பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை!!(கட்டுரை)

Read Time:13 Minute, 40 Second

குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது.

ஐ.தே.கவில் ஒரு பகுதியினரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிடப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணி, இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடைசியில், அந்த முயற்சி பிசுபிசுத்துப் போயுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக, அரச தரப்பில் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரைத் தவிர, வேறெவரையும் இழுக்க முடியாமல் போனது, ஒன்றிணைந்த எதிரணியின் முக்கியமான தோல்வி.

அரசாங்கத்தின் மீதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அரசதரப்பில் உள்ளவர்கள் கூட, ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். அல்லது வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, விஜேதாச ராஜபக்ஷ, பாலித ரங்க பண்டார, வசந்த சேனநாயக்க, அத்துரலியே ரத்தன தேரர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

அதைவிட, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிசாந்த முத்துஹெட்டிகமவும் காதர் மஸ்தானும் கூட, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வைத்து, பிரதமர் பதவியில் இருந்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக வைத்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டனர்.

அதற்கேற்றவாறு, நெருக்கடியும் கொடுத்துப் பார்த்தனர். ஆனால், ரணில் மசிந்து கொடுக்கவில்லை. தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்திருந்ததும், ஐ.தே.கவின் உள்வீட்டுப் பிரச்சினையைச் சமாளித்துக் கொண்டதும், அவருக்குத் தெம்பைக் கொடுத்தது.

அதனால், சுதந்திரக் கட்சி தரப்பில், ரணிலுக்கு எதிராகக் குரைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட, (கடிக்காமல்) ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்து, 122 வாக்குகள் ரணிலுக்குச் சாதகமாகக் கிடைத்திருக்கின்றன. எதிராக 76 வாக்குகள் தான் கிடைத்தன.

நடுநிலை வகித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 26 பேரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் கூட, வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ தாம் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். 54 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமது பலம், நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் 76 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், ஜே.வி.பியின் ஆறு உறுப்பினர்களின் வாக்குகளும் அதில் அடங்கியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைத்தான் ஜே.வி.பி எதிர்த்ததே தவிர, மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் ஆதரிக்கவில்லை.
விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால மோசடிகளையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

இப்போதும் கூட, ஒன்றிணைந்த எதிரணிக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில், இரகசியத் தொடர்புகள் இருப்பதாகவே ஜே.வி.பி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். எனவே, அவர்களையும் தனது அணிக்குள் சேர்த்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவைப் பரிதாபமாகத் தான் பார்க்க முடிகிறது. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று அவர் நிரூபிக்கப் பார்க்கிறார்.

ஜே.வி.பி விடயத்தில் மாத்திரமன்றி, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கூட, ஒன்றிணைந்த எதிரணியின் பக்கம் செல்லப் போகின்றனர் என்ற உறுதியில்லை.
பிரேரணையை ஆதரிக்கும் சுதந்திரக் கட்சியினர், அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐ.தே.க அமைச்சர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.

எனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களோ, தம்மை ஜனாதிபதியால் மாத்திரமே பதவி நீக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதிலிருந்து அவர்கள் பதவி விலகவோ, ஒன்றிணைந்த எதிரணியின் பக்கம் இணையவோ தயாராக இல்லை என்றே கணிக்க முடிகிறது. எனினும், அடுத்து வரும் நாட்களில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

கட்சியின் உள்ளகக் குழப்பங்களையும் சிறுபான்மைக் கட்சிகளின் நிபந்தனைகளையும் சமாளித்துக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்க இந்தச் சோதனையில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க, 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், இதுபோன்ற உள்ளக சோதனைகளையும் சவால்களையும் அவர் பல முறை சந்தித்திருக்கிறார். ஆனாலும், அவற்றைச் சாதுரியமாகச் சமாளித்துக் கொண்டு வருவதுதான் அவரது திறமை.

