எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்….!!(கட்டுரை)
மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா… வவுனியா….” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது.
கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்றவர் முகங்களைப் பார்த்து, ஒரு மாதிரியாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறாகச் சொல்லியிருந்தார். அவர் குறிப்பிட்டது போல, யாழ்ப்பாணம் உண்மையிலேயே சுதந்திர நாடா? அல்லது அதற்காக ஏங்கித் தவிக்கும் நாடா என அந்த மண்ணில் வாழ்பவர்களால் மட்டுமே கூற முடியும்.
‘எண் சாண் உடம்புக்குத் தலையானது தலை’ ஆகும். அதுபோலவே, இலங்கை மாதாவுக்கும் தலை போன்றதே யாழ்ப்பாணம். ஆனால், அங்கே சுதந்திரம் என்பது, ஒரு ‘கனாக்காலம்’ எனக் குறிப்பிடும் அளவுக்கே நடப்பு நிகழ்வுகள் உள்ளன.
1981ஆம் ஆண்டில், கணிக்கப்பட்ட சனத்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தின் சனத்தொகை உயர்வாகக் காணப்பட்டது.
கல்வித் தரத்தில், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை எல்லாம் பின்தள்ளி, முன்னிலை வகித்தது. இலங்கையில் சிறந்த கல்வி முறைமை யாழ்ப்பாணத்திலேயே இருந்தது.
தற்போது, அந்த மாவட்டத்தின் கல்வியின் தரம் முழுமையாக இல்லாமல்ப் போய் உள்ளது. இவ்வாறாக, வடக்கு மாகாணத் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களுக்கு, கடந்த வாரம் நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில், நாட்டின் பிரதம மந்திரி, ரணில் விக்கிரமசிங்க ஞாபகப்படுத்திக் கூறியிருந்தார்.
வேளாண்மை, சுகாதார வைத்திய நன்னீர் மற்றும் நகரக் கட்டுமான வசதிகளில், மேம்பாடான நிலையில், யாழ்ப்பாணம் முன்னர் இருந்தது. பொருளாதாரச் சுட்டிகள் கூடப் உயர்நிலையிலேயே காணப்பட்டன. கலை, பண்பாடு, மனிதநேயம் மிகவும் இறுக்கமாகப் பேணப்பட்டு, கந்தபுராணக் கலாசாரம் நிலவும் பிரதேசமாக மிளிர்ந்தது.
ஆனால், இந்தச் சிறப்பான நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. மூன்று தசாப்தக் கொடிய போர், அனைத்தையும் அடியோடு கவிழ்த்துப் போட்டது. 1981இல் தமிழ் மக்களின் பொக்கிஷம் (யாழ். நூலகம்) எரிக்கப்பட்டது.
அத்துடன், 1983ஆம் ஆண்டு மூட்டப்பட்ட இனக் கலவரத்துடன் பல இலட்சம் யாழ்ப்பாணத்து மக்கள், ஐரோப்பிய நாடுகள் நோக்கி, வேரோடு புலம் பெயர்ந்து விட்டனர். அதாவது, மரத்தை வேருடன் பிடுங்கி எறிந்தது போல, தூர விலத்தி விட்டனர்.
புலம்பெயர்ந்தோரின் வாழ்வும் சாவும் அங்கேயே என ஆகி விட்டது. அத்துடன், திருமண பந்தம், பொருளாதார மேம்பாடு, உயர்கல்வி, உறவுகளுடன் இணைதல் எனப் பலர், பல வழிகளில், குடாநாட்டில் இருந்து, நாளாந்தம் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். இவ்வாறாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை, வற்றிக் கொண்டே செல்கின்றது.
இவ்விதமாகத் தமது தேசத்தை மறந்து அல்லது தமது தேசத்தில் வாழ இயலாது, பிறதேசம் நோக்கிப் படை எடுக்கும் கலாசாரத்துக்கு ஆயுதப் பிணக்கே, பிள்ளையார் சுழி இட்டது. இப்போது, தமிழ் மக்களின் புலம்பெயர்தல், தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக மாறி விட்டது; நிறுத்த இயலாத, இயல்பாகி விட்டது.
‘கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தோர் தம்முடனே கூடுதல் கோடி பெறும்’ என்பது ஒளவைப் பாட்டியின் பொன் மொழி. அதாவது, கோடி கொடுத்தாலும், உறவினரோடு கூடி வாழ்தலால் கிடைக்கும் இன்பம் கிடைக்காது. தற்போது, தமிழ் மக்களின் நிலையும், தம் உறவுகளைத் தொலைத்தும் அல்லது தொலைவில் விட்டும், கூடி வாழ முடியாமல், அல்லும் பகலும் பரிதவிக்கின்றனர்.
அடுத்து, மதுப்பிரியர்கள் அதிகமாக வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போதைப் பொருட்கள் கடத்தல் நடவடிக்கைகளில், யாழ்ப்பாணம் நுழைவாசலாகத் திகழ்கின்றது.
வேலையற்ற பட்டதாரிகள் அதிகமான இருக்கும் மாவட்டம், போர் மற்றும் பல்வேறு காரணங்களால் திருமணம் செய்யாது, முதிர் கன்னிகள் அதிகமாக வாழும் மாவட்டம், குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் மாவட்டம் போன்ற சமூகப் பிறழ்வுகளில் யாழ்ப்பாணம் முதல்நிலை வகிக்கின்றது.
