கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா? அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் : சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தது வடகொரியா!!
அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளது உலக தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சமாதான நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக அழிக்கு அணு ஆயுத பட்டன் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறது என்றது வடகொரியா. வடகொரியாவை கூண்டோடு அழிக்கும் பெரிய பட்டன் தமது கையிலேயே உள்ளது என்று பதில் குரல் எழுப்பியது அமெரிக்கா. ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா – அமெரிக்கா இடையே நடந்த இந்த வார்த்தை போரால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் கொழுந்து விட்டு எரிந்தது.
கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-ம் ஆண்டில் நடந்த போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. தென்கொரியா அமெரிக்கா ஆதரவு நாடானது. வடகொரியாவை சீனா ஆதரித்தது. இதனால் அப்போது முதலே அமெரிக்கா மீது வடகொரியாவுக்கு தீராத பகைமை. கிழக்கு ஆசியாவில் அணு ஆயுதங்களை நிறுத்தியுள்ள அமெரிக்காவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அணு ஆயுதம் தயாரிப்பது தங்கள் உரிமை என்று வடகொரியா கொக்கரிக்க ஆரம்பித்தது. வழக்கம் போலவே கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்கிறேன் என்று அமெரிக்காவும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிக் கொண்டே வந்தது.
2011-ம் ஆண்டில் கிம் ஜாங் உன் அதிபர் பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஏறத்தாழ 85 ஏவுகனை சோதனைகளும், 4 அணு ஆயுத சோதனைகளையும் வடகொரிய முன்னெடுத்துள்ளது. இதனால் வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்க உலக நாடுகள் சீனாவை வற்புறுத்தின. 2016-ம் ஆண்டில் ஜி-20 மாநாடு சீனாவில் நடந்து கொண்டிருந்த போதே வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தி யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்று கொக்கரித்தது. இதனால் 60 ஆண்டு கூட்டாளியான வடகொரியாவை கைவிட்டது சினா. மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதரவும் அளித்தது.
அடுத்தடுத்த பொருளாதார தடைகளால் தள்ளாடிய கிம் ஜாங் உன் போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அண்மையில் தெரிவித்தார். அதோடு நில்லாமல் தமது சகோதரி கிம் ஜாங் உன் தலைமையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கும் வீரர்களை அனுப்பி வைத்தார். பதிலுக்கு தமழது இசைக்குழுவை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்து நேசக்கரம் நீட்டியது தென்கொரியா. இதன் அடுத்த கட்டமாக அடுத்த மாதம் 27-ம் தேதி தென்கொரிய அதிபரையும், மே மாதம் அமெரிக்க அதிபர் டிரம்பையும் சந்தித்து பேச கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளார்.
இந்த சூழலில் கிம் ஜாங் உன் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டது சர்வதேச அரங்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபரின் இந்த திடீர் சமாதான நடவடிக்கைகள் உண்மையிலேயே பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே. தற்போது அணு ஆயுத திட்டங்களை கைவிட வடகொரியா உறுதியளித்திருப்பதாக சீனா கூறினாலும் வடகொரிய அரசு ஊடகங்கள் இது போல் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே வடகொரிய அதிபரின் சீன பயணம் சமாதானத்திற்கான தொடக்கமா? அல்லது அடுத்த அதிரடிக்கான தொடக்கப்புள்ளியா? என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
Average Rating