ரணில் விக்கிரமசிங்கவை ‘வலிய சீவன்’ என்று தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணத் தமிழில் குறிப்பிட்டிருந்தார். அது முற்றிலும் சரியானது என்பதை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உறுதி செய்திருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க இந்த வலிமையை, அவரது உறுதியான தலைமைத்துவத்தால் உறுதி செய்தாரா அல்லது, மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டித் தப்பிக்கும் விலாங்கு போன்று- நெகிழ்வுத்தன்மையான தலைமைத்துவத்தின் மூலம் உறுதி செய்தாரா என்ற கேள்வி இருக்கிறது.

இந்தநிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.சுதந்திரக் கட்சியின் எஞ்சியுள்ள உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் தொடருமா? அவ்வாறு தேசிய அரசாங்கம் தொடர்ந்தாலும் கூட, பிரச்சினைகளை அதனால் தீர்க்க முடியுமா என்ற கேள்விகள் உள்ளன.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் முக்கியமான நோக்கமே, தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. ஆனால், இந்தத் தேசிய அரசாங்கம் இதுவரையில், தமக்குள்ள பிரச்சினைகளின் பக்கமே கவனத்தைச் செலுத்தி வந்தது. இதனால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை மறந்து, எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை மறந்து விட்டுத் தான், இதுவரை பயணித்திருக்கிறது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, தேசிய அரசாங்கத்தின் கடப்பாடு மற்றும் மக்கள் ஆணையை மீளாய்வு செய்யும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.

இனிமேலாவது அந்தக் கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் நிறைவேற்றும், வகையில் செயற்பட வேண்டியது முக்கியம் என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வலியுறுத்தியிருக்கிறது.
ஆனாலும், தேசிய அரசாங்கத்துக்கான சவால்கள் இத்துடன் முடிந்து விட்டதாகக் கருதவோ, கடப்பாட்டை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கவே முடியாது.

ஏனென்றால், ஒன்றிணைந்த எதிரணி, தம்மை வாக்குகளால் மாத்திரமன்றி, நாடாளுமன்றத்திலும் பலத்தை அதிகரித்திருக்கிறது.

தேசிய அரசாங்கம் கொடுத்துள்ள முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அரசமைப்புத் திருத்தம், பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.

சிறப்பு உயர்நீதிமன்றங்களை அமைப்பதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கும் அது தேவைப்படும்.

அரசமைப்புத் திருத்தமும் பொறுப்புக்கூறல் பொறிமுறையும் முக்கியமான வாக்குறுதிகளாக இருக்கும் நிலையில், வெறுமனே, 122 வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தற்போதைய அரசாங்கத்தால் அதைச் சாதிக்க முடியாது.

வாக்கெடுப்பில் பங்கேற்காத 26 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாலும், மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்காது. எனவே, இந்தச் சவால்களை எதிர்கொள்வது, கடுமையான போராட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு இருக்கப் போகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், ஐ.தே.கவின் உள்ளக மறுசீரமைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயம் அமிலப் பரிசோதனையாகவே இருக்கும்.

உடனடிப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதுதான் அவரது முதலாவது தெரிவாக இருந்தது. ஆனால், இனிமேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுமையாக இருக்காது. சுமந்திரனின் நாடாளுமன்ற உரை, அதை உறுதி செய்திருக்கிறது.

கூட்டமைப்புக்கும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்தும் அவ்வளவு இலகுவாக தப்பிக்க முடியாது.
இந்தநிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து தப்பினாலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஞ்சிய பதவிக்காலம் என்பது, பஞ்சணையாக இருக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதால் கிழக்கு கவுட்டாவுக்கு திரும்பிய 40,000 மக்கள்!!(உலக செய்தி)
Next post விண்வெளியில் தேங்கியுள்ள 7500 டன் குப்பைகளை அகற்ற செயற்கைக்கோளை அனுப்பிய இங்கிலாந்து!!(உலக செய்தி)