பூக்களால் ஆன நகைகள்!!(மகளிர் பக்கம்)
இயற்கையின் பிரதிநிதியாக இருப்பது பூக்கள்தான். உலகெங்கும் பல கோடி வகை பூக்கள் உண்டு. பூக்கள் சூடிக்கொள்வதற்கு மட்டுமல்ல… அவற்றை வைத்து நகைகளும் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘பாகுபலி’ படத்தில் தமன்னா அணிந்திருக்கும் நகைகள் பூக்களால் செய்யப்பட்டவைதான். பொதுவாகவே திருமணங்களில் மணவிழா நடக்கும் இடத்தை வெகுவாக மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது என்னும் விஷயம் பழமையான பாரம்பரியத்தில் ஒன்று. ஆனால் இந்த நாட்களில், ஒரு திருமணத்தில் பூக்களின் பயன்பாடு வெறும் இடம் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல, சமீபத்தில் பூக்கள் இப்போது மணமகளின் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. அவைதான் மலர் நகைகள். தான் ஒப்பற்ற அழகி என்ற உணர்வை ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த மலர் நகைகள் மேலோங்கசெய்கிறது. இதுவே பல மணப்பெண்கள் தங்கள் திருமணத்தன்று தங்க ஆபரணங்களை விடுத்து மலர் நகைகளை அணிவதற்கு காரணமாக உள்ளது. சரி, நீங்களும் உங்கள் திருமண விழாக்களில் புத்துணர்ச்சியூட்டும் மலர் நகைகள் அணிய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இங்கு சில முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் மலர் நகைகள் பலவித பாணிகளில் வருகின்றன.
இயற்கையான பூக்களை வைத்தோ அல்லது செயற்கை பூக்களை வைத்தோ இந்த மலர் நகைகள் செய்யப்படுகிறது. நந்தியாவட்டம், பெங்களூர் ரோஜா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூர் ரோஜாவில் பல நிறங்கள் உள்ளதால் நாம் அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் மலர்களை வடிவமைக்கலாம். மேலும் பொக்கேவிற்கு உபயோகிக்கும் ஆர்கிட் மலர்களை வைத்தும் செய்யப்படுகின்றன மலர் நகைகள். இயற்கையான நிறங்களில் இருப்பதை விரும்புபவர்களும் உண்டு. பல வண்ணங்களில் கேட்பவர்களுக்கு செயற்கை நிறங்களை வைத்து கண்களை பறிக்கும் அளவிற்கும் செய்து தரப்படுகின்றன இந்த மலர் நகைகள்.
விரைவில் வாடிவிடும் காரணத்தினால் மல்லிகையின் பயன்பாடு குறைவே. வழக்கமான தொகுப்பாக நெத்திச்சுட்டி, தோடு, நெக்லெஸ், ஹாரம், ஒட்டியாணம், வங்கி, பிரேஸ்லெட், கொலுசு அதில்லாமல் சிகை அலங்காரத்திற்கு ராக்கொடை எனப்படும் வேணி, ஜடபிள்ளை எனப்படும் சுட்டி போன்றவையும் வருகிறது. இன்னும் வித்தியாசமாக இருக்க விரும்பினால், மலர்களால் ஆன துப்பட்டாவைக் கூட நாடலாம். மலர் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் மலர்களின் வகையை உங்கள் அலங்காரத்திற்கும் விருப்பத்திற்கும், உடையின் நிறத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக, மலர் நகைகளை தயாரிப்பதற்கு பூக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் பெரிய பூக்களை விட சிறிய பூக்களில் நகைகளை எளிதில் தயாரிக்கலாம். மலர்களால் செய்யப்படுவது எளிதில் வாடி விடுமே என்று வருத்தம் இருந்தால் முதலில் அவ்வருத்தத்தை விட்டுவிடுங்கள். ஏனென்றால் இந்த மலர் நகைகள் குளிரூட்டப்பட்டிருந்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும். இந்த மலர் நகைகள் செய்ய ஒருநாள் முழுவதும் தேவைப்படுகிறது. ஆதலால் உங்கள் ஆர்டரை முன்கூட்டியே கொடுத்துவிடுவது நல்லது. மேலும் சில மலர் நகை வடிவமைப்பாளர்கள் மணப்பெண்ணை அல்லது சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களின் நிறம், முக வடிவம், ஆடையின் வடிவம் என எல்லாவற்றையும் பரிசீலித்து சிறந்த ஒன்றை உருவாக்கி தருவார்கள். மேலும் நீங்கள் அளவீட்டு சோதனைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லாதவாறு ஃப்ரீ சைஸில்தான் செய்கிறார்கள்.
நம் இந்தியாவின் எல்லாப்பகுதியிலும் வெவ்வேறு முறையில் பாரம்பரியப்படி தான் அனைத்து சுப நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. ஆனால் நம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தை பின்தொடரும் வகையில் அவர்கள் எவ்வாறு திருமணத்தை ஒரு வாரம் நடத்துவார்களோ அதே போல் தற்போது இங்கும் சில திருமணங்களை நடத்த ஆரம்பித்து விட்டனர். வடமாநில நாடகங்களை தமிழில் டப் செய்யும் நம் தமிழ் தொலைக்காட்சிகளை பார்க்கும் நம் தமிழ் பெண்களும் தங்கள் திருமணம் இப்படியாகத்தான் நடக்க வேண்டும் என்ற கற்பனையையும் ஆசையையும் வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்ற பெற்றோர்களும் தயாராக இருக்கின்றனர். இதுகுறித்து மலர் நகை வடிவமைப்பாளர் புவனேஸ்வரி கூறுகையில், ‘‘நம் தமிழ் பெண்களிடத்தில் வடமாநில கலாச்சார மோகம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சில திருமண விழாக்களில் மெஹந்தி போடுவதற்கு ஒரு நாள் முழுக்க ஒதுக்குகிறார்கள். அந்த நிகழ்விற்காக மலர் நகைகள் அதிகம் வாங்கு கிறார்கள். திருமணம் தவிர வளைக்காப்பு, மாடலிங், பூப்புனித நீராட்டு விழா, போட்டோஷூட் போன்றவற்றிற்கும் அதிகம் மலர் நகைகள் செய்து தரச் சொல்லி ஆர்டர் வருகிறது.
வடமாநிலங்களில் நிகழ்வு நடக்கவுள்ளது என்று ஒரு வாரம் முன்கூட்டியே சொல்லி வெளிமாநிலங்களுக்கு வாங்கிச் செல்பவர்களும் உண்டு. மேலும் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லவோ அல்லது அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்கு செயற்கை மலர் நகைகள் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் கோட்டா ஜூவல்லரி (கண்ணாடி, வுல்லன் நூல், பட்டு ஜரிகை போன்றவற்றை வைத்து செய்யும் நகைகள்) போன்ற நகைகளையும் அதிகம் விரும்புகிறார்கள். இதுவும் வடமாநிலங்களில் தோன்றிய ஒன்றுதான். இதில் அதிகம் சிறு கண்ணாடிகள், நூல் போன்றவை வைத்து செய்யப்படுகிறது. இது மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தலாம். இது வடமாநிலத்தின் பழங்கால பாரம்பரிய நகை செய்யும் முறைதான். இப்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மெஹந்தி நிகழ்ச்சியின் இறுதியில் உறவினர்கள் அனைவருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுப்பது வழக்கம். அதற்காக மலர் நகை அல்லது கோட்டா நகைகள் செய்து தரச்சொல்லி வெகுவாக ஆர்டர் வருகின்றன. மலர் நகையில் பல வகை நெத்திச்சுட்டிகள் செய்து தருகிறோம். இதுமட்டுமின்றி சிகை அலங்காரத்திற்கு, அதாவது கொண்டை அல்லது ஃப்ரீ ஹேர் விட்டிருப்பவர்களுக்கு பக்கவாட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்படும் ப்ரோச், டையாரா போன்றவையும் செய்து தருகிறோம்” என்கிறார் புவனேஸ்வரி.
Average Rating