“முஸ்லிம் ஒபாமா’ அட்டைப் படத்தை ஒன்றுபட்டு கண்டிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரதான போட்டியாளர்கள்
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் முஸ்லிம் போன்று உடையணிந்தும் அவரின் மனைவி பயங்கரவாதி போன்றும் காணப்படுவதாக சித்தரித்து சஞ்சிகையொன்று முன்பக்க அட்டைப் படத்தை பிரசுரித்திருப்பதை ஒபாமாவும் அவரின் அரசியல் எதிரியான குடியரசுக் கட்சி வேட்பாளர் மக்கெய்னும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கண்டித்துள்ளனர். “த நியூயோர்க்கர்’ சஞ்சிகையே ஜூலை மாத இதழில் இந்த அட்டைப் படத்தை பிரசுரித்திருக்கிறது. அத்துடன், ஒபாமாவும் பின்லேடனும் சுவரில் அமர்ந்திருக்கையில் அமெரிக்க கொடி எரிக்கப்படுவதாக சித்தரிக்கும் அச்சஞ்சிகை படமொன்றை வெளியிட்டிருக்கிறது. ஒபாமா கிறிஸ்தவராகும். ஆனால், அவரை முஸ்லிமாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்திருப்பதை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மட்டுமன்றி சஞ்சிகையின் வாசகர் மத்தியிலும் கண்டனத்திற்குள்ளாகியிருப்பதாக லண்டன் ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் மதம் மற்றும் தாய்நாட்டுப் பற்றுத் தொடர்பான இனந்தெரியாதோரால் பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக அவர் கடுமையாக போராட வேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்படுவது தொடர்பாக பதில் கருத்துகளை தெரிவிப்பதற்காக ஒபாமா இணையத்தளக் குழுவொன்றைக்கூட அமைத்துள்ளார். இதுவொரு கேலிச்சித்திரமென “த நியூயோர்க்கர்’ நினைக்கலாம். ஆனால், இது சுவையற்றதும் அவமதிப்புக்குள்ளாக்குவதுமான விடயமென அநேகமான வாசகர்கள் நோக்குகின்றனர் என்று ஒபாமாவின் பேச்சாளர் பில் பேர்ட்ரன் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்கள் மூலம் அறிந்துகொண்ட ஒபாமா இதற்கு தான் பதில் எதுவும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்னின் பேச்சாளர் ரக்கர் பவுண்ட்ஸும் ஒபாமாவின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அட்டைப்பட விவகாரம் பொருளற்றதும் நிந்தனை செய்வதுமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவும் மனைவியும் கை முஷ்டியை உயர்த்திப்பிடித்து பகிரங்கமாக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பது போன்று இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. பாறி பிலிற் என்பவர் இதனை வரைந்துள்ளார்.
ஆனால், இந்த அட்டைப்படமானது ஒபாமா தொடர்பான அற்புதமான பிரதிமைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர்களைப் பற்றி திரித்துக்கூறப்படுவதை சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் கேலிச்சித்திரம் காணப்படுவதாகவும் த நியோர்க்கர் சஞ்சிகையின் ஆசிரியர் டேவிட் ரெம்னிக் கூறியுள்ளார்.
எரியும் கொடி தேசியவாதி அடிப்படைவாதி, முஸ்லிம் போன்ற தோற்றம், முஷ்டியை உயர்த்துதல், சுவரிலுள்ள உருவச்சித்திரம் என்பன ஒன்றையொன்று தாக்குவதாகவே காணப்படுகின்றன. நாங்கள் செய்திருப்பதன் ஒரு பகுதியாக நகைச்சுவையுணர்வு உள்ளது. அத்துடன், விடயங்களை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்பதும் தப்பிப்பிராயம், வெறுப்பு பிரயோசனமற்ற, விடயம் என்பதற்கான கண்ணாடியாக இது காணப்படுகின்றது என்பதும் இதன் அர்த்தமாகும். அதுவே இந்த அட்டைப் படத்தின் உட்கருப்பொருள் என்று ஆசிரியர் விபரித்திருக்கிறார்.
ஒபாமாவை முஸ்லிம் என்றோ அல்லது இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகளை கொண்டவரென்றோ ஏதாவது தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அவை தொடர்பாக அவரின் உதவியாளர்கள் கடும் விசனமடைகின்றனர்.
Average Rating