வடக்கு மாகாணத்தில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெறும் மாவட்டம் யாழ்ப்பாணமாகும். தற்போது, முதியோர்கள் மட்டுமின்றி, நடுத்தர வயதினர் கூட, தனியே வீட்டில் வசிக்க முடியாத நிலையில், களவுகள், பணம் பொருளுக்காகக் கொலை செய்தல் சம்பவங்கள் தினசரி இடம்பெறுகின்றன.
வலிகாமம் வடக்கு மற்றும் இதர பகுதிகள் படையினரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்குண்டு உள்ளன. ஆதலால் கணிசமான மக்கள், இன்னமும் மீளக் குடியமர முடியாத கையறு நிலையில் வாழ்கின்றனர்.
போர்க் காலத்தில் அமைக்கப்பட்ட மண்அணைகள், வெடிபொருட்கள் போன்றவை துப்புரவு செய்யப்படாத பிரதேசங்கள் என, விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்கின்றனர்.
தமது வம்சத்தினால் பல நூறு ஆண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்டுவந்த, பல பொக்கிஷங்கள் (முதுசொம்) பெறுமதியான ஆவணங்கள், வீடுகள் எனப் பலவற்றை யுத்தத்தின் கோரப் பிடியில், பறிகொடுத்துப் பரிதவிப்போர் பலர் உள்ளனர்.
இவற்றை விட, யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கொலை செய்யப்பட்ட தம் உறவுகளை நினைத்து, தினசரி கண்ணீரில் நனைவோர் பல இலட்சம் பேர் உள்ளனர்.
முக்கியமாக, எதிர்காலச் சந்ததியான இளைஞர் சமூகம், சமூகத்தைப் பாதுகாக்க வேண்டியவர்கள், சமூகத்துக்கு வழி காட்ட வேண்டியவர்கள் வழிமாறிச் செல்கின்றனரோ என்ற ஏக்கத்துடனேயே முழுக் குடாநாட்டு மக்களும் வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில், ஏனையோருக்கு முன்மாதிரியாக வாழ்ந்த இளைஞர்கள், இன்று வாள் ஏந்தும் அசிங்கங்களாக மாற்றப்பட்டு உள்ளார்கள்.
தற்போது அங்கு உள்ளவர்களைக் கண்டு, “எப்படி இருக்கிறீங்கள்” எனச் சுகம் விசாரிப்பின், “ஏதோ இருக்கின்றோம்; வாழ்க்கை போகின்றது? ஏதோ தமிழர்களாகப் பிறந்திட்டோம் என்ன செய்கின்றது” என்று கூறுபவர்களே அதிகம் பேர் உள்ளனர்.
பொருளாதார வளங்கள் தொடர்பில் உயர்வாக இருப்போர் கூட, உள நலன் தொடர்பில் வறுமை நிலையிலேயே வாழ்கின்றனர். (இது வடக்கு, கிழக்கில் வசிக்கும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொருந்தும்)
“இலங்கையில், நான் யுத்தத்தை உருவாக்கவில்லை; மாறாக, யுத்தத்தை முடித்து வைத்தேன். யுத்தம் இருப்பதை விட, அதை முடிப்பது மேன்மையானது. புலிகள் இல்லாமல், நாடு ஒரு சிறந்த இடத்தில் இருக்கின்றது. இன்று, இலங்கை ஜனாதிபதியால் எங்கும் போய் வர முடிகின்றது” எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டு உள்ளார். ஜனாதிபதி சுதந்திரமாக யாழ்ப்பாணம் செல்கின்றார் எனின், ஜனாதிபதி சுதந்திரமாக உள்ளார் எனக் கூறலாம்.
அதற்காக, யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என எவ்வாறு கூறலாம்? புலிகள் இல்லாமையால் நாடு சிறப்பான இடத்தில் உள்ளதாகக் கூறலாம். மறுவளமாக, இந்த நாட்டின் ஆதிக்குடி மக்களாகிய தமிழ் மக்களும் தமிழ் மொழியும் சிறப்பான இடத்தில் உள்ளனர், உள்ளது எனக் கூறலாமா?
தமிழ் மக்களது மனக் காயங்களுக்கு மருந்து வழங்கப்பட்டதா? அல்லது அவர்களது மனம் மரத்துப் போய் உள்ளதையேனும் உணர முயற்சித்தார்களா? புலிகள் இல்லாத சூழலில், தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதற்கு ஏதேனும் ஆய்வு முடிவுகள் உள்ளனவா?
உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உயர்வான, உச்ச நிலையே ஆரோக்கியம் என, உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கின்றது. அந்த வகையில், வடக்கில் தமிழ் சமூகம், சுதந்திரமானதும் ஆரோக்கியமானதுமான சமூகமாக வாழ்கின்றதா? அல்லது அழுது கொண்டு வாழ்கின்றதா?
“நல்லா இருக்கின்றோம்; ஆனந்தமாக இருக்கின்றோம்; சுதந்திரமாக இருக்கின்றோம்” எனச் சொல்லக் கூடிய, வலுவான, உயர்நிலையில் யார் உள்ளனர்? இந்தப் பிறப்பு உரிமையை, யார் அங்கு அனுபவித்துக் கொண்டு வாழ்கின்றனர்?
இவ்வாறு, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், சுதந்திரமாகவும் உளஆரோக்கியத்துடனும் வாழ்கின்றார்களா? அல்லது எங்கே நிம்மதி அங்கே எமக்கோர் இடம்வேண்டும் என்று அலைகின்றார்களா?
Average Rating