, சர்வதேச தொழில் தாபனம். மாறிவரும் உலகில், அதிகார வர்க்கத்தின் இன்னொரு கருவியாக, சர்வதேச தொழில் தாபனம் மாறியுள்ளது. வெனிசுவேலாவுக்கு எதிரான இந்நடவடிக்கை, இன்று அந்நாட்டுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு முன்னெடுக்கும் ஆட்சிமாற்றச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும். மனித உரிமைகள் சபை, சர்வதேச தொழில் தாபனம் என்பன, தமக்கு உவப்பில்லாத நாடுகளைக் குறிவைக்கப் பயன்படும் கருவிகள் என்பதை மறக்கவியலாது. வெனிசுவேல அரசுக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள, வெனிசுவேலா வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (Venezuelan Federation of Chambers of Commerce and Production – FEDECAMARAS) வெறுமனே வர்த்தகர்களின், வியாபாரிகளின் அமைப்பு மட்டுமல்ல; அரசியல் ரீதியாக, மேற்குலக சார்ப்பான ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் அமைப்புமாகும். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வெனிசுவேலா ஜனாதிபதி ஹுயுகோ சாவேஸ், இராணுவப்புரட்சி மூலம் அகற்றப்பட்டபோது, ஜனாதிபதியாகப் பதவியேற்றவர், அப்போதைய வெனிசுவேலா வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பெட்ரோ கமோனா என்பது குறிப்பிடத்தக்கது. 47 மணித்தியாலங்களில் அப்புரட்சி தோற்கடிக்கப்பட்டு, சாவேஸ் மீண்டும் ஜனாதிபதியானார். வெனிசுவேலாவுக்கு எதிரான போரின், இன்னொரு கட்டம் இப்போது சர்வதேச தொழில் தாபனத்தின் வழி அரங்கேறுகிறது. இதுவரை இவ்வமைப்பு, இவ்வகையான 12 விசாரணைகளை நடாத்தியுள்ளது. அதில், பெரும்பான்மையானவை தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்திய அரசுகள் மீதானவை. குறிப்பாக, நிக்கரகுவாவில் சன்டனிஸ்டாக்களின் ஆட்சியின் போது, சட்டரீதியாகத் தொழிலாளர் உரிமைகள் அதிகரிக்கப்பட்டபோது, அவை முதலாளிகளின் நலன்களைப் பாதிக்கின்றன என்று சர்வதேச தொழில் தாபனம் சொல்லியது. அதேபோலவே, கிழக்கு ஜேர்மனி, சிம்பாவே ஆகிய நாடுகள் மீதும் குற்றஞ்சாட்டியது. சர்வதேச தொழில் தாபனத்தின் அண்மைய நடவடிக்கை, அவ்வமைப்பு மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று, தொழிலாளர்களின் உரிமைகள், வரன்முறையன்று மீறப்படும் நிலையில், அவைபற்றி, எதுவும் செய்யாத இவ்வமைப்பு, முதலாளிகளின் நலன்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுப்பது, சில முக்கிய செய்திகளைச் சொல்கிறது. இதைப் பல கோணங்களில் ஆராயவியலும். இருப்பின், ‘பணியமர்வுத்தரம்’ என்கிற அடிப்படையில் மட்டும் நோக்கும்போது, இன்று தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இக்கட்டான நிலையை விளங்கவியலும். இப்போது பணித் தரத்தைப் (quality of work) பற்றி மட்டுமே பேசப்படுகிறது. அதுவே அளவுகோலாகவும் உள்ளது. இதன்மூலம், பணியமர்வுத் தரத்தைப் பற்றிய எதுவித உரையாடல்களும் நிகழவிடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. பணியமர்வுத் தரத்தை நான்கு முக்கியமான அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கவியலும். முதலாவது, பணியின் நிரந்தரத்தன்மை; இரண்டாவது, உற்பத்தியின் பங்களிப்புக்கு ஏற்றாற்போல் ஊதியம்; மூன்றாவது, பணியமர்வுப் படிநிலை முன்னேற்றம் (career development); நான்காவது, சமூகப் பாதுகாப்பு (social security). பணியமர்வுத் தரத்துக்கும் பணித் தரத்துக்கும் நேரடித் தொடர்புண்டு என்பது வசதியாக மறைக்கப்படுகிறது. பணியமர்வுத் தரத்தை நிர்ணயிக்கும் எளிமையான அளவுகோலின் ஒரு முனையில், ‘நிரந்தர வேலைமுறை’ என்பதும் மறுமுனையில் ‘அமர்த்து துரத்து’ (Hire and Fire) வேலைமுறையும் இருக்கிறது. உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும், தங்களின் பணியமர்வுத் தரத்தை இந்த அளவுகோலின் மூலமாக அளந்தால், அனைத்துத் தொழிலாளர்களின் பணியமர்வுத் தரமானது, உலகமயமாக்கலுக்கு முந்தைய காலங்களில், கிட்டத்தட்ட சமச்சீராகப் பரவிக்கிடப்பதைக் காணமுடியும். அளவுகோலின் கீழ்முனையான ‘அமர்த்து-துரத்து’ வேலைமுறை என்ற இடத்துக்கு, அனைத்துத் தொழிலாளர்களையும் தள்ளுவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும். இது, கிட்டத்தட்ட இன்று சாத்தியமாகியுள்ளது.நவதாராளவாதம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தொழிலாளர் உரிமைகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, நாம் இப்போது பின்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். பணியமர்வுத் தரம், இதற்கான நல்லதொரு குறிகாட்டி. இன்று தொழிலாளர் எதிர்நோக்கும் சவால்கள், பெரியளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நவதாராளவாதத் திட்டமிடலின் விளைவுகள் என்பதை விளங்க வேண்டும். பலவேறு வடிவங்களில், நாம் காண்கின்ற சமூக நலன் பேணும் முதலாளித்துவ அரசானது, ஆளும் வர்க்கத்தின் மீதான நல்லெண்ணத்தின் விளைவானதல்ல. முதலாளிய சமூகத்தில் எடுக்கப்படும் சமூகநல நடவடிக்கை ஒவ்வொன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது, போராட்டங்களது நேரடியான அல்லது மறைமுகமான விளைவாகும். முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறியதும், நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலகமயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களிலிருந்து ஓர் அரசியல் சக்தியாக, நவதாராளவாதம் கண்ட எழுச்சியுடன் சேர்ந்து கொண்டன. அவை, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசு ஆற்றிய பங்குக்கு, குழி பறித்துள்ளன. மூன்றாம் உலகில், அவற்றின் விளைவுகள் மேலும் கடுமையானவை. அரசாங்கத்தின் மீது, ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களின் காரணமாக, அரசு தனது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்விளைவாக, அரசு வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு, நிவாரணம் மட்டுமன்றி, அரசு பொறுப்பெடுத்து இருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர்வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள், மெல்லச் சிதைய விடப்பட்டுள்ளன. சிலசமயங்களில் அவை, ஒரே வீச்சில் வெட்டிக் குறுக்கப்பட்டோ, கைவிடப் பட்டோ உள்ளன. இதன், இன்னொரு துணை விளைவே, தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் உரிமை மறுப்பும் என்பதை மறுக்கவியலாது. கடந்த நான்கு தசாப்தங்களாக, மூன்றாம் உலகில் அரசு, சமூகப் பொறுப்புகளைக் கைவிட்டு வருவது, சர்வதேச நிதி முகவர் நிறுவனங்களது நெருக்குவாரங்களால் ஆகும். அண்மைக் காலங்களில், இச் ‘சீர்திருத்தங்கள்’ ,‘மீள் கட்டமைத்தல்’ என்கிற பேர்களிலும், புதிதாக உருவாகி வந்த முதலாளி வர்க்கத்தில், சர்வதேச மூலதனத்துக்கு நெருக்கமான பகுதியினரது நெருக்குவாராங்களால் நடைபெறுகிறது. இதனால், சமூக நலவெட்டுகள் தனியார் துறைக்கும், முதலாளிகளுக்கும் வாய்ப்பான கொள்கைகள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதை, எதிர்த்த நாடுகள் மிகக்குறைவு. கியூபா போன்றும், அண்மைக் காலந் தொட்டு, வெனிசுவேலா போன்றும் விலக்கான சில நாடுகளைத் தவிர்த்தால், மூன்றாம் உலக நாடுகளின், சமூக பொருளியல் கொள்கைகளால், கல்வியிலும் மருத்துவத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட சமத்துவக் கொள்கை மிகவும் பாதிப்படைந்தது. அரசின் வகிபாகம் குறைக்கப்பட்டு, அரசு வலுவற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது, அதை எதிர்த்து நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் வலுவெதுவும் அரசின் கைகளில் இல்லை. அதேவேளை, அரசுகள் முதலாளித்துவ நலன்பேணும் அரசுகளாக உள்ளபோது, தொழிலாளர்களுக்கு வாய்ப்பான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடே இல்லாமல் போகிறது. இப்போது, வெனிசுவேலா மீதான சர்வதேச தொழில் தாபனத்தின் நடவடிக்கைகள், தொழிலாளர்கள் சார்ந்ததல்ல; மாறாக, முதலாளிகள் சார்ந்தது. சர்வதேச அமைப்புகள் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், அதன் நம்பகத்தன்மையை இழந்து காலம் பல சென்றுவிட்டன. ஆயினும், ஐ.நாவுக்கும் முந்தைய அமைப்பு என்ற ரீதியிலும், தொழிலாளர் உரிமைகளுக்கு முன்பு குரல்கொடுத்த அமைப்பு என்ற ரீதியிலும், சர்வதேச தொழில் தாபனத்துக்கு ஒரு நற்பெயர் இருந்தது. நவதாராளவாதத்தின் தாக்குதலுக்கும், பல்தேசியக் கம்பெனிகளின் முதலாளிகளின் இலாபவெறிக்கும் எதிராக நிற்கத் தவறியதன் ஊடும், அதனிலும் மேலாக, முதலாளிகளின் நலன்களுக்காகச் செயற்படத் தொடங்கியது முதல், இவ்வமைப்பு அதன் நோக்கத்தில் இருந்து காலாவதியாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)
Next post நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!!(அவ்வப்போது கிளாமர